ஹலோ With காம்கேர் -268 : ‘If anything is free, you are the product’

ஹலோ with காம்கேர் – 268
September 24, 2020

கேள்வி: ‘If anything is free, you are the product’ – கவனமாக இருப்பது எப்படி?

ஃபேஸ்புக்கில் # singlechallenge, # couplechallenge என பல்வேறு ஹேஷ் டேகுகள் பிரபலமாகி வருகின்றன. ஒரு ஹேஷ் டேகில் நம் ஒட்டுமொத்த விவரங்களையும் யாருக்கோ தாரை வார்த்துக்கொடுக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு புகைப்படங்களை ஹேஷ் டேக் செய்யுங்கள்.

சமீபத்தில் கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க  கொசு விரட்டி சாதனம் ஒன்று வாங்கினோம். அது கொசுக்களை கொல்வதற்கு மருந்து எதையும் பயன்படுத்துவதில்லை, கொசுக்களை வலிய சென்று இழுத்து சாகடிக்கவும் செய்யாது.

அந்த சாதனத்தின் மேல்பக்கத்தில் சத்தமே இல்லாமல் சுழலும் ஒரு சிறிய மின்விசிறியும், நீல கலரில் எறியும் விளக்கும் இருக்கும். அந்த சாதனத்தை பவர் போர்டில் பிளக் செய்வுடன் மேல்பக்கம் உள்ள நீலகலர் விளக்கு எறியத் தொடங்கும். மின்விசிறியும் சுழல ஆரம்பிக்கும்.

அந்த நீல கலரினால் ஈர்க்கப்பட்டு அதனருகில் வரும் கொசுக்களை அதில் சுழலும் மின்விசிறி உள்ளிழுத்து அந்த சாதனத்தின் கீழ்ப்பக்கம் உள்ள பாக்ஸுக்குக் கொண்டு செல்லும். அது அங்கிருந்து வெளியே வர முடியாமல் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் இறந்துவிடும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த பாக்ஸை திறந்து இறந்த கொசுக்களை குப்பையில் எறிந்துவிடலாம்.

இந்த சாதனம் என்ன செய்கிறது என கவனியுங்கள். தன் தலையில் ஒளிரும் நீல கலர் விளக்கினால் ஈர்க்கப்பட்டு தன்னருகில் வந்து தானாகவே மாட்டிக்கொள்ளும் கொசுக்களை மட்டும்தான் அது கொல்கிறது.

அந்த சாதனத்தில் 10 கொசுக்கள் ஒரு நாளில் இறந்து கிடந்தால், நம் வீட்டில் 30 கொசுக்கள் உயிருடன் ஜாலியாக உலாவிக்கொண்டிருக்கும்.

இதே லாஜிக்தான் சமூக வலைதளங்களிலும் நடந்துகொண்டிருக்கின்றன. நம்மைப் பற்றிய தகவல்களை நாமே வலிய சென்று தாரை வார்க்கிறோம் அதனால் வரும் சாதக பாதகங்களை முழுமையாக அறியாமல்.

நீங்கள் முற்பிறவியில் என்னவாக இருந்தீர்கள், அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறக்கப் போகிறீர்கள், உங்களை மறைமுகமாக காதலிப்பவர் யார், உங்களை அதிகம் நேசிக்கும் நண்பர் யார், நீங்கள் பிறக்கும்போது கடவுள் என்ன வாழ்த்துச் சொல்லி அனுப்பி இருப்பார்… இது போன்ற கேள்விகளால் நம் ஆர்வத்தைத் தூண்டில் போட்டு இழுக்கும் ஆப்கள் பரவலாகக் கொட்டிக் கிடக்கின்றன. இதற்கு Third Party Apps என்று பெயர்.

இவை பெரும்பாலும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் வடிவமைக்கப்படுவதில்லை. இதை தயாரிப்பதற்கென்றே நிறுவனங்கள் உள்ளன. அவை ஃபேஸ்புக்கில் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.

மீடியாக்களில் வெளிவரும் விளம்பரங்களுக்கு சம்மந்தப்பட்ட மீடியாக்கள் பொறுபேற்பதில்லையே, பொறுப்பு துறப்பு செய்துவிடுகின்றன அல்லவா? அதுபோல்தான் சமூக வலைதளங்களில் வெளிவரும் இதுபோன்ற ஆப்களும்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த ஆப்களை கிளிக் செய்து அவற்றில் நுழைந்து நம்மை அறியாமலேயே நம் ஃபேஸ்புக் விவரங்களை அந்த நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக்கொடுக்கிறோம். நம்மிடம் அனுமதி வாங்கிய பின்னரே அந்த ஆப்கள் செயல்பட ஆரம்பிக்கும். நாமே அனுமதி கொடுத்துவிட்டு ‘ஆச்சா போச்சா எப்படி என் தகவல்களை நீங்கள் பார்க்கலாம்?’ என பதறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.

உதாரணத்துக்கு என் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் ஒரு ஆப்பை கிளிக் செய்தவுடன் ‘Continue as Compcare Bhuavneswari’ என்ற பட்டன் வெளிப்படும். இதில் என் பெயர் இருப்பதைப் போல நீங்கள் அந்த ஆப்பைப் பயன்படுத்தும்போது  உங்கள் பெயர் வெளிப்படும். அதை கிளிக் செய்தால் உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை அந்த ஆப் எடுத்துக்கொள்ளும்.

ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் தகவல்கள், நட்பு வட்டம் மற்றும் நம் பர்சனல் விவரங்களை வைத்துதான் அவை ஆராய்ந்து கவர்ச்சியான பதிலை வெளிப்படுத்தும்.

வானத்து நிலவு நாம் செல்லும் இடமெங்கும் நம்முடன் வருவது போல தோன்றுவதைப் போல, அந்த ஆப்கள் கொடுக்கும் ரிசல்ட் நம் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக  தயாரிக்கப்பட்டதைப் போல மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால் நமக்கு வந்ததைப் போன்ற ரிசல்ட் வேறு சிலருக்கும் வந்திருக்கும். ஏனெனில் அவை பொதுவாக தயாரிக்கப்பட்ட விவரங்கள். நம் ஃபேஸ்புக் தகவல்களுக்கு ஒத்துவரும் விவரங்களை வைத்து ரிசல்டை கொடுக்கும். அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட Third Party ஆப்ஸ் மூலமும்,  வியாபாரத்துக்காகவும் நாம் கொடுக்கின்ற விளம்பரம் மூலமாகவும் தகவல்கள் கசிய வாய்ப்புண்டு.

இப்போது புது ட்ரெண்ட்டாக ‘ஹேஷ் டேக்’. ஆப்களைக் கூட சோம்பேறித்தனத்தால் க்ளிக் செய்யாமல் கடந்து செல்வோர் பலர் இருப்பர்.  ‘ஹேஷ் டேக்’ எல்லோருக்கும் மிக எளிதாக உள்ளது தகவல்களை பரப்புவதற்கு. அதுவும் நம்மைப் பற்றிய தகவல்களை நாமே அள்ளிக் கொடுப்பதற்கு.

ஒரு தகவலை நாமே வலிய சென்று கொடுக்க வைக்கும் யுக்திக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருங்கள். கெட்டதே நடக்கும் என சொல்லவில்லை. தீய விளைவுகளுக்கும் அது துணை போகலாம்.

Single Challenge, Couple Challenge, Family Challenge இதெல்லாம் எதற்கு?

நான் எப்படி சமூக வலைதளங்களில் பயணிக்கிறேன் என்றால்…

என் அனுமதி இல்லாமல் என் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவுகளில் கூட பிறர் என் புகைப்படத்தை என் அனுமதி இன்றி எடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அப்படியே பயன்படுத்தினால் நீக்கச் சொல்லி வற்புறுத்துகிறேன்.

அதனால்தான் என் பிறந்த நாளை கூட சமூக வலைதளங்களில் Only Me செட்டிங் செய்து வைத்திருக்கிறேன். (ஃபேஸ்புக் அக்கவுண்ட் திறந்த நாளில் இருந்தே). எனவே என் பிறந்தநாள் நோட்டிஃபிகேஷனும் ஃபேஸ்புக்கில் வெளிப்படாது.

அதுபோல என் அனுமதி இன்றி நான் சம்மந்தப்படாத பதிவுகளில் என்னை யாரும் Tag செய்வதையும் விரும்புவதில்லை.

எனக்கு எதை பிறர் செய்யக் கூடாது என நினைக்கிறேனோ அதை நானும் செய்வதில்லை.

யாருடைய புகைப்படத்தையும் அவர்கள் அனுமதி இன்றி பயன்படுத்துவதில்லை.

யாரையும் Tag செய்வதுமில்லை, அவர்கள் சம்மந்தப்பட்ட போஸ்ட்டாக இருந்தாலும். தனித்தகவலில் மட்டுமே சொல்கிறேன்.

மேலும் திருமணம் ஆனவர்களையும் (Couple Challenge), ஆகாதவர்களையும் (Single Challenge), மொத்த குடும்பத்தையும் (Family Challenge) ஒட்டு மொத்தமாக கணக்கெடுக்கும் யுக்தியே இதுபோன்ற சேலஞ்சுக்குள் மறைந்துள்ளன.

பெண்களின் புகைப்படங்கள் மட்டுமல்ல ஆண்களின் புகைப்படங்களும் மார்ஃபிங் செய்யப்படும்.  இதனால் சிதைந்த பல குடும்பங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

‘If anything is free, you are the product’ என்பது பொதுவிதி. ஜாக்கிரதை!

ஃபேஸ்புக்கில் எப்படி தகவல் கசிவு நடக்கிறது என்பதற்கு 2018-ம் ஆண்டு  மூன்று வாரங்கள் ‘குங்குமம்’ வார இதழில் நான் எழுதிய சிறு தொடர்   ஒன்று உங்கள் பார்வைக்கு! http://compcarebhuvaneswari.com/?cat=90

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 32 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon