ஹலோ with காம்கேர் – 267 (1)
September 23, 2020
கேள்வி: எல்லா இடங்களிலும் மனிதாபிமானத்துடன் கருணையுடன் செயல்பட முடியுமா?
நேற்று மருந்து வாங்கவும், ஆவி பிடிக்கும் சாதனம் வாங்கவும் மருந்தகம் செல்ல வேண்டி இருந்தது.
வழக்கமாக நாங்கள் வாங்கும் மருந்துக்கடைக்கு சென்றிருந்தோம். ஆவி பிடிக்கும் சாதனம் வாங்கிக்கொண்டோம்.
‘இதற்கான டேப்லெட் வேண்டுமா?’ என்றார் விற்பனையில் இருந்தவர்.
நான் பொதுவாக துளசி, வேப்பிலை, கற்பூரவள்ளி என இலைகளைப் போட்டோ அல்லது விக்ஸ் போட்டோதான் பயன்படுத்துவேன் என்றாலும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெரிந்துகொள்ள ‘அது என்ன ஆவி பிடிப்பதற்கான டேப்லெட்?’ என்றேன் தெரியாததைப் போலவே.
‘ஆவிபிடிக்கும்போது ஒரு மாத்திரை போட்டு ஆவி பிடிப்பார்கள். நல்ல ரிலீஃப் இருக்கும்…’ என்றார்.
‘அப்படியா, அது போடாமல் ஆவி பிடிக்கக் கூடாதா?’ என்றேன் (வேண்டும் என்றே).
‘அப்படி இல்லை மேடம், நீங்கள் வெறும் பைப் தண்ணீரில் கூட ஆவி பிடிக்கலாம்…’ என்றவர் தொடர்ச்சியாக ‘உங்கள் பேஸ்ட்டில் உப்பிருக்கா? என்ற தொணியில் ‘உங்க வீட்ல துளசி, கற்பூரவள்ளி செடிகள் இருக்கா?’ என்றார்.
‘ம்… இருக்கு…’ என்றேன்.
‘அப்போ அதில் சில இலைகளைப் பறித்துப் போட்டு ஆவி பிடிக்கலாம்… சிலர் வேப்பிலை கூட போட்டுப் பயன்படுத்துகிறார்கள்…’ என்று நேர்மையான விளக்கம் கொடுத்தார்.
அவர் சொன்ன டேப்லெட்டை விற்பனை செய்தால் அவருக்கு வியாபாரம். ஆனால் அப்படி செய்யாமல் நேர்மையாக மற்றொரு வழியையும் சொன்ன அந்த கடைக்காரர் செயல் ஆச்சர்யமாக இருந்தது.
என் ஆச்சர்யத்தை அவரிடமே சொல்லி அவரையும் உற்சாகப்படுத்திவிட்டு, அந்தக் கடையில் அப்பா அம்மாவுக்கு வழக்கமாக வாங்கும் மருந்தில் ஒன்று அங்கு ஸ்டாக் இல்லை என்பதால் நானும் அப்பாவும் அருகிலேயே இருந்த ஒரு ‘சிறிய’ மருந்தகம் சென்றோம்.
மருந்தை வாங்கிக்கொண்டதும் 55 ரூபாய் மருந்துக்கு 100 ரூபாய் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோம்.
‘5 ரூபாய் இருக்குமா?’ என்றார் கடைக்காரர்.
’இல்லையே..’ என்றோம்.
‘சரி அப்போ ஐம்பது ரூபாயாவது இருக்குமா?’ என்றார்.
கொடுத்தோம். அவரிடம் கொடுத்த 100 ரூபாயை திரும்பக் கொடுத்தார் மருந்தோடு.
‘ஐந்து ரூபாய் இல்லையே?’ என்றோம்.
‘பரவாயில்லை அப்பா… மருந்தை தவறாம நேரத்துக்கு சப்பிடுங்க…’ என்றார் பரபரப்பான வேலையின் ஊடே.
ஒரு ரூபாய் என்றால் கூட கணக்குப் பார்க்கும் இந்த நாட்களில் இப்படி செயல்படும் கடைக்காரரை ஆச்சர்யமாக பார்த்தேன். மேலும், அவர் என் அப்பாவை ‘அப்பா…’ என்று வேறு அன்புடன் அழைத்து கனிவுடன் மருந்தை சாப்பிடச் சொன்ன அவரது பாங்கு வியக்க வைத்தது.
மருந்தகத்தில் அவருடன் அவர் அப்பாவும் இருந்தார். அவர் அந்தக் கடையில் வேலை செய்பவராக இருந்திருந்தால் இதுபோல செயல்பட முடியுமா என்பது சந்தேகமே. கடை முதலாளிக்கு ஐந்து ரூபாய்க்கு கணக்குக் காட்ட வேண்டி இருக்குமே?
முதல் நிகழ்வில் சொல்லியிருந்த பல கிளைகள் கொண்ட மருந்தகத்தில் ஆகட்டும், இரண்டாவது நிகழ்வில் சொல்லியிருந்த சிறிய மருந்தகத்தில் ஆகட்டும் அவரவர்களின் எல்லைக்கு உட்பட்ட அளவுக்கு அவர்களின் கருணையையும் நேர்மையையும் வெளிப்படுத்தினார்கள்.
மனதிருந்தால் மார்க்கமுண்டு. நம்மால் முடியக் கூடிய இடத்தில் நம்மால் முடியக் கூடிய அளவுக்கு நம் மனிதாபிமானத்தையும் கருணையையும் வெளிப்படுத்த ஆயிரம் வழிகள் உள்ளன.
நம் மனம் விழிப்புடன் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software