ஹலோ With காம்கேர் -295 : குழந்தைகளை புரிந்துகொள்வோம்!

ஹலோ with காம்கேர் – 295
October 21, 2020

கேள்வி: மிகைப்படுத்தல் ஆபத்தானதா?

குழந்தைகள் இயல்பாக வளர வேண்டுமானால் அவர்களைப் பற்றிய இமேஜை உண்மைக்கு மாறாக அல்லது மிகவும் அதீதப்படுத்தி வெளிப்படுத்தாமல் இருப்பதே பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம்.

உதாரணத்துக்கு ஒரு குழந்தை நன்றாக பாடும் என்று வைத்துக்கொள்ளுங்களேன். வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்கள் பயிற்சி கொடுத்து வைத்திருக்கும் பாடலை பாடச் சொல்லி அந்தக் குழந்தையை வலியுறுத்துவார்கள். அதற்குத் தெரிந்ததே அந்த ஒரு பாடலாகத்தான் இருக்கும். மிஞ்சிப் போனால் கூடுதலாக இன்னும் ஒன்றிரண்டு பாடல்களை பயிற்சி கொடுத்திருப்பார்கள்.

அந்தக் குழந்தையும் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தாலே அந்தப் பாடல்களைப் பாடத் தானாகவே தயார் ஆகிவிடும். எப்படியும் அப்பா அம்மா அதைத்தான் பாடச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளப் போகிறார்கள் என்று அதற்கும் நன்றாகத் தெரியும்.

விருந்தினர்களும் ‘ஆஹா, குழந்தை என்னமா பாடறா… கிரேட்… இசையில் ஆர்வம் இருக்கு…. திறமை இருக்கு… இசைத் துறையில் கொண்டு வந்து விடுங்கள்…’ என 2 அல்லது 3 வயது குழந்தையின் எதிர்காலத்தை அவர்கள் கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள்.

அந்தக் குழந்தையிடம் வேறொரு பாடலைப் பாடச் சொல்லிப் பாருங்கள். பரிதாபமாய் அம்மா அப்பாவை பார்த்துக்கொண்டு ஓடும்.

திரும்பத் திரும்ப ஒரே பாடலை பாடி பயிற்சி எடுத்துக்கொண்டால் பாட்டில் ஆர்வமே இல்லாத குழந்தைக்குக் கூட அந்தப் பாட்டு மனப்பாடம் ஆகிவிடும். சுருதி மாறாமல் பாடும்.

திறமை, ஆர்வம் எல்லாவற்றையும் தாண்டி, சிறிய வயதில் எல்லாக் குழந்தைகளுக்குமே ஓவியம், பாட்டு, விளையாட்டு என எல்லாமே நன்றாகவே வரும். ஏனெனில் என்ன கற்றுக்கொடுக்கிறோமோ அத்தனையையும் உள்வாங்கிப் போட்டுக்கொள்ளும் திறன் கொண்டது இளமைப் பருவம்.

சில வருடங்களுக்கு முன்னர் என் விருந்தினர் வீட்டில் ஒரு 6 வயது சிறுமி என்னிடம் சொன்ன ஒருவிஷயம் இன்றும் நினைவிருக்கிறது.

‘ஆண்ட்டி நான் ஒரு விஷயம் சொல்றேன், அம்மா கிட்ட சொல்லிடாதீங்க…’ என்று ஆரம்பித்து மழலையாய் சொன்னாள்.

‘எனக்கு வீட்டுக்கு ரிலேடிவ்ஸ் வந்தாலே பிடிக்காது… யார் வந்தாலும் அந்த பாட்டைப் பாடு, இந்த டான்ஸை ஆடு, திருக்குறள் சொல்லிக் காண்பி, பாரதியார் கவிதை சொல்லு… அப்படின்னு ஒரே டார்ச்சர். ஒரே பாட்டு, ஒரே டான்ஸ், இரண்டு திருக்குறள், இரண்டு பாரதியார் கவிதை இதைவிட்டால் எனக்கு வேறெதுவும் தெரியாது… ரொம்ப போர் அடிக்கிறது…’

அந்த சிறுமி மனதில் உள்ளதை ‘உள்ளது உள்ளபடி’ சொல்லிவிட்டாள். ஆனால் இதுதான் உண்மையில் உரைக்கல். இந்தக் குழந்தையை பெரும்பாலான குழந்தைகளின் முகமாக எடுத்துக்கொள்ளலாம்.

தற்கொலை செய்துகொள்ளும் மாணவ மாணவிகள் எழுதி வைத்துவிட்டுச் செல்லும் கடிதங்களும் இந்த விஷயத்தையே பறைசாற்றிச் செல்கின்றன.

‘என் அப்பா அம்மா என் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள். என்னால் அவர்கள் நம்பிக்கையை காப்பாற்ற முடியவில்லை. முதல் மதிப்பெண் எடுக்க முடியவில்லை… சாரி அப்பா, அம்மா… உங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டு செல்கிறேன்…’

16, 17 வயதில்  +2 படிக்கும் மாணவர்கள்  இத்தனை மனமுதிர்ச்சியுடன் கடிதம் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுக்குள் அவர்களின் பெற்றோர் எந்த அளவுக்கு அழுத்தத்தை செலுத்தி இருப்பார்கள் என பாருங்கள்.

நன்றாக கவனியுங்கள். ‘தனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. தனக்கு வருத்தமாக உள்ளது. தன் தோல்வி தனக்கு அவமானமாக உள்ளது’ என எந்த யாருமே எழுதி வைப்பதே இல்லை. ஏனெனில் ஏமாற்றம், வருத்தம், அவமானம் இவை எல்லாமே தான் சார்ந்து இயங்கும் தன் வீட்டையும் தன் பெற்றோரையும் சார்ந்ததாகவே கருதும் மனநிலையிலேயே இளையதலைமுறை இயங்குகிறது.

எனவே வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும் பெற்றோர்களே!

‘உன் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிப் பார்த்துட்டா அதுபோதும் என் வாழ்க்கைக்கு…’ என தங்கள் டாக்டர் கனவையும்…

‘அப்பாதான் கல்லு மண்ணுல கொத்தனாரா கஷ்டப்படறார். நீயாவது சிவில் படித்து பெரிய இன்ஜினியரா வந்துடு… நீ கட்டும் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருக்கணும்… அது ஒண்ணு போதும் இந்த பிறவி எடுத்ததுக்கு…’ என தங்கள் இன்ஜினியரிங் கனவையும்…

பிள்ளைகள் மனதில் பாரமாக ஏற்றி அது நடக்காதபோது தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டாலோ அல்லது தோல்வி அடைந்துவிட்டாலோ தங்கள் பெற்றோரின் கனவை தாங்கள் சிதைத்துவிட்டதாகவும் அவர்களை ஏமாற்றி விட்டதாகவும் பயந்துபோய் தற்கொலை என்ற தவறான முடிவை எடுக்கிறார்கள்.

ஒவ்வொரு துறையிலும் எத்தனையோ துணைப் பிரிவுகளும் சார்புத் துறைகளும் உள்ளன. நேரடியாக அந்தத்துறையில் நுழைய முடியவில்லை என்றால் துணைப் பிரிவுகளில் நுழைந்து அதைவிட பிரமாதமான நிலையை அடைய முடியும்.

நம் மக்களுக்குத் தேவை இந்த விழிப்புணர்வே. குறிப்பாக பெற்றோர்களுக்கு. பெற்றோர்கள் விழித்துக்கொண்டால் பிள்ளைகளை வழிநடத்துவது சுலபம். விழித்துக்கொள்வோம், வழிநடத்துவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 582 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon