ஹலோ with காம்கேர் – 273
September 29, 2020
கேள்வி: நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்! அது நல்லதுக்கா? கெட்டதுக்கா?
முன் குறிப்பு:
சைபர் க்ரைம் விழிப்புணர்வுக்காக ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் விகடன் பிரசுரம் மூலம் வெளியானது. அது உங்களில் பெரும்பாலானோர் அறிந்ததே.
அந்த புத்தகத்தை ஆய்வுகள் பல செய்தே எழுதினேன். அப்போது சென்னையில் கமிஷ்னர் அலுவலகத்தில் மத்தியக் குற்றப் பிரிவில் துணை ஆணையராக பணியில் இருந்த டாக்டர் இரா. சிவக்குமார் அவர்கள் நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களுக்கும் அவர்களின் புகைப்படங்கள் மூலம் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதையும் அதனால் அவர்களின் குடும்பம் சிதைந்ததையும் சில உண்மை நிகழ்வுகள் மூலம் விரிவாக எடுத்துச் சொன்னார்.
இன்றைய பதிவு ஆண் பெண் இருபாலருக்குமான பொதுப் பதிவு என்பதால், ‘பெண்கள் புகைப்படம் வெளியிடும் போது கவனமாக இருக்கவும். மோசமான உலகம் இது’ என்பது போன்ற கமெண்ட்டுகளை தவிர்க்கவும்.
—–
இரண்டு தினங்கள் முன்புதான் # Tag போட்டு Single Challenge, Couple Challenge, Family Challenge என்று புகைப்படங்களை போடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எழுதி இருந்தேன்.
இதைப் போல # Tag மூலம் பிறந்த நாளை வெளியிடும் சேலஞ்ச் ஒன்றும் பிரபலமாகி வருகிறது. அதில்தான் இன்னும் ஆபத்துகள் அதிகம் உள்ளன.
நம்முடைய பிறந்த நாள், மொபைல் எண் இவற்றின் மூலம் நம் வங்கி விவரங்களைப் பெற முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவற்றை # Tag மூலம் வெளியிடுவார்களா?
சைபர் திருடர்களுக்கு நீங்கள் தாரை வார்த்துக்கொடுக்கும் இதுபோன்ற விவரங்கள் உங்களுக்கு நீங்களே புதைகுழி தயாரித்துக்கொள்வதற்கு ஒப்பாகும்.
சென்ற வாரம் இளம் மகளின் தாய் ஒருவர் தொடர்புகொண்டார். முகநூலில் ஒரு பதிவுக்கு ரிப்போர்ட் எப்படி செய்வது என்பது குறித்து கேட்டறிந்தார். அவருடைய பிரச்சனையை தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அவருடைய அனுமதி பெற்றே பொதுப் பதிவாக்கியுள்ளேன்.
சமீபத்தில் மகள்கள் தினம் வந்ததல்லவா? அதற்கு தன் சகோதரன் சகோதரியின் மகள்களின் புகைப்படங்களை எல்லாம் அவரவர்களிடமோ அல்லது அவர்கள் வீட்டு பெரியவர்களிடம் அனுமதி பெறாமல் எடுத்து தன் டைம்லைனில் வெளியிட்டுள்ளார் ஒருவர்.
அதோடு விட்டாரா, ‘என் வீட்டு மகள்களுக்கு மகள்கள் தின வாழ்த்துகள்’ என வாழ்த்தி அவரவர்கள் பெயருடன் பட்டியலிட்டுள்ளார்.
சரி அதோடு முடித்துக்கொண்டாரா, அந்த பெண்களின் பெயருக்கும் Tag செய்துள்ளார்.
எதையும் வேண்டுமென்று செய்யவில்லை. ஆர்வக் கோளாறில் செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவருடைய இரு மகள்களின் புகைப்படங்களையும் சேர்த்தல்லவா பட்டியலிட்டுள்ளார்.
அவரது இந்த செயலால் குடும்பத்துக்குள் பூகம்பம் வெடித்தது. காரணம் அத்தனை பெண்களும் 18, 19 வயதினர்.
அந்த புகைப்படங்களில் ஒரு பெண்ணின் மெசஞ்சருக்கு சினிமா துறை சார்ந்த ஒருவன் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் தகவல்களை அனுப்ப பயந்து போயிருக்கிறார் அந்த பெண். மேலும் அவரது டைம் லைனில் உள்ள புகைப்படங்களில் எல்லாம் ‘சூப்பர்’, ‘செம்ம…’, ‘அப்பா அப்பப்பா…’, ‘என்னா கிளாமர்’ என ஆபாசமாக கமெண்ட் செய்ய அந்த பெண் தன் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார்.
உடனே அந்த பெண்ணின் தாய் தன்னிடம் அனுமதி பெறாமல் தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட உறவினரை தொடர்பு கொண்டு பேச அவர் புரிந்துகொள்ளாமல் பதில் அளிக்க பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
கூடவே மெசஞ்சரில் தொல்லைக் கொடுத்த சினிமா துறை சார்ந்தவனை பிளாக் செய்திருக்கிறார்கள்.
அந்த புகைப்பட பதிவிற்கும் ஃபேஸ்புக்கில் ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள்.
தன் அக்கவுண்ட்டை பிளாக் செய்ததால், சினிமா துறை சார்ந்த அந்த நபர், மகள்கள் தினத்துக்காக தன் குடும்பத்துப் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டவருக்கு மெசஞ்சரில் தொடர்பு கொண்டிருக்கிறார். ‘உங்கள் வீட்டு மகள்கள் என்னமா இருக்கிறார்கள்… என்ன போட்டு வளர்க்கிறீர்கள்’ என கேட்ட பிறகே பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்திருக்கிறார் மனிதர்.
எனவே புகைப்படங்களை பதிவிடும்போதும், # Tag மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடும் சேலஞ்சுகளில் பங்கேற்கும்போதும் கவனமாக இருங்கள்.
உங்கள் நிம்மதியை தாரை வார்த்து லைக் என்ற போதையில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
முக்கியமாக பிறர் வீட்டு குழந்தைகள், இளம் ஆண் / பெண்களின் புகைப்படங்களை அவர்களின் பெற்றோரின் சம்மதத்துடன் மட்டுமே பயன்படுத்துங்கள். அம்மா, அப்பா இருவரது சம்மதத்தையும் பெறுங்கள். இருவரில் ஒருவர் ஆட்சேபித்தாலும் பயன்படுத்தாதீர்கள்.
இவ்வளவு கஷ்டம் ஏன்? அனுமதி இன்றி யாருடைய புகைப்படங்களையும் பயன்படுத்த வேண்டாமே.
மீடியாக்களில் சில சமயம் என்னை தொலைபேசியில் நேர்காணல் செய்வார்கள். அப்போது என் புகைப்படத்தை அனுப்பச் சொல்லி கேட்பார்கள். நீங்கள் அனுமதித்தால் ஃபேஸ்புக்கில் இருந்து எடுத்துக்கொள்ளட்டுமா என என்னிடம் அனுமதி பெற்றே எடுத்துக்கொள்வார்கள். இந்த அணுகுமுறை அலுவலக ரீதியாக மட்டுமில்லாமல், பர்சனலாகவும் நம் அனைவரின் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்கும்.
உஷாராக இருங்கள்! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software