ஹலோ With காம்கேர் -248: வாழ்க்கையில் ஜெயிக்க உதவும் டிகாஷன் காபி!

ஹலோ with காம்கேர் – 248
September 4, 2020

கேள்வி:  குடிப்பதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் ஜெயிக்கவும் டிகாஷன் காபி உதவும். எப்படி தெரியுமா?

என் அப்பா சமையலில் திறமைசாலி என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அதைவிட சமையல் செய்யும் சமையல் அறையை சுத்தமாக வைத்துக்கொள்வதில் வல்லவர். விருந்துக்கே சமைத்தாலும் சமைத்த சுவடே இல்லாமல் சமையல் அறை அத்தனை சுத்தமாக பளிச்சிடும்.

அப்பாவின் சமையலுக்கு எங்கள் குடும்பத்தில் ரசிகர்கள் அதிகம். ஏதேனும் காரணம் காட்டி விருந்தினர்களை சாப்பிட அழைக்க ஏற்பாடு செய்வார்.

விருந்துக்கு வருபவர்களுக்கு முதலில் கொடுப்பது டிகாஷன் காபிதான். அந்த காபியை கூட அத்தனை நேர்த்தியாக தயாரிப்பார். விடுமுறை தினங்களில் பயணங்கள் உண்டு. என் சகோதரி சகோதரன் குடும்பத்துடன் சென்னை வரும்போதும் தவறாமல் ஏதேனும் வெளியூர் பயணங்கள் இருக்கும்.

பயணங்களில் தவறாமல் இடம்பிடிப்பது ஃப்ளாஸ்கில் காபி. டிகாஷன் காபி கலந்து ப்ளாஸ்கில் எடுத்துக்கொண்டு நடுநடுவே காரை நிறுத்தி டிபனுடன் காபி சாப்பிடுவது மிக சுவாரஸ்யம்.

இந்த கொரோனா கால கெடுபிடியில் நாங்கள் அதிகம் மிஸ் செய்வது பிளாஸ்க் காபியுடனான வெளியூர் பிரயாணங்களைத்தான்.

எங்களுக்கு காபி பிடிக்கும்தான். ஆனால் எந்த காபியை வேண்டுமானாலும் குடிக்கும் பழக்கம் இருந்ததில்லை. எங்கள் வீட்டில் நாங்கள் போடும் டிகாஷன் காபி மட்டுமே விரும்பி சாப்பிடுவோம்.

அப்படி என்ன நுணுக்கம் டிகாக்க்ஷன் போடுவதில் என உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. சொல்கிறேன்.

தேவையான காபி பொடியை ஈரமில்லாத ஃபில்டரில் போட்டு பொடி நனையும் அளவுக்கு மட்டும் வெந்நீர் விட வேண்டும். இப்போது டிகாஷன் இறங்காது. வெந்நீரில் பொடி நன்றாக ஊறும். இதுபோல இரண்டு மூன்று முறை கொஞ்சம் கொஞ்சமாக பொடியின் அளவுக்கு மட்டும் வெந்நீரை ஊற்றி பொடியை ஊற வைக்க வேண்டும். பின்னர் பொடியின் அளவைவிட சற்று அதிகமாக வெந்நீரை ஊற்றினால் டிகாஷன் மெல்ல இறங்க ஆரம்பிக்கும். தேவைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று முறை வெந்நீர் விடலாம். இப்படிச் செய்தால் நல்ல வாசனையுடன் திக்காக இறங்கும்.

இப்படிச் செய்யாமல் காபி பொடியை போட்டு முதலிலேயே ஃபில்டர் முழுவதும் வெந்நீர் ஊற்றினால் டிகாஷன் ஒரு சில நொடிகளில் சரசரவென்று தண்ணீராக இறங்கிவிடும். சுவையும் இருக்காது.

வெறும் டிகாஷன் பற்றி பேசிக்கொண்டிருந்தால் எப்படி ஜீவனம் செய்வது?

சுவையான டிகாக்க்ஷன் போடுவதற்கே இத்தனை பொறுமையும், நுணுக்கமும் தேவைப்படும்போது வாழ்க்கையில் ஜெயிக்க எத்தனை பொறுமையும் நிதானமும் தேவைப்படும்.

வாழ்க்கையில் நாம் ஏதேனும் ஒரு துறையில் சாதிக்கவும் இந்த டிகாஷன் டெக்னிக் உதவும். முதலில் நாம் எடுத்துக்கொண்ட துறை  நம் திறமையுடன் ஒத்திருக்கிறதா என கவனிக்க வேண்டும். அடுத்து அந்தத் துறை சார்ந்த விஷயங்களை சேகரித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் துறைக்கான தொழில்நுட்ப விவரங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி மெல்ல மெல்ல தேர்ந்தெடுத்தத்துறையில் காலடி எடுத்து வைக்கும்போது அந்தத் துறையில் வெற்றி தானாகவே கிடைக்க ஆரம்பிக்கும்.

அதைவிட்டு மனதளவில் எதற்குமே தயாராகாமல் நேரடியாக ஒரு துறையில் இறங்கினால் அது தண்ணீர் டிகாஷன் போல்தான் சுவையில்லாமல் இருக்கும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 32 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon