வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[18] : வெற்றிக்கான ரகசிய கூட்டுப்பொருள் (நம் தோழி)

வெற்றிக்கான ரகசிய கூட்டுப் பொருள்!

ஒவ்வொரு வெற்றிக்கும் உழைப்பு, திறமை, கல்வி, முதலீடு இவற்றை எல்லாம் தாண்டி ஏதேனும் ஒரு ரகசிய கூட்டுப்பொருள் காரணமாக இருக்கும். அதனால்தான் ஒரே படிப்பைப் படித்த ஒத்த திறமையுள்ள சம வயதினர்களின் வெற்றி தோல்விகள் ஒன்றுபோல இருப்பதில்லை.

இன்றும் வீடுகளில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டைகளில் முக்கிய இடத்தில் இருப்பது சாப்பாடு. ‘என்ன இருந்தாலும் என் அம்மா சமைப்பதுபோல் இல்லை’ என பேச்சுவாக்கில் மனைவியின் சமையலை கமெண்ட் அடித்துக்கொண்டே சாப்பிடும் கணவன்கள் எல்லா காலங்களிலும் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது அம்மா சமையலில். அதே உப்பு, புளி, காரம்தான். ஆனாலும் அம்மா சமையலை அடித்துக்கொள்ள முடிவதில்லை.

இப்படிச் சொல்லும் ஆண்களின் வீடுகளில் அம்மாக்கள் மட்டுமே சமையல் அறையில் புழங்கிக்கொண்டிருந்திருப்பார்கள். அப்பாக்கள் காய்கறி கூட நறுக்கித் தந்து உதவியிருக்க மாட்டார்.

அம்மாக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலைக்குச் செல்லாமல் மூன்று வேளையும் நன்றாக சமைத்து பிள்ளைகள் பசி அறிந்து சாப்பாடு போடும் வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பார்.

இதுபோன்ற காரணிகளால் பிள்ளைகள் (அவர்கள் எத்தனை வயதினர் ஆனாலும்) மனதில் சமையல், சாப்பாடு, பசி  என்றாலே அம்மாக்களே மனதில் தோன்றுவார்கள்.

இப்படி தங்களை கவனிப்பதை மட்டுமே பணியாகக் கொண்டிருக்கும் அம்மாக்கள் செய்யும் சமையல் சுவையாகத்தானே இருக்கும். அம்மாக்களின் ‘கவனிப்பு’ தான் ரகசிய கூட்டுப்பொருள்.

மனைவியும் அதே காம்பினேஷனில் சமையல் செய்தாலும் அம்மா தன் சுயத்தையே சமையலுக்காக ஒதுக்கி செதுக்கி வாழ்ந்துவிட்டதால் அவர்களின் சமையலின் ருசியே பல ஆண்கள் மனதில் நீங்காமல் நின்றுவிடுகிறது. இதனால்தான் பல வீடுகளில் மகனுக்குத் திருமணம் ஆன பிறகும் சமையல் அறையை தன் கையைவிட்டுப் போகாமல் பார்த்துக்கொள்கிறார்கள் அம்மாக்கள். அவர்களுக்குத் தெரியும் எந்த இடத்தில் வீட்டினரை தன் வசப்படுத்தி வைத்துக்கொள்ள முடியும் என்ற ரகசியம்.

சாதா டீ விற்றுக்கொண்டிருந்தவர்  சிறிய யோசனை மூலம் ஐஸ் டீயை அறிமுகப்படுத்தி உலகப்புகழ் பெற்ற கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

1904-ம் ஆண்டு அமெரிக்காவில் மிசெளரியின் உள்ள செயின்ட் லூயிஸில் உலகக் கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் ரிச்சர்டு பிளெச்சி டென் என்பவர் டீ ஸ்டால் போட்டிருந்தார். கடுமையான கோடைக் காலமாக இருந்ததால் யாருமே டீ அருந்த வரவில்லை. அவர் மனம் தளரவில்லை. கோடைக்கு இதமாக ஐஸ் கட்டியை டீயில் போட்டு கோடைக்கு இதமாக ஐஸ் டீ கிடைக்கும் என அறிவித்து அதை விற்க ஆரம்பித்தார். புதுவிதமான டீயைப் பருக அவர் ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது. ஐஸ் டீயை கண்டுபிடித்தவர் என்ற பெயரும் பெற்றார்.

இப்படி தங்கள் பணியின் அடிப்படைத் தன்மையை மாற்றாமலேயே சூழலுக்கு ஏற்ப அதில் சிறு மாறுதல்களை மட்டும் செய்து அதில் உச்சத்துக்குச் செல்ல முடியும்.

இவரது வெற்றிக்குக் காரணம் ‘ஐஸ்’ எனும் ரகசிய கூட்டுப்பொருள்.

1992. நம் நாட்டில் கம்ப்யூட்டரின் அறிமுகம் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. சாஃப்ட்வேர் நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த காலகட்டத்தில் நாங்கள் ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனத்தைத் தொடங்கிய போது மற்ற நிறுவனங்களைவிட எங்கள் நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்கும் ஒரு ரகசிய கூட்டுப் பொருள்தான் காரணம்.

என்னவென்று சொல்கிறேன். கேளுங்கள்.

வங்கிகள், பள்ளிகள், மருந்த்துவமனைகள் இப்படி எல்லா பணி இடங்களிலும் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தி அவர்களின் அன்றாடப் பணிகளின் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவாக்கி பேப்பரில் பராமரிக்கும் தகவல்களை கம்ப்யூட்டர் ஷீட்டுகளில் பிரிண்ட் எடுத்தும், ஃப்ளாப்பிகளில் சேகரித்தும் அத்தனையையும் கம்ப்யூட்டர்மயமாக்க வேண்டும் என்பதே.

ஆனால் நாங்கள் நினைத்ததைப் போல அது அத்தனை எளிதான காரியமாக இல்லை. காரணம் கம்ப்யூட்டர் என்பதே படித்தவர்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு சாதனம், ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்கின்ற நம்பிக்கை. இது இரண்டையும் உடைத்தெறியாமல் தொழில்நுட்பத்தை பரவலாக்க முடியாது என்று யோசித்தேன்.

கம்ப்யூட்டரை மொழியுடன் இணைத்து யோசித்தேன். கம்ப்யூட்டரில் டைப் செய்தால் தமிழில் எழுத்துக்கள் வெளிப்பட்டால் எப்படி இருக்கும் என கற்பனை செய்தேன். ஒரு வருடம் ஆராய்ச்சி செய்து (R&D) எங்கள் நிறுவனத்துக்காக ஒரு ஃபாண்ட் ஒன்றை உருவாக்கினேன். அப்போது இண்டர்நெட் எல்லாம் நம் நாட்டில் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

எங்கள் நிறுவன தமிழ் ஃபாண்ட்டை கம்ப்யூட்டரில் நிறுவி அந்தந்த பணி சூழலுக்கு ஏற்ப சாஃப்ட்வேர்களை தயாரித்து கம்ப்யூட்டரையும் நாங்களே அசெம்பிள் செய்து மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து மெல்ல மெல்ல எங்களைச் சுற்றி இயங்கிக்கொண்டிருந்த மளிகைக்கடை, மெடிக்கல் ஷாப் முதற்கொண்டு வங்கிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் மயமக்கினோம்.

பின்னாளில் தமிழுக்கு மட்டுமில்லாமல் இந்தியாவில் எங்கெல்லாம் எங்கள் சாஃப்ட்வேர் பயன்பாட்டுக்கு வருகிறதோ அங்கெல்லாம் அவரவர்கள் தாய்மொழியை தேர்ந்தெடுத்துக்கொண்டால் அந்த மொழியில் சாஃப்ட்வேர்கள் இயங்குமாறு வடிவமைத்தோம்.

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோருக்கு அதை அவர்கள் மனதுக்கு நெருக்கமாக என்ன தேவை என்று யோசித்தபோது மொழி என்பதுதான் என் மனதுக்குள் தோன்றி வழிநடத்திய ‘ரகசிய கூட்டுப்பொருள்’.

எங்கள் நிறுவனத்தின் அஸ்திவாரமே மொழி எனும் ‘ரகசிய கூட்டுப்பொருள்’.

இப்படி ஒவ்வொரு வெற்றியையும் உற்று நோக்கினால் அதன் பின்னணியில் ஏதேனும் ஒரு ரகசிய கூட்டுப்பொருள் அஸ்திவாரமாக இருக்கும்.

நாம் அனைவரும் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கையே எடுத்துக்கொள்ளுங்களேன். அதன் அதிபர் ‘மார்க் ஜூக்கர்பர்க்’ தன் கல்லூரி நாட்களில் தன் நண்பர்களுடன் இணைப்பில் இருப்பதற்காக மிகச் சிறிய அளவில் ஆரம்பித்த ஃபேஸ்புக் இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அவரே கூட அவரது அந்த யோசனை உலகளாவிய வெற்றியை தரும் என்று  நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

அவர் ஹார்ட்வெர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் ஆண்டில் இறுதியில் தங்கள் புகைப்படங்களுடன் தங்கள் விவரக் குறிப்பை எழுதி பதிய வைத்து நினைவுப் புத்தகமாக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். அதை இன்டர்நெட் மூலம் வெளிப்படுத்தினால் யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாமே என்று அவருக்குத் தோன்றிய சிறிய யோசனைதான் அவரது பிரமாண்ட வெற்றிக்கான ‘ரகசியக் கூட்டுப்பொருள்’.

2004 ஆம் ஆண்டு அந்த யோசனையை ‘ஃபேஸ்புக்’ என்ற பெயரில் கல்லூரி வளாகங்களைத் தாண்டி பொதுவெளியில் இன்டர்நெட்டில் செயல்வடிவமாக்கினார்.

அவரது ‘ரகசிய கூட்டுப்பொருள்’ மிக நன்றாகவே வேலை செய்துவருகிறது இன்றளவும்.

இதுபோல ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னணியில் ஒரு ரகசியக் கூட்டுப் பொருள் இருக்கும். ரிஸ்க் எடுத்து செயல்படுத்துவோருக்கு அது அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பணியில் இணைந்து வெற்றியைக் கொடுக்கும். அவ்வளவுதான் வெற்றியின் லாஜிக்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
October  26, 2020

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (அக்டோபர் 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 18

புத்தக வடிவிலேயே படிக்க… நம் தோழி அக்டோபர் 2020

(Visited 57 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon