ஹலோ With காம்கேர் -279 : பிரச்சனைகளும் தீர்வுகளும்!

ஹலோ with காம்கேர் – 279
October 5, 2020

கேள்வி: பிரச்சனைகளுக்கும் தீர்வுகளுக்கும் ஒரே முக்கியத்துவத்தை நாம் கொடுக்கிறோமா?

ஒரு சிலரிடம் பேசும்போது கவனியுங்கள். தங்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக சொல்வார்கள்.

பிரச்சனைகள் என்பது உடல் அசெளகர்யங்களாக இருக்கலாம், வேலை செய்யும் இடத்தில் உள்ள உள் அரசியல் காரணமாக தங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு தட்டிப் போன கதையாக இருக்கலாம், தங்களுக்கு வர வேண்டிய பாராட்டும் புகழும் பிறருக்கு சென்ற சூழலாக இருக்கலாம், கடன் தொல்லையாக இருக்கலாம்… இப்படி பிரச்சனை எந்த ரூபத்தில் இருந்தாலும் அதுகுறித்து சொல்வதற்கு யாருடைய காதாவது கிடைக்காதா என்ற தவிப்பில் நம்மிடம் கொட்டுவார்கள்.

அப்படி சொல்வது தவறா என நினைக்க வேண்டாம். தவறில்லைதான். அது நம்மிடம் பிரச்சனைகளை கொட்டும் நபருக்கும் நமக்குமான அன்னியோன்யத்தைப் பொருத்த விஷயம்.

பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சனைகளை விஸ்தாரமாக கொண்டாடும் நபர்கள் அந்த பிரச்சனைகள் தீர்ந்த பிறகு அந்த அழகிய சூழலை கொண்டாடுகிறார்களா என பார்த்தால் அதற்கு இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

அவர்களிடம் போன் செய்யும்போதோ அல்லது நேரில் பார்க்கும்போதோ ‘நான் சொன்னேன் இல்ல, அந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வந்துவிட்டேன். இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…’ என்று சொல்வதே இல்லை.

பிரச்சனைகளின் வலிகளை கொண்டாடும் நம் மனதுக்கு அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தவுடன் அந்த மலர்ச்சியை கொண்டாடத் தெரிவதில்லை. அந்த தீர்வு என்னவோ இயல்பான ஒரு விஷயம் போல  ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்கிறார்கள்.

இதே மனப்பக்குவம் பிரச்சனைகள் ஏற்படும் போதும் ‘பிரச்சனைகளும் வாழ்க்கையின் ஓர் அங்கம்’ என்ற உறுதியுடன் இருக்கலாம் அல்லவா?

பிரச்சனைகள் தங்களுக்கு மட்டுமே பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட விஷயம் என்பதுபோல கருதுவதாலும் அது குறித்து பேசும்போது கிடைக்கும் ஒருவித மனக் கிளர்ச்சியினாலும் அதை வெளிப்படையாக பேசுகிறார்கள். மேலும் அந்த பிரச்சனை சார்ந்து தங்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தையும், பிறர் நம் மீது காட்டும் பரிதாபத்தையும் மனம் விரும்புகிறது என்பதுதான் உளவியல்.

பிரச்சனைகளுக்கும் அது கொடுக்கும் உணர்வுகளுக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அதற்கு தீர்வு கிடைக்கும்போது நமக்குள் உண்டாகும் உணர்வுகளுக்குக் கொடுக்கத் தவற வேண்டாம். உண்மையைச் சொல்லப் போனால் அதைத்தான் கொண்டாடி மகிழ வேண்டும். அந்த உற்சாகமே அடுத்தடுத்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொடுக்கும்.

பிரச்சனைகளும் தீர்வுகளும் வாழ்க்கையில் இயல்பான ஒரு விஷயம். அது இல்லை என்றால் நம் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது. அவரவர் சூழலுக்கு ஏற்ப பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அவரவர் அருகில் சென்று பார்க்கும்போதுதான் அவை நம் கண்களுக்குத் தெரியும்.

அக்கரைக்கு இக்கரை பச்சை. அவ்வளவுதான் வாழ்க்கை!

இனி வீடியோ வடிவிலும் ஹலோ வித் காம்கேர் பதிவை காணலாம். இன்று ட்ரைலர் மட்டும். இதோ உங்கள் பார்வைக்கு…

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 66 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon