ஹலோ With காம்கேர் -250: ஓவியங்களை வாசிக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 250
September 6, 2020

கேள்வி:  ஓவியங்களையும் வாசிக்க முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பொதுவாக புத்தகங்களை வாசிக்கும்போது எழுத்துடன் சேர்த்து  ஓவியம், புகைப்படம், லேஅவுட், கலர் கான்செப்ட், ஆடியோ வீடியோ, பிரிண்டிங்  அத்தனையையும் சேர்த்தே வாசிப்பேன்.

ஓவியத்தைக் கூட வாசிப்பீர்களா என ஆச்சர்யப்படுகிறீர்களா?

ஓவியத்தை ரசிக்கும்போது, ஆடியோவை கேட்கும்போது, வீடியோவை பார்க்கும்போது இப்படி எதுவாக இருந்தாலும் நம் மனது அவற்றை வாசித்து உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்க வேண்டும். வாசிப்பின் முக்திநிலை அதுவாகத்தான் இருக்கும்.

நான் எழுதி முடித்த ஒரு வாழ்வியல் புத்தகத்தின் சில அத்தியாயங்களுக்கு  புதிதாக ஓவியங்களை வரைந்தும், ஏற்கெனவே அனிமேஷன் படைப்புகளுக்காக வரைந்திருந்த ஓவியங்களில் பொருத்தமானதை தேர்ந்தெடுத்தும் தயார் செய்துகொண்டிருந்தபோது என் கிளையிண்ட் ஒருவர் தன் மகள் வரைந்திருந்த ஓவியங்களை வாட்ஸ் அப்பில் ஷேர் செய்திருந்தார். அவருடைய மகள் என்ன படிக்கிறாள் என்று  எனக்குத் தெரியாது.

அவற்றைப் பார்த்த போது எனக்குள் பலவிதமான சிந்தனைகள் ஓடியது.

ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதையை சொன்னது. கதைகளைப் படிக்கும்போது ஓவியங்கள் பேசுவதைப் போல, ஓவியங்களைப் படிக்கும் போது அதன் பின்னணி பேச வேண்டும். அத்தனை ஈர்ப்பாக உயிரோட்டமாக இருப்பதே ஓவியங்கள்.

அந்த ஓவியங்களை வைத்து அந்த பெண்ணின் வயதையும், மனதையும் படித்தேன். ஓவியங்கள் அவள் வயதைச் சொன்னது. 17,18 வயதிருக்கலாம் என கணித்தேன்.

முதல் ஓவியம் எந்த கவலையும் இல்லாமல் சுதந்திரமாக வளைய வரும் துறுதுறு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை சொன்னது.

இரண்டாவது ஓவியம் வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற லட்சியப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை காட்டியது.

மூன்றாவது ஓவியம் அவள் தனிமை விரும்பியாக இருக்க வேண்டும் என பட்டவர்த்தனமாகவே சொன்னது. காரணம் ‘Me alone in the beautiful world’ என்ற வாசகம்.

நான்காவது ஓவியம் இயற்கையை காதலிக்கும் மனதுடையவளாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது.

உடனே அவருக்கு போன் செய்து பேசினேன். நான் கணித்தவற்றை அவரிடம் கேட்டறிந்தேன்.

நான் கணித்தவை நூற்றுக்கு நூறு சரியாகவே இருந்தது. அவர் மகளுக்கு வாழ்த்துச் சொல்லி போனை வைத்தேன்.

அவள் பெயரை மட்டும் கணிக்க முடியவில்லை. கேட்டறிந்தேன். அஸ்வினி கண்ணம்மா, வரைந்த ஓவியங்களைத்தான் இன்று பகிர்ந்துள்ளேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 289 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari