ஹலோ with காம்கேர் – 301
October 27, 2020
கேள்வி: குற்ற உணர்ச்சிகள் (Guilty Conscience) குறைந்து வருகின்றனவா?
முன்பெல்லாம் தவறு செய்தால் குற்ற உணர்ச்சி இருக்கும். அவர்கள் கண்களிலேயே அந்த குற்ற உணர்ச்சி வெளிப்படும். பேசும் பேச்சில் தடுமாற்றம் இருக்கும். உடல் மொழியில் எங்கேனும் அது வெளிப்படும். மொத்தத்தில் மனதின் ஒரு மூலையில் சிறு புள்ளியாய் எங்கேனும் ஓர் இடத்தில் தவறு செய்ததுக்கான அடையாளம் இருந்துகொண்டே இருக்கும். அந்த குற்ற உணர்ச்சிதான் அவர்களை மீண்டும் தவறு செய்யாமல் இருக்கச் செய்யும் சிறு ஆயுதம்.
ஆனால் இப்போதெல்லாம் குற்ற உணர்ச்சி என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு அது மதிப்பிழந்து விட்டது.
தவறு செய்பவர்களைவிட அவர்களின் தவறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சுட்டிக் காட்ட முற்படும்போது அவர்களை குற்ற உணர்வுக்குள் ஆழ்த்தும் மனிதர்கள் பெருகிவிட்டார்கள்.
சமீபத்தில் ஒரு ஹோமியோபதி மருத்துவமனையில் மருந்தகத்தில் இருந்த பெண் செய்த சிறு தவறினால் அவர்கள் மருந்தகத்தில் அவர்கள் தயாரித்துக்கொடுக்கும் மாத்திரைகளில் குழப்பம் ஏற்பட அவர்களிடம் கேட்கச் சென்றிருந்தோம். எங்கள் தாத்தா, பெரியப்பா அனைவருமே ஹோமியோபதி மருத்துவம் அறிந்தவர்கள் என்பதால் என் அப்பா டாக்டர் சர்டிஃபிகேட் பெறவில்லையே தவிர அனுபவத்தில் அந்த மருத்துவ நுணுக்கங்கள் அறிந்தவர். அதனால் அவர்கள் கொடுத்த மருந்தில் உள்ள தவறை மிக சுலபமாகக் கண்டறிந்தார்.
அந்தப் பெண் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளாமல் எங்கள் மீதே பழியை திருப்பிப் போட்டு வயதானவர் என்ற மரியாதைகூட இல்லாமல் என் அப்பாவை எதிர்த்துப் பேசிக்கொண்டே செல்ல நான் தலையிட்டேன். அப்போதும் அந்தப் பெண் எங்கள் இருவர் மீதே புகார் சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் நானும் அப்பாவும் அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மருத்துவமனை தலைமைக்கு புகார் அளிக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தோம்.
ஆனால், வீட்டுக்கு வந்ததும் எங்களுக்கு நிம்மதி இல்லை. நாங்கள் நியாயத்தை கேட்டதை என்னவோ கடுமையாக நடந்துகொண்டதாக சித்தரித்து அழுது ஆர்பாட்டம் செய்த அந்த இளம்பெண்ணின் முகம் நினைவில் வந்து தொந்திரவு கொடுத்துக்கொண்டே இருந்தது.
பாருங்களேன். தவறு செய்தது அந்த மருத்துவமனையில் உள்ள இளம் பெண். குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது அவர்களிடம் மருந்து வாங்கச் சென்ற எங்களை.
மருத்துவமனை தலைமைக்கு இமெயில் அனுப்பி, அவர்கள் எங்களிடம் போனில் மன்னிப்பு கேட்டு எல்லா சம்பிரதாயங்களும் நல்லபடியாகவே நடந்தேறின என்றாலும் தன் மீது குற்றத்தை வைத்துக்கொண்டு எங்களை குற்ற உணர்வுக்குள் தள்ளிய அந்த இளம் பெண்ணில் முகம் என் நினைவில் இருந்து மறையவே இல்லை.
இப்போதெல்லாம் பெரும்பாலும் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கின்றன.
தாங்கள் தவறு செய்தால் தாங்கள் குற்ற உணர்வுக்கு ஆளாகாமல் அன்பாக அறிவுரை சொல்லும் பெற்றோரை குற்ற உணர்வுக்குள் தள்ளும் பிள்ளைகள் பெருகிவிட்டார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கடிந்தோ அல்லது சற்று குரலை உயர்த்தியோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அவர்கள் தூங்கும்போது ரகசியமாய் அவர்கள் அறைக்குச் சென்று நல்லபடியாக இருக்கிறானா/ளா என பார்த்து கண்ணீருடன் உறங்கச் செல்கிறார்கள். அந்த கண்ணீருக்கு என்ன விலை கொடுக்கப் போகிறார்கள் பிள்ளைகள்.
நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு கண்களில் பட்டது. ஒரு வயதான தந்தை வாக்கிங் வரும்போது தன் செல்போனை தொலைத்துவிடுகிறார். எதிர்படும் நண்பரிடம் சொல்லி வருந்துகிறார். ‘செல்போன்தானே பரவாயில்லை விடுங்கள்’ என ஆறுதல் சொன்னவரிடம் அந்த பெரியவர் ‘வீட்டில் திட்டுவாங்கப்பா…’ என அழுதுகொண்டே சொன்னதாக அந்தப் பதிவில் சொல்லப்பட்டிருந்தது.
உண்மைதான். பல வீடுகளில் பெரியோர்களின் நிலை இதுதான்.
‘போனால் போகிறது விடுங்கப்பா, வேறு செல்ஃபோன் வாங்கிக்கலாம்… செல்போனை பத்திரமா ஒரு தோள்பையில் போட்டு எடுத்துக்கொண்டு போங்கப்பா…’ என்று சொல்லும் பிள்ளைகள் குறைந்து ‘வயசாயிட்டா வீட்டில் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியதுதானே… இருக்கிற வேலைல இவரை வேற கண்கொத்திப் பாம்பா பார்த்துக்க வேண்டியிருக்கு…’ என புலம்பும் பிள்ளைகள் பெருகிவிட்டார்கள்.
சிறுவயதில் தன் தவறுகளை திருத்த முற்படும் பெற்றோர்களையும் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளுகிறார்கள். தாங்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகியும் தன் பெற்றோரை குற்ற உணர்ச்சிக்குள் தள்ளுகிறார்கள்.
குற்ற உணர்வு யாருக்கு வர வேண்டுமோ அவர்களுக்கு வந்தால் அவர்கள் மேம்பட்ட நல்ல குணநலன்களுடன் வாழ்க்கையில் மென்மேலும் சிறப்பாக செயல்பட முடியும். அதைவிட்டு மற்றவர்களை குற்ற உணர்வுக்குள் தள்ளினால் அதன் எதிர்வினையையும் ஏதேனும் ஒருவிதத்தில் அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
நல்லதையே நினைப்போம். நல்லபடியாக வாழ்வோம். பிறரையும் வாழ வைப்போம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software