ஹலோ with காம்கேர் – 297
October 23, 2020
கேள்வி: எல்லா இடங்களிலும் காரணங்கள் சொல்வது எடுபடுமா?
காரணங்கள் ஒருபோதும் நம்மை வாழ்க்கையில் உயர்த்தாது. அவை நம் மனதை நாமே ஏமாற்றிக்கொள்ளவும் பிறரிடம் நம் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றிக்கொள்ளவும் உதவுமே தவிர வேறெதற்கும் உதவாது.
ஒருசிலரை கவனித்துப்பாருங்கள். தாங்கள் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் குறிப்பாக தங்கள் தவறுகளை நியாயப்படுத்த காரணங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள்.
காரணங்கள் ஆயிரம் இருந்துகொண்டேதான் இருக்கும். உண்மையில் எந்த காரணமும் இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு காரணத்தை கற்பனையில் உருவாக்கிக்கொண்டுவிட முடியும்.
கொஞ்ச நாளில் காரணங்கள் சொல்லி தவறுகளில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக்கொள்வது நம் மனதுக்கும் பழகிவிடும். நம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் முன்னேற்றம் குறைந்துகொண்டே வரும். பிறகு நம் மனம் அதற்கும் ஒரு போலியான காரணத்தை கண்டுபிடித்து நம்மை முடக்கிப் போடும்.
நேற்று என்னிடம் ஏற்கனவே கவுன்சிலிங் பெற்ற ஒரு பள்ளி மாணவியின் அம்மாவுக்கு போன் செய்திருந்தேன். அந்த மாணவி மொபைல் ஆப்களுக்கு தீவிரமாக அடிக்ட் ஆனதால் அதில் இருந்து மீள்வதற்காக மனோரீதியாக சில ஆலோசனைகள் சொல்லி இருந்தேன்.
அவளுடைய திறமை என்ன கண்டுபிடித்து தினமும் அதில் ஏதேனும் ஒரு பணியை கொடுத்து அவளுடைய கிரியேட்டிவிட்டியில் மனதை செலுத்தும் ஓர் முயற்சி. நல்ல முன்னேற்றம். கொஞ்சம் கொஞ்சமாக அவளும் அந்த மனச்சிக்கலில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தாள்.
அவள் கிரியேட்டிவிட்டியை பாராட்டி வாட்ஸ் அப் தகவல் அனுப்பினால், அவளுக்கு மனம் இருந்தால் ‘தேங்க்ஸ் மேம்’ என்று டைப் செய்வாள், இல்லையெனில் பதில் அளிக்க மாட்டாள்.
அந்த குணத்தை எடுத்துச் சொல்வதற்காக அந்த மாணவியிடம் பேச வேண்டும் என சொன்னேன். அவள் அம்மாவும் போனை மகளிடம் கொடுத்து பேச சொன்னார்.
‘ஆன்லைன் கிளாஸ்… ஹோம் ஒர்க் மேம்… டியூஷன் மேம்… பாட்டு கிளாஸ் மேம்…’
என ஆரம்பித்து ஆயிரம் ‘மேம்’-கள். ஆயிரம் காரணங்கள். அத்தனையும் வாட்ஸ் அப்பில் நான் அனுப்பிய தகவலுக்கு ஏன் பதில் அனுப்பவில்லை என்பதற்கான விளக்கங்கள். தவறியும் ‘நான் இனிமேல் பதில் அளிக்கிறேன் மேம்’ என்ற பதில் வரவே இல்லை.
நான் அவளுக்குப் புரியும்படி எடுத்துச் சொன்னேன்.
‘காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். உனக்காக உன் நலனுக்காக ஒருவர் முயற்சி எடுக்கும்போது அவர்களின் முயற்சிக்கு ஒத்துழைப்பதுடன் அவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நீ அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்வதற்கான முக்கியமான படி.
வாழ்க்கையில் உன் வளர்ச்சிக்கான படிகளில் ஆங்காங்கே சில முக்கியப் படிகள் இருக்கும். பாசம், அன்பு, அக்கறை இப்படி அதற்கு வெவ்வேறு பெயர்கள். அவை உன் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், நலன் விரும்பிகள் என்ற பெயரில் உன்னைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருப்பவர்கள்தான்.
அந்தப் படிகளை விட்டுவிட்டு அடுத்தடுத்த படிக்கு ஜம்ப் ஆகி உச்சத்தைத் தொட்டு விடலாம்தான். ஆனால் உன் வெற்றி உனக்கே சந்தோஷத்தைக் கொடுக்காது. வெறுமையாக இருக்கும்.
நம்மை கண்களுக்குள் வைத்து பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் பெற்றோரிடம் பாசமாக இருப்பதும், நம் மீது பாசம் வைப்பவர்களையும் நம் நலன் விரும்பிகளையும் மதிப்பதும், முடிந்தால் அவர்களுக்கும் அவ்வப்பொழுது உன்னால் ஆன சந்தோஷத்தை கொடுப்பதும்தான் உன் வெற்றிகளை சுவாரஸ்யமாக்கும்…’
என்று சொல்லி முடித்த பிறகாவது அவள் நான் எதிர்பார்த்த பதிலை கொடுப்பாள் என நினைத்தேன்.
ஆனால் அவள் திரும்பவும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்ல ஆரம்பிக்க, நான் பாதியில் இடைமறித்தேன்.
அவள் புரிந்துகொண்டு ‘சரி மேம்… இனிமேல் சரியாக ரெஸ்பாண்ட் செய்கிறேன்…’ என்றாள்.
இந்த ஒரு பதிலுக்கு எத்தனை விஷயங்களை புரிய வைக்க வேண்டியுள்ளது பாருங்களேன்.
இது இளைய தலைமுறையினரின் பிரச்சனை மட்டுமல்ல. வயது வித்தியாசமின்றி பெரும்பாலானோரிடம் உள்ள பிரச்சனை.
சில வருடங்களுக்கு முன்னர் என்னிடம் 25, 26 வயதில் ஒரு பெண் பணியில் இருந்தார். அவர் அடிக்கடி ‘மறந்துட்டேன் மேம், சாரி’ என சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஒருநாள் பொறுக்க முடியாமல் ‘யாருக்காவது அலுவலகம் வரும்போது நல்ல உடை அணிந்துவர மறந்துவிடுமா, நைட்டியுடனோ அல்லது வீட்டில் அணிந்திருக்கும் உடையுடனோ அலுவலகம் வருவார்களா, நான்கு பேர் பாராட்டும் விதமாக உடை அணிந்து முகத்துக்கு கொஞ்சம் மேக் அப் செய்து பார்ப்பதற்கு அழகாய் வெளிப்படுத்திக்கொண்டுதானே வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்கள். அதை மட்டும் எப்படி மறக்காமல் செய்ய முடிகிறது. அப்படித்தான் நாம் எடுத்துக்கொண்ட ரெஸ்பான்சிபிலிட்டியிலும் கவனம் இருக்க வேண்டும்…’ என்றபோது அந்தப் பெண் கொடுத்த பதிலில் கொஞ்சம் ஷாக் ஆனேன்.
‘மேம், என் அடுத்தவீட்டு அக்கா வீட்டில் இருக்கும் நேரங்களில் உள்பாவாடை அணிந்து தாவணி போட்டு வேலை செய்துகொண்டிருப்பார். ஒரு நாள் ஆஃபீஸூக்கு வீட்டில் போட்டுக்கொண்டிருந்த அதே உடையுடனேயே சென்றுவிட்டார்…’
இப்படி நாம் நம் தொண்டை வற்ற எவ்வளவுதான் புரிய வைக்க முயற்சித்தாலும் அதற்கும் காரணங்கள் சொல்லிக்கொண்டு விளக்கங்கள் கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைக்கு செல்வதில்லை.
அந்தப் பெண்ணுக்கு இப்போது 35 வயதிருக்கும். பதிப்பகம் ஒன்றில் தமிழ் டைப்பிங் செய்துகொடுக்கும் லே-அவுட் பிரிவில் பணி செய்கிறார். என்னிடம் பணி செய்தபோது பி.காம் முடித்திருந்தார்.
அன்றில் இருந்து இன்றுவரை அவர் பணியில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இவர்களைப் போன்றவர்கள் எதற்கும் அசர மாட்டார்கள். இதற்கும் ஒரு காரணத்தை வைத்திருப்பார்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software