ஹலோ With காம்கேர் -304 : மன இறுக்கத்தில் இருந்து மீண்டு வருவது எப்படி?

ஹலோ with காம்கேர் – 304
October 30, 2020

கேள்வி: மன இறுக்கத்தில் இருந்து மீண்டு வருவது எப்படி?

ஏதேனும் ஒரு சோகம், வருத்தம், ஏமாற்றம் அல்லது தோல்வி இவை நமக்குள் பெரும் சலனத்தை உண்டாக்கும். அந்த சலனம் சாதாரண சிறு புள்ளியில் இருந்துத் தொடங்கி பெரிதாகிக்கொண்டே வந்து மிகப் பெரிய வட்டமாகி மன இறுக்கம், மனச் சிதைவு என வெவ்வேறு பெயர்களில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கிவிடும்.

இப்படி எந்தக் காரணமும் இல்லாமல் மன இறுக்கமோ அல்லது சோகமோ உண்டாகிறது என்றால் அது ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். தகுந்த மருத்துவரை சந்திப்பதுதான் ஒரே வழி.

நான் சொல்வது மேலே குறிப்பிட்ட காரணங்களில் ஏதேனும் ஒன்றினால் நம் இயல்பில் இருந்து மாறுபட்டு மனதளவில் சோர்வுற்றிருக்கும் நேரங்களில் நம் உற்சாகம் குறையும். கோபம் அதிகம் வரும். எதைப் பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும். எதிர்படுபவர்களிடம் எல்லாம் சிடுசிடுவென எரிந்துவிழத் தோன்றும்.

அந்த நேரத்தில்தான் நம் மனதை கடிவாளம் போட்டு நிறுத்த வேண்டும். மனதுக்கு எப்படிக் கடிவாளம் போடுவது?

கடுமையான வேலையைக் கொடுப்பதன் மூலம் கடிவாளம் போட முடியும்.

மன இறுக்கமா?

‘வேலை வேலைன்னு இல்லாமல் ஓய்வெடுங்கள், இந்த கோயிலுக்குச் செல்லுங்கள், அமைதியான இடத்துக்குச் சென்று தனிமையில் அமருங்கள், தியானம், யோகா செய்யுங்கள், பீச்சுக்குச் சென்று கடல் அலைகளை பார்த்துக்கொண்டிருங்கள்…’ என்றெல்லாம் யாரேனும் அறிவுரை சொன்னால் அதை எல்லாம் தூக்கி ஓரமாக வையுங்கள்.

மன இறுக்கமாக இருக்கும் நேரத்தில்தான் மனதுக்கு அதிக வேலை கொடுக்க வேண்டும். அதற்குப் பழக்கப்பட்ட பாதையில் பரபரவென பறக்க வைக்க வேண்டும்.

திடீரென அதற்குப் பழக்கமே இல்லாத சூழலை ஏற்படுத்தி அறிமுகப்படுத்தினால் அதற்கு குழப்பமே மிஞ்சும். மன இறுக்கம் இன்னும் அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பில்லை.

மனம் அமைதி இல்லாமல் இருக்கும்போது ஓய்வு எடுப்பதை விட நம்மை பிசியாக வைத்துக்கொண்டால் மனஇறுக்கம் குறையும். ஓய்வு நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் தோன்றும். தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும்.

எனவே, மன இறுக்கம் குறைய வேண்டுமானால் அந்த நேரங்களில் கூடுமான வரை ஓய்வெடுக்காதீர்கள். தனிமையில் இருக்காதீர்கள். புதிய முயற்சிகள் எதையும் எடுக்காதீர்கள். வழக்கமாக நீங்கள் செய்யும் பணிகளையே அதி தீவிரமாக செய்யுங்கள்.

மன இறுக்கம் சற்று குறைந்த பின்னர் ஓய்வெடுக்கலாம், தியானம் செய்யலாம், யோகா கற்கலாம், புது வேலைக்கு முயற்சிக்கலாம், அமைதியாக கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கலாம். இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம்.

அப்போது நீங்கள் எடுக்கும் சிறு முயற்சியும் உங்களை புத்துணர்வாக்கும். அதைவிட்டு மன இறுக்கம் அதிகம் இருக்கும் நேரங்களில் புது முயற்சிகளை எடுத்தாலோ அல்லது புது சூழலை அறிமுகப்படுத்தினாலோ அது நிலைமையை இன்னும் மோசமாக்குமே தவிர ஆறுதல் கொடுக்க வாய்ப்பில்லை.

சுருங்கச் சொன்னால், ஓடுகின்ற பாதையிலேயே அதிவேகமாக மனதை ஓட்டிச் சென்று அதை ஜெயிக்க வைக்க வேண்டும் அல்லது ஜெயித்து விட்டோம் என்ற ஓர் உணர்வையாவது கொடுக்க வேண்டும்.

மாற்று பாதையில் ஓடுவது மனம் இறுக்கமாக இருக்கும் நேரங்களில் செய்யக் கூடியது அல்ல. ஓடுகின்ற பாதையில் வழக்கத்துக்கும் மாறாக கூடுதல் வேகத்துடன் ஓடுவது ஒன்றுதான் மன இறுக்கத்தில் இருந்து வெளிவருவதற்கான ஒரே வழி.

முயற்சி செய்து பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 53 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon