ஹலோ with காம்கேர் – 274
September 30, 2020
கேள்வி: எல்லா விஷயங்களுக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பது சாத்தியமா?
SPB – திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தன் பெற்றோருக்கு சிலை செய்த பிறகு அதன் நேர்த்தியினால் ஈர்க்கப்பட்டு தனக்கும் சிலை செய்ய ஆர்டர் கொடுத்த செய்திகளைப் படிக்கும்போது எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
வருடா வருடம் நவராத்திரிக்காக புதிது புதிதாக கொலு பொம்மைகள் ஆர்டர் கொடுத்து வாங்குவோம். நவராத்திரி சமயத்தில் என்றில்லாமல் எப்போது கண்களில்படுகிறதோ அப்போதெல்லாம் வாங்கிவிடுவோம்.
அப்படி ஒரு சமயம் தஞ்சை மாவட்டத்தில் ஆன்மிகப் பயணம் சென்றபோது ஒரு சிறிய கிராமத்தில் ஒரு கடையில் கொலு பொம்மைகளுடன் சில சிலைகளையும் பார்த்தோம். அது கொலு பொம்மைகள் செய்யும் வீடு. வீட்டின் பின்புறம் பொம்மைகளும் சிலைகளும் தயாராகும். வீட்டின் முன்பக்கம் கடையில் விற்பனை.
அந்த கடை உரிமையாளரிடம் பேச்சுக் கொடுத்தோம்.
‘என் தாத்தா காலத்தில் இருந்து இதே தொழில்தான். இன்று கொலு பொம்மைகள் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இந்தத் தொழில் எதிர்காலத்தில் இருக்குமா என்பதே சந்தேகம். தன் காலத்துடன் இது அழிந்துவிடுமோன்னு பயமாக இருக்கிறது’ என்று வருத்தத்துடன் சொன்னார் அந்த கடை உரிமையாளர். அவரும் சிலை வடிக்கும் ஒரு கலைஞரே.
அவருக்கு உதவியாக ஒரு பெரியவர் கருமமே கண்ணாயினராக ஒரு சிலைக்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் எனக்கு மனதுக்குள் ஓர் ஆசை.
அப்போது எங்கள் அப்பா அம்மா பெயரில் நாங்கள் நடத்திவரும் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும்.
என் அப்பா அம்மாவுக்கு சிலை செய்து அறக்கட்டளை அலுவலகத்தில் வைக்க வேண்டும் என்பதே அந்த ஆசை.
உடனே சிலை செய்வதற்கான எண்ணத்துடன் எவ்வளவு செலவாகும், எத்தனை நாளாகும், எப்படி போட்டோ ஷூட் செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்கத் தொடங்க அந்த பொம்மைகள் செய்யும் கலைஞரும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
கடைசியில் அவர் ஒரு கேள்வி கேட்டார்.
‘சிலை யாருக்கு செய்ய வேண்டும்?’
‘எங்கள் அப்பா அம்மாவுக்குத்தான்’ என என் அருகே அமர்ந்திருந்த என் அப்பா அம்மாவை கைகாட்டினேன்.
அதற்கு அந்த கடைக்காரர், ‘நாங்கள் உயிருடன் இருப்பவர்களுக்கு சிலை செய்வதில்லை, செய்யவும் கூடாது…’ என்றார்.
நான் அதிர்ச்சியில் உறைந்தேன். என் முகம் வாடியது எனக்கே தெரிந்தது.
‘எனக்கு சிலை செய்துகொடுத்தால் பணம் கிடைக்கப் போகிறது… ஆனால் உங்களுக்கு அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் மனசாட்சி கொன்றுவிடும்…’ என்று வெகு நாணயமாக பதில் சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.
நான் சமாளித்துக்கொண்டு, ‘யாருக்கேனும் ஏதேனும் ஆகியிருக்கிறதா?’ என கேட்டேன்.
அவரும் ஆமாம் என்று சொல்லிவிட்டு, உயிருடன் இருப்பவர்களுக்கு சிலை செய்துகொடுத்தால் அது அவர்கள் இருப்பிடத்துக்குச் செல்லும் முன்னரே சம்மந்தப்பட்ட நபர்கள் ஏதேனும் ஒரு காரணத்தினால் இறந்து விடுகிறார்கள் என்று சில நடந்த உண்மை கதைகளை சொன்னார்.
எல்லா விஷயங்களுக்கும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துக்கொண்டிருப்பதை விட, சிலரின் அனுபவங்களின் வாயிலாகக் கிடைக்கும் அவர்களின் நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுகூட நம் மன ஆரோக்கியத்துக்கு நல்லது.
அவரவர் அனுபவம் அவரவர் நம்பிக்கை. That’s All.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software