ஹலோ With காம்கேர் -296 : நீங்கள் Fan- ஆ அல்லது Exhaust Fan – ஆ?

ஹலோ with காம்கேர் – 296
October 22, 2020

கேள்வி: ஆறறிவுள்ள மனிதனாய் பிறந்ததன் அடையாளம் என்ன?

தாழ்வு மனப்பான்மையில் ஓர் உயர்வுமனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையில் ஒரு தாழ்வுமனப்பான்மையும் ஒளிந்துகொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இரண்டு மனப்பான்மையும் இல்லாமல் இயல்பாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் தன்னம்பிக்கையானவர்கள்.  ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.

ஒருவர் தன்னைப் பற்றி ‘நான் நேர்மையாக இருப்பதனால் எனக்கு எதிரிகள் அதிகம். வாழ்க்கைக்கு உதவாதவன் ஏமாளி என்ற பட்டங்கள் நிறைய உண்டு’ என்று மிகவும் சோகமாக சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

நியாயமாகப் பார்த்தால் இவரது இந்தக் கூற்றில் தன்னம்பிக்கைதான் வெளிப்பட வேண்டும். ஆனால் இவர் தன்னைத் தாழ்த்திக்கொள்வதாய் நினைத்துக்கொண்டு தன்னை உயர்வாகவே சொல்லிக்கொள்கிறார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் ‘நான் நேர்மையாக இருக்கிறேன் பார்’ என்று என்னவோ நேர்மையாக இருப்பதே சாதனை போன்று  ‘சுய தம்பட்டம்’ அடித்துக்கொள்கிறார் என்றே பொருள்.

சந்தர்ப்பம் ஏற்பட்டால் இவரைப் போன்றவர்கள் தங்களிடம் நேர்மையாக நடந்துகொள்பவர்களை ஒதுக்கி வைக்கவும் தயங்க மாட்டார்கள். தங்களுக்கான வேலைகளை முடித்துக்கொள்ள தன் ‘நேர்மையை’ (?) கொஞ்சம் விலக்கி வைத்துவிட்டு காரியத்தை முடித்துக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். (விதிவிலக்குகள் உண்டு)

நேர்மையாக இருப்பது சாதனை அல்ல. அது ஒரு குணம். பண்பு. செயல்பாடு. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது குணமும் பண்பும் செயல்பாடும் நேர்மையாகத்தானே இருக்க வேண்டும். ஆறறிவுள்ள மனிதனாய் பிறந்ததுக்கு அதுதானே அடையாளம்.

அதுபோல  ‘நான் எல்லாம் எதற்கும் கவலைப்படமாட்டேன்… யாரும் என்னை நோகடிக்கவே முடியாது… கோபப்படுத்தவே முடியாது…’ என்று அடிக்கடி சொல்பவர்களை நன்றாக கவனித்துப் பார்த்தால் அவர்கள்தான் மற்றவர்களைவிட தொட்டால் சிணுங்கியாக இருப்பார்கள். அவர்களின் பதட்டத்தைக் குறைத்துக்கொள்ளவே தன்னைப் பற்றிய இதுபோன்ற சுய மதிப்பீடுகளை வெளிப்படையாக சொல்லிக்கொள்வார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள்தான் மற்றவர்களை ஏதேனும் ஒரு காரணம் வைத்துக்கொண்டு நோகடிப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களைப் பற்றி உயர்வாக சொல்லிக்கொள்வதாக நினைத்துக்கொண்டு தங்கள் தாழ்வு மனப்பான்மையையே வெளிப்படுத்துக்கிறார்கள். (விதிவிலக்குகள் உண்டு)

இந்த இரண்டு பிரிவினரைத் தவிர மற்றொரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றி உயர்வாகவும் சொல்லிக்கொள்ள மாட்டார்கள், தாழ்த்தியும் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். இயல்பாக வாழ்ந்து செல்வார்கள். அமைதியாக தங்கள் செயல்களை செய்துகொண்டிருப்பார்கள். நேர்மையாக இருப்பார்கள். தன்னம்பிக்கையாக வாழ்வார்கள்.

பொதுவாக சமையல் அறையில் Fan,  Exhaust Fan என இரண்டு மின்விசிறிகள் இருக்கும்.

Exhaust Fan – சமைக்கும்போது எண்ணெய் அந்த அறைக்குள்ளேயே சுற்றிக்கொண்டிராமல் அதை வெளியேற்றுவதற்காக உதவும் ஃபேன்.

Fan –வியர்க்காமல் நல்ல காற்றோட்டாமாக அமர்ந்து சாப்பிடுவதற்காக உதவும் ஃபேன். சுற்றி இருக்கும் காற்றை இழுத்து நம் மீது செலுத்தி நம் உடல் வெப்பநிலையை குறைக்கும்.

முன்னது உள்ளுக்குள் இருக்கும் காற்றை வெளியேற்ற, பின்னது சுற்றி இருக்கும் காற்றை இழுத்து அறைக்குள் காற்றோட்டத்தைக் கொண்டுவர.

மனிதர்களிலும் இதுபோல இரண்டு வகையினர் உண்டு.

Exhaust Fan போன்றவர்கள் தங்களுக்குள் புகைந்துகொண்டிருக்கும் பயத்தை, பதட்டத்தைக் குறைத்துக்கொள்ள ‘நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன்’ என்பது போன்ற வாசகங்கள் மூலம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள் அல்லது ‘நான் ரொம்ப நேர்மையானவன்..’ என்பதுபோன்ற சுயபதிப்பீடுகளை வெவ்வேறு வார்த்தைகள் மூலம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

Fan போன்றவர்கள் தங்களுக்குத் தேவையான நல்ல விஷயங்களை தங்களைச் சுற்றி உள்ள உலகில் இருந்து கிரஹித்துக்கொண்டு தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் மகிழ்விப்பார்கள்.

நீங்கள் எந்த வகை ஃபேன் என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

ஆறறிவுள்ள மனிதனாய் பிறந்ததுக்கு அடையாளமே நேர்மையாக இருப்பதும், தன்னம்பிக்கையாக வாழ்வதுமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 32 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon