ஹலோ with காம்கேர் – 267 (2)
September 23, 2020
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்!
- பாரபட்சமே கிடையாது!
என் பதிவுகளைப் படிக்கின்ற வாசகர்களில் ஆண் பெண் வித்தியாசமின்றி, வயது வித்தியாசமின்றி அவர்கள் வகிக்கும் / வகித்த பதவியின் காரணாமாகவோ எந்த வித உயர்வு தாழ்வுமின்றி அனைவருக்கும் ஒன்றுபோலவே மரியாதை கொடுத்து வருகிறேன்.
அதை என் பதிவின் தொடர் வாசகர்களாகிய நீங்கள் அனைவருமே நன்கறிவீர்கள்.
- சிறு பிள்ளைகளின் மனநிலை!
ஒருசிலர் தனித்தகவலில் ‘நீங்கள் சிலரின் பின்னூட்டங்களுக்கு மட்டும் விரிவாக பதில் கொடுக்கிறீர்கள்… எனக்கு மட்டும் நன்றியைத் தவிர வேறெதுவும் சொல்வதில்லையே’ என ஒன்றாம் வகுப்பு மாணவர்களது மனநிலையில் கேள்வி கேட்கிறார்கள்.
அவர்களுக்கான பதிலை பொதுவில் பகிர்கிறேன். எல்லோருமே தெரிந்துகொள்ளுங்களேன்.
பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கும் விதங்கள்!
நான் தினமும் விடியற்காலையில் பதிவிட்டு வரும் ‘ஹலோ வித் காம்கேர்’ பதிவில் பின்னூட்டமிடும் அனைவருக்கும் ‘பாரபட்சமின்றி’ பதில் அளித்துவிடுவதை படிப்பவர்களும், பின்னூட்டமிடுபவர்களுக்கும் கொடுக்கும் மரியாதையாக கருதுகிறேன்.
பின்னூட்டத்துக்கு பதில் கொடுப்பதில் மூன்று முறைகளை கடைபிடிக்கிறேன்.
ஒன்று… சுருக்கமான பதில்!
பாராட்டி இருந்தால் ‘நன்றி, மிக்க நன்றி, அன்புக்கு நன்றி’ என்பது போன்ற அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள் அல்லது அது தொடர்பான ஸ்மைலிகள்.
சிறு குழந்தைகள் படம் வரைவதாக சொல்லி கிறுக்கும் கிறுக்கல்கள் கூட ஆகச் சிறந்த ஓவியமாக தெரியும் பெற்றோர்களுக்கு.
அதுபோலதான் என் பதிவைப் பாராட்டும் அன்பர்களது எழுத்தில் உள்ள இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை இருந்தால் கண்டுகொள்வதில்லை. ஏன் கோர்வையாக சொல்லத் தெரியாவிட்டால் கூட கண்டுகொள்வதில்லை. கஷ்டப்பட்டு என்ன சொல்ல வருகிறார் என புரிந்துகொள்ளவே முயற்சிக்கிறேன்.
நன்றி சொல்லி அவர்களுக்கு மதிப்பளிக்கிறேன்.
இரண்டாவது… விரிவான பதில்!
மனதுக்குள் அன்பிருக்கும்… ஆனால் அதை வெளிப்படுத்த தெரியாமலோ அல்லது தாங்கள் என்ன புரிந்து வைத்திருக்கிறார்களோ அந்தப் புரிதலுடன் வெளிப்படுத்தி இருக்கும் பின்னூட்டங்களுக்கு உடனடியாக பதில் கொடுத்துவிடுவேன், கொஞ்சம் விரிவாகவே.
ஏன் அவர்களுக்கு மட்டும் விரிவான பதில்?
ஏனெனில் என் பதிவைப் படிக்க வருபவர்கள் பின்னூட்டங்களையும் சேர்த்தே படிப்பார்கள்.
அந்த நேரத்தில் புரிதல் இல்லாமல் பின்னூட்டமிட்டவரது கருத்துக்களை படிப்பவர்கள் அதை வைத்து என் பதிவின் சாராம்சத்தை உள்வாங்கிக்கொண்டுவிடக் கூடாது என்கின்ற ஜாக்கிரதை உணர்வே அதற்குக் காரணம்.
மூன்றாவது…
வேண்டுமென்றே என் எழுத்தின் மீதும் என் தொடர்ச்சியான செயல்பாடுகள் மீதும் எரிச்சல் கொண்டு அதற்கு எதிர்வினையாற்றும் பின்னூட்டங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் நீக்குகிறேன்.
சம்மந்தப்பட்டவர் புரிந்துகொண்டு அடுத்தடுத்த நாட்களில் மாறினால் அவர் நட்பு தொடரும். இல்லை என்றால் ப்ளாக் அல்லது அன் ஃபிரண்ட் செய்துவிட்டு கடந்துவிடுகிறேன்.
- ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்!
நான் ஃபேஸ்புக்கில் பணி புரியவில்லை. என் நிறுவனம் காம்கேர். ஒரு நிறுவனத்தை தலைமைத்தாங்கி நடத்தி வருவதில் உள்ள சிரமங்களையும், சாதனைகளையும் எழுத்தில் ஒருநாள் பதிவில் வடித்துவிட முடியாது.
அதில் எனக்குக் கிடைக்கும் அனுபவங்களை மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தினமும் பதிவிட்டு வருகிறேன். அவ்வளவுதான்.
அதுபோல நான் ஃபேஸ்புக் எழுத்தாளரும் அல்ல. என் 10 வயதில் இருந்து தொடர்ச்சியாக (Almost Daily) எழுதி வருகிறேன். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் ஃபேஸ்புக், டிவிட்டர், ப்ளாக், வெப்சைட் என பரவலாக வெளியில் தெரிகிறது அவ்வளவுதான்.
என் அனிமேஷன் படைப்புகளிலோ, ஆவணப்படங்களிலோ, புத்தகங்களிலோ இடம் பெறும் விஷயங்களே இங்கு ‘ஹலோ வித் காம்கேர்’ பதிவாக வெளிவருகின்றன!
புரிந்துகொண்டு செயல்பட்டு வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software