ஹலோ with காம்கேர் – 278
October 4, 2020
கேள்வி: உங்களை எல்லோரும் நேசிக்க வேண்டுமா?
ஒரு சிறுவன். ஒரு டிரம்ஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான். மிக சிறப்பாக டிரம்ஸ் வாசிப்பான். அந்த வகுப்பின் செல்லப் பிள்ளை. காரணம் இல்லாமல் இல்லை.
வகுப்பில் தன்னுடன் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் தன்னைவிட வயதில் பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் அவர்கள் அனைவரையும் தனக்கு நிகராக கொண்டு வர வேண்டும் என நினைத்து அவர்களுக்கும் தனக்குத் தெரிந்த அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொடுத்து உதவுவான்.
அந்த வகுப்பில் நகரின் முக்கிய இடங்களில் எல்லாம் மாதந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படுவோருக்கு பரிசுகளும் கொடுத்து ஊக்குவிப்பார்கள்.
வழக்கமாக அந்த சிறுவனே பரிசு பெற்றுக்கொண்டிருந்தான். ஒருசில நிகழ்ச்சிகளுக்கு பிறகு அவன் தன்னுடன் பயிற்சி எடுக்கும் மாணவர்களும் பரிசு பெற வேண்டும் என நினைத்து அவர்களுக்கும் தான் அறிந்த முக்கியமான விஷயங்களை சொல்லிக்கொடுத்து ஊக்குவித்து அவர்களுக்கு பரிசு கிடைக்க வழிவகை செய்தான்.
எப்படி செய்தாலும் ஏதேனும் ஒரு பரிசை அந்த சிறுவனுக்குக் கொடுத்து மகிழ்வார் அவனது பயிற்சி ஆசிரியர்.
சக மாணவன் ஒருவன் தாழ்வு மனப்பான்மையினால் துவண்டிருந்த நேரத்தில் அவனுக்காக தான் சுமாராக வாசித்து அவனை வெற்றி பெற செய்ய அத்தனை முயற்சிகளையும் எடுத்தான்.
ஆனால் அப்போதும் அந்த மாணவனுக்கு பரிசு கொடுக்கவில்லை. அவன் சிறப்பாக வாசித்தான். அவனுக்குத்தான் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என வாதாடி பரிசு கொடுக்க வைத்திருக்கிறான்.
அது மட்டும் இல்லாமல் பயிற்சி முடிந்து அத்தனை மாணவர்களும் வகுப்பை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் அவனோ பயிற்சி ஆசிரியருடன் இருந்து அவருடன் சேர்ந்து இசை சாதனங்களை முறையாக அடுக்கி வைத்துவிட்டு வகுப்பை ஓரளவுக்கு சுத்தம் செய்துவிட்டு ஆசிரியருக்கு உதவி செய்துவிட்டே வகுப்பை விட்டு கிளம்புவான்.
இப்படியாக ஐந்து வருடங்கள் பயிற்சி எடுத்து முடித்தபின் அவரவர்கள் பள்ளி இறுதியை முடித்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் நேரமும் நெருங்கியது.
தானும் உயர்ந்து தன்னுடன் படிக்கும் அத்தனை மாணவர்களும் தன்னைப் போலவே உயர வேண்டும் என நினைத்து உதவிகள் செய்து ஊக்குவித்த அந்த சிறுவனுக்குத்தான் அந்தப் பள்ளியின் சிறப்பு மாணவன் என்ற அந்தஸ்த்து கிடைத்தது.
அவனுக்கு எந்த கல்லூரிக்குச் சென்றாலும் இடம் கிடைக்கும் அளவுக்கு சிறப்பு பாராட்டு மற்றும் பரிந்துரை சான்றிதழ் கொடுத்தார்கள்.
அந்தச் சிறுவன் இப்போது கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் இளைஞனாகிவிட்டான். இது உண்மையில் நடந்த ஓர் நிகழ்வு.
ஒருவரது வெற்றி என்பது அவன் தனிமனிதனாக வெற்றி பெறுவது மட்டும் அல்ல. தன்னைச் சார்ந்த இந்த சமூகத்தையும் சேர்த்து உயர்த்துவதே. அதுபோன்ற குணநலன்களை கொண்டவர்களையே பலரும் விரும்புவார்கள்.
ஏன் நமக்கும்கூட அதுபோன்றவர்களையே பிடிக்கும். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு அது போல பெருந்தன்மையாக நடந்துகொள்ள முடிவதில்லை. ஆனால் அப்படி நடந்துகொள்பவர்கள் மீது பொறாமையும், அவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதிகள் மீது காழ்ப்புணர்வும் மட்டும் தவறாமல் வந்துவிடுகிறது.
நம்மை எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமானால் நாம் எல்லோரையும் நேசித்து நம்மைப் போல் பாவித்து உதவ வேண்டும். அதுதான் நம்மை அனைவரும் நேசிக்க உதவும் சூட்சுமம்.
இந்தப் பதிவிற்கான புகைப்படத்தை நன்றாக உற்று நோக்குங்கள். ஒரு ஓட்டப்பந்தய வீரரை மற்றொரு வீரர் தள்ளுவதைப் போல இருக்கிறதல்லவா?
ஆம். அவர் தள்ளத்தான் செய்கிறார். தொடந்து படித்து அவர் ஏன் தள்ளுகிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.
உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் ஓட்டப் பந்தயம். கென்யா நாட்டு ஓட்டப்பந்தய ஆபல் முடையும், ஸ்பேனிஷ் நாட்டு வீரர் இவான் வெர்நாண்டஸும் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் ஓடிக்கொண்டிருந்தபோது கென்யா நாட்டு வீரர் ஒரு நிமிடம் குழப்பத்தில் நின்றுவிட்டார். அவர்தான் முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டாவதாக ஓடி வந்துகொண்டிருந்த ஸ்பேனிஷ் நாட்டு வீரர் கென்யா நாட்டு வீரரை நோக்கி ‘என்ன ஆச்சு… ஓடுங்கள்’ என்று ஸ்பேனிஷ் மொழியில் உரத்த குரல் எழுப்பி அவரை எச்சரிக்கை குரல் கொடுத்து அவரை தொடர்ந்து ஓடச் செய்ய முயற்சித்தார். ஆனால் கென்யா நாட்டு வீரருக்கு ஸ்பேனிஷ் மொழி தெரியாது என்பதால் அப்படியே நின்று கொண்டிருந்தார். உடனே ஸ்பேனிஷ் நாட்டு வீரர் என்ன செய்தார் தெரியுமா? கென்யா நாட்டு வீரரி கைகளால் தள்ளி ஓடச் செய்து அவரை வெற்றியை நோக்கி நகர்த்தினார்.
ஸ்பேனிஷ் நாட்டு வீரர் அப்படி செய்யாமல் தானே அவரை முந்தி ஓடி முதலாவது இடத்தைப் பெற்று போட்டியில் வென்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நேர்மையாக முதலாவதாக வந்துகொண்டிருந்த வீரர் ஏதோ ஒரு மன குழப்பத்தில் ஓடாமல் நின்றுவிட அவரை உத்வேகப்படுத்தி ஓடச் செய்து அவர் பெற வேண்டிய வெற்றியை அவருக்கே பெற்றுத்தந்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.
வெற்றி என்பது முதலாவதாக வருவதில் அல்ல. மனித நேயத்துடன் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு நேர்மையாக வாழ்ந்து தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் பெறுகின்ற இன்பங்களைப் பகிர்வதே என்பதை இந்த நிகழ்வு அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது.
‘வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு’
என்று திருவள்ளுவர் அன்றே சொல்லிவிட்டு சென்றுள்ளாரே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
அக்டோபர் 8, 2020 வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/