ஹலோ With காம்கேர் -300 : பியர் பிரஷர் (Peer Pressure)!


ஹலோ with காம்கேர் – 300
October 26, 2020

கேள்வி: பியர் பிரஷர் (Peer Pressure) என்றால் என்ன?

1992-ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில்தான் எங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தைத் தொடங்கினேன். நேற்றுடன் 27 வருடங்கள் முடிந்து 28-வது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.

என் கல்வி அறிவினாலும், உழைப்பு, திறமை, நேர்மை இவற்றின் துணையினாலும், என் எல்லா முயற்சிகளுக்கும் முழுமையாக ஆதரவு கொடுத்து நான் நானாக வாழ வழிவகை செய்துகொடுத்த என் பெற்றோரின் அன்பினாலும், என் சகோதரி சகோதரன் இவர்களின் பாசத்தினாலும், என்னுடன் இணைந்து நான் எடுக்கும் எல்லா தீர்மானங்களுக்கும் ஒத்துழைக்கும் எங்கள் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆதரவினாலும் இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது.

எத்தனை ப்ராஜெக்ட்டுகள், எத்தனை அனுபவங்கள், எத்தனை மனிதர்கள், எத்தனை சூழல்கள், எத்தனை சந்தோஷங்கள், எத்தனை முயற்சிகள், எத்தனை இடர்கள், எத்தனை கொண்டாட்டங்கள்… ஆஹா ஒரு பெருமுயற்சிக்குப் பின்னர் எத்தனை விதமான சவால்கள் நிறைந்துள்ளன.

அத்தனையையும் சாத்தியமாக்கிய இறைசக்திக்கும், ஆரோக்கியமான உடல் நலத்தையும் மன ஆரோக்கியத்தையும் கொடுத்து தொடர்ச்சியாக என்னை என் பாதையில் பயணிக்க வைத்துக்கொண்டிருக்கும் இயற்கைக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அன்பை வெளிப்படுத்திவிட முடியாதுதான். ஆனால் ‘நன்றி’ என்ற வார்த்தையைவிட ஆகச் சிறந்த வார்த்தை தமிழில் இல்லை என்பதால் இறைவனுக்கும், இயற்கைக்கும் என் வெற்றியை சாத்தியமாக்கிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பிசினஸ் உலகில் பெண்கள் தனித்துவமாக இறங்குவது மிகக் குறைவு என்பதால் நான் வேலைக்குச் செல்லாமல் பிசினஸ் தொடங்கியது குறித்து ஏகப்பட்ட கருத்துக்கள்.

உன் படிப்பை வீணடிக்கிறாய்…
பெரிய நிறுவனங்களில் ஐடி துறையில் முயற்சிக்கலாமே…
நல்ல சம்பளத்தில் அரசு உத்யோகத்தில் நுழையலாமே…
ஆசிரியர் அல்லது பேராசிரியராகலாமே…
திருமணத்துக்குப் பிறகு பிசினஸ் ஒத்துவராது…
அமெரிக்காவில் ‘ஜாம் ஜாம்’என்று செட்டில் ஆவதை விட்டு இங்கிருந்து சொந்த பிசினஸ் ஆரம்பித்து கஷ்டப்படணுமா…

இப்படி ஆயிரம் ஆலோசனைகள். அறிவுரைகள்.

கூடவே…

‘நல்ல மதிப்பெண் வாங்கி இருக்க மாட்டாள்’
‘அரியஸ் இருக்குமா இருக்கும்…’

எல்லாவற்றையும் விட

‘இவளுக்கு அந்த அளவுக்கு பக்தி கிடையாது. அதான் கடவுள் ஒரு நல்ல வேலையைக் கூட கொடுக்கல…. ஏதோ பிசினஸ் அது இதுன்னு அல்லாடறா’

என்ற அபத்தமான கமெண்ட்தான் வேடிக்கை.

இப்படி வெளி உலகில்தான் என் கவனத்தை சிதறடிக்க எத்தனை எத்தனை முயற்சிகள். காரணம் அவர்கள் எல்லோரும் வாழும் வாழ்க்கையை நான் வாழாமல் எனக்கான பாதையை நான் தேர்ந்தெடுத்து வடிவமைக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட சலனம்.

ஆங்கிலத்தில் Peer Pressure என்றொரு சொல்லாடல் உண்டு. அதாவது தன்னைச் சுற்றி இயங்கும் இந்த சமுதாயத்தின் தாக்கத்தால் அல்லது நண்பர்கள் பெரும்பாலானோரின் பழக்க வழக்கங்களினால் அல்லது தாங்கள் விரும்பும் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்களின் தாக்கத்தால் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொண்டு மற்றவர்களை அப்படியே பின்பற்றச் செய்யும் ஒரு பழக்கம்.

இது நேர்மறை பலன்களையும் கொடுக்கலாம் அல்லது எதிர்மறை பலன்களையும் கொடுக்கலாம்.

இந்த பியர் பிரஷரினால்தான் அவர்கள் எண்ண ஓட்டத்துக்கு மாறாக இயங்குபவர்கள் மீது புரியாத விமர்சனங்களை வைக்கும் மனோபாவம். நான் நிறுவனம் தொடங்கியபோதும் அதுதான் நடந்தது.

