ஹலோ with காம்கேர் – 299
October 25, 2020
கேள்வி: ‘சும்மா இருப்பவர்கள்’ எதற்காக கடவுளை வணங்க வேண்டும்?
பொதுவாக வேண்டுதல்கள் எதைச் சார்ந்து இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியுமே மிக சிறப்பாக அமையப்பெற வேண்டும் என்பதுதானே நம் ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கும். அவற்றைச் சார்ந்துத்தானே நம் பிராத்தனைகளும் அமையப்பெறும்.
‘குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டுமே கடவுளே…’ என்று இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் மூலையில் ஒரு ஜீவன் கசியும் கண்களுடன் பிராத்தித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் ‘இந்த ஜீவனின் உடலை கஷ்டப்படுத்தாம எடுத்துக்கொண்டுப் போய்விடு கடவுளே…’ என மற்றொரு ஜீவன் கண்ணீருடன் உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்.
இந்தப் பிரபஞ்சத்தின் அதிசயம் இதுதான். இதுவே இயற்கையின் அற்புதம்.
சரஸ்வதி தேவியை வழிபட்டால் நமக்கு வரப்போகும் துன்பத்துக்கான எச்சரிக்கையை நமக்கு உணர்த்துவதன் மூலம் துன்பங்களில் இருந்து காப்பாற்றி விடுவாள்.
இந்தக் கருத்தை பாரதியார் ‘தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்’ என்கிறார்.
எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவதைப் போல சரஸ்வதியையும் வணங்கி வழிபட்டுத் தொடங்கினால் அந்த செயல் வெற்றிகரமாக முடியும். இதற்கும் பாரதியார் ஒரு பாட்டை பாடியுள்ளார்.
‘செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்…’
மனதிலே தவறான எண்ணங்கள் வராமல் நேர் வழியில் சிந்தித்து வாழ்ந்தால் மட்டுமே நமக்கு நன்மைகள் நடைபெறும். தீய எண்ணங்களை மனதில் இருந்து நீக்குபவள் சரஸ்வதி.
எனவே கல்வி பயிலும் மாணவ மாணவிகள், தொழில் செய்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமில்லாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் சும்மா இருப்பவர்களும் வணங்க வேண்டிய தெய்வம் சரஸ்வதி.
ஏனெனில் சும்மா இருக்கும்போதுதான் தீய எண்ணங்கள் மனதில் வந்து மண்டிக்கொள்ளும். சும்மா இருக்கும்போது(ம்) பிரச்சனைகள் வராமல் நம்மைக் காத்துக்கொள்ளவும் நம் எண்ணங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் தீய எண்ணங்களை தூர விரட்டி மேன்மையான எண்ணங்களை மனதில் தங்க வைத்துக்கொள்ளவும் உதவும் தெய்வம் சரஸ்வதி.
இதனால்தான் சரஸ்வதி தேவி தூய்மையான வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதையே பாரதியார் ‘வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்…’ என்று பாடியுள்ளார்.
இனி சும்மா இருப்பவர்களும் சரஸ்வதி தேவியை வழிபட்டு வந்தால் ‘சும்மா இருக்கும்’ சுகத்தில் இருந்து விடுபட்டு நல்லதோர் வாழ்க்கைக் கிடைக்கப் பெறுவதற்கான அறிவுப்பூர்வமான வழியை கிடைக்கப்பெறுவர்.
இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software