கல்லூரி மாணவர்களின் நடை உடை பாவனைகளை நன்றாக கவனித்துப் பாருங்கள். அனைவருமே ஒரே மாதிரியாகவே இருப்பதாக தோன்றும். ஒரு இளைஞனிடம் ‘உன் ஹேர் ஸ்டைல் உனக்குப் பிடித்திருக்கிறதா?’ என்ற கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். ‘பிடித்திருக்கிறதா இல்லையா என்பது பொருட்டல்ல, இப்போது இதுதான் ட்ரெண்ட்’ என்பார்கள். தங்கள் பிறந்த நாட்களை குறைந்தபட்சம் 5,000 ரூபாயில் இருந்து தொடங்கி 50,000 வரை செலவு செய்து வித்தியாசமாக கொண்டாடும் கல்லூரி மாணவர்கள்  பெருகிவிட்டார்கள். அந்த ஒரு நாள் கூத்துக்காக தங்கள் அப்பா அம்மாவின் உழைப்பை சுரண்டுகிறோமே என்ற குற்ற உணர்வு எதுவுமே இல்லாமல் பணத்தை வாரிவாரி செலவழிக்கிறார்கள். இதுதான் இளைஞர்களின் பியர் பிரஷர்.

அப்படி தங்கள் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்தால் அவர்களை ஒரு குற்ற உணர்வின் விளிம்புக்கே கொண்டு நிறுத்துவது. வாழ்க்கையே வெறுத்துவிட்டதைப் போல சோகமாக இருப்பது, சாப்பிடாமல் தவிர்ப்பது, அறைக்குள் தாளிட்டுக்கொண்டு மிரட்டுவது என அவர்களின் செயல்பாடுகளின் வீரியம் பெற்றோர்களை பயமுறுத்துகிறது.

இப்படி பிடிவாதம் பிடித்து அப்பா அம்மாவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் நண்பர்களிடம் ‘நான் நன்றாக சீன் போட்டு பணத்தை வாங்கிட்டேன்… வீட்டில் சாப்பிடவில்லை. ஓட்டலில் சென்று சாப்பிட்டேன். அம்மா பேச வந்தால் முறைத்துக்கொண்டு சென்றேன். தங்கையை அடித்தேன். அப்பாவை உதாசினப்படுத்தினேன்…’ என்றெல்லாம் என்ன சொல்லி மகிழ்வார்கள். ஏதோ சாதனை செய்துவிட்ட கொண்டாட்டத்தில், தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் அவலம் என்று உணராமல் தங்கள் பெற்றோரை பற்றி மோசமாக பேசி மகிழ்வார்கள்.

பெற்றோர்களின் பியர் பிரஷர் வேறு மாதிரி.

ஒரு காலகட்டத்தில் பி.ஈ படிக்காவிட்டால் என்னவோ வாழ்வதற்கே தகுதி இல்லாதவர்கள் என்ற மனோநிலை இருந்ததால்தான் தங்கள் பிள்ளைகளை எப்பாடுபட்டாவது இன்ஜினியரிங் சேர்த்துவிட்டார்கள். இது பெற்றோர்களுக்கான பியர் பிரஷர். இப்போது அந்த எண்ணம் மாறிவிட்டதால் பல கல்லூரிகளில் இன்ஜினியரிங் சீட்டுகள் காலியாக உள்ளன. காரணம் பெற்றோர்களின் பியர் பிரஷர் வேறு கோணத்தில் நகர்ந்துவிட்டது.

பெண்களுக்கான பியர் பிரஷர் வண்ண மயமானது.

திருமண நிகழ்ச்சிகளில் கவனித்துப் பாருங்கள். எல்லோருமே ‘ஜிகு ஜிகு’ பட்டுப் புடவை, தங்க வளையல்கள், கழுத்தில் நெக்லஸ் என எல்லா பெண்களுமே பெரும்பாலும் ஒரே அச்சில் வார்த்தாற்போல இருப்பார்கள். இன்னும் ஒருசிலர் மணப்பெண்ணைவிட கூடுதலாகவே அலங்காரம் செய்துகொண்டு யார் மணப்பெண் என்று எண்ணும் அளவுக்கு உடை அணிந்திருப்பார்கள். இது பெண்களுக்கான பியர் பிரஷர்.

மிக பிரமாண்டமாய் பார்டர் வைத்த பட்டுப் புடவை கட்டிக்கொண்டு கழுத்து கை நிறைய தங்க நகைகள் போட்டுக்கொண்டு திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்றால்தான் சிறப்பு, அப்போதுதான் பிறர் நம்மை மதிப்பார்கள் என்று எண்ணுவதும் மற்றவர்களைப் பார்த்து தங்கள் மனதுக்குள் தாங்களே ஏற்றிக்கொள்ளும் பியர் பிரஷர் தான்.

இப்படி இல்லாமல் எளிமையாக பார்டர் வைத்த ஒரு புடவை, சின்னதாக ஒரு செயின், ஒரு கையில் ஒற்றை வளையல், மறு கையில் வாட்ச் என கச்சிதமாக செல்லும் பெண்கள் பிரமாண்டமாய் உடை அணிந்து வந்திருக்கும் பெண்களை விட கொள்ளை அழகாக இருப்பார்கள். அவர்கள் எந்த பியர் பிரஷரையும் ஏற்றிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்குப் பிடித்ததைப் போல வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.

இதுபோல பியர் பிரஷர்களுக்கான காரணங்கள் நிறைய உள்ளன.

பியர் பிரஷர்களுக்கு கட்டுப்படாமல் கட்டற்ற சுதந்திரத்துடன் நேர்மையான பாதையில் ஆனந்தமாக பயணிப்பது ஒரு சுகம். அந்த சுகத்தை நான் அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 54 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon