ஹலோ with காம்கேர் – 305
October 31, 2020
#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!
கேள்வி: ‘அறம் செய விரும்பு’ – ஒளவை வாக்கு. ‘அறம் செய்’ எனக் கூறாமல், ‘விரும்பு’ என நம்மிடமே சாய்ஸ்விட்டு கூறியது ஏன்? – இந்த கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. ராம்குமார்
நம் மக்களுக்கு அறிவுரை சொன்னால் பிடிக்காது, அறிவுரை சொன்னால் கேட்கமாட்டார்கள் என்று ஒளவை பாட்டிக்கு அன்றே தெரிந்திருக்கிறது என்று நகைச்சுவையாகச் சொல்லலாம்.
உண்மையில் எந்த ஒரு விஷயத்தின் மீதும் நாம் விருப்பப்பட்டால்தான் அதை செயல்படுத்துவதற்கான உத்வேகம் வரும். விருப்பம் இல்லாமல் ஒரு கட்டாயத்தினால் ஒரு செயலை செய்தால் அது தொடர்ச்சியாக நடைபெறாது. உயிர்ப்பாகவும் இருக்காது. வெற்றிகரமாகவும் அமையாது.
இதைத்தானே அன்றே சொன்னாள் ஒளவை பாட்டி ‘அறம் செய விரும்பு’ என்று. ‘அறம் செய்’ என ஒளவை ஆர்டர் போட்டுக் கட்டாயப்படுத்தவில்லை. ‘அறம் செய விரும்பு’ என்று சொல்வதன் மூலம் நல்லது செய்ய ஆசைப்படு என்றே சொல்கிறார்.
ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும். அதை செயல்படுத்தும் வழிமுறைகள் நம் கண்முன்னே வரிசைகட்டி நிற்கும். ஒரு செயலை மனதார விருப்பப்பட்டு செய்யும்போது அந்த செயலை அப்போதைக்கு நல்லபடியாக செய்துமுடிக்க முடிவதோடு தொடர்ச்சியாக அந்த செயலை செய்ய வேண்டும் என்கின்ற நேர்மறை உந்துதலும் நமக்குள் ஏற்படும்.
அத்துடன் நாம் செய்கின்ற ஒரு நல்ல செயல் பிறரையும் செய்யத் தூண்டும்.
விருப்பம் அதற்கான முயற்சி இரண்டும் ஒருங்கிணையும்போதுதான் எந்த ஒரு விஷயமும் முழுமையான வெற்றிபெறும். இதுதான் வெற்றிகரமாகவும் தொடர்ச்சியாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எந்த ஒரு செயலுக்குமான லாஜிக்.
இந்த லாஜிக்கை அன்றே உணர்ந்த ஒளவை பாட்டி ‘அறம் செய்’ என யாரையும் கட்டாயப்படுத்தாமல் ‘அறம் செய விரும்பு’ என சொல்லிவிட்டுச் சென்றிள்ளார்.
அறம் என்பது பொருளாகவோ, பணமாகவோ கொடுப்பது மட்டும் அல்ல. எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம். ஆறறிவுள்ள மனிதன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நமக்கும் இந்த சமுதாயத்துக்கும் நல்லதாய் இருக்கும் விஷயங்களை மட்டும்தானே செய்ய வேண்டும். பிறகு அதை செய்ய ஏன் ஆசைப்பட வேண்டும் என தோன்றலாம்.
இதற்கு தெளிவான விளக்கம் சொல்ல வேண்டுமானால் ஓர் உதாரணம் சொல்கிறேன்.
சாப்பிடுவதற்கு முன் பசியை தூண்டுவதற்காக அல்லது சமன் செய்வதற்காக நாம் சாப்பிடும் பதார்த்தங்களுக்கு அப்பிடைசர் (appetizer) என்று பெயர். பெரும்பாலும் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு முன்னர் நாம் சாப்பிடும் சூப், கருவடாம், பகோடா போன்றவை அப்பிடைசர் பிரிவின் கீழ் வரும்.
வீடுகளில் விருந்து விசேஷங்களின் போது குழந்தைகளை கவனித்திருக்கிறீர்களா?
சாப்பிடவே அடம் பிடிக்கும் குழந்தைகள் ‘பசி பசி’ என சொல்லி சமையல் அறையையே சுற்றி சுற்றி வருவார்கள். இதற்குக் காரணம் அங்கு கமகம எண்ணெய் வாசனையில் தயாராகும் அப்பளமும், வடையும்தான். சும்மா ‘இதையே முழு சாப்பாடாக சாப்பிட்டு வயிற்றை அடைத்துக்கொள்ளாதீர்கள்’ என சொல்லி அம்மாக்கள் அந்த குழந்தைகள் கையில் ஓரிரு அப்பளம் வடைகளைக் கொடுத்தனுப்புவார்கள். சாப்பாட்டிலும் அவை கிடைக்கும். ஆனாலும் குழந்தைகளுக்குக் ‘கொறிப்பதற்காக’ கொடுத்து அவர்களை சாப்பாடு சாப்பிட வைக்கும் அம்மாகளின் முயற்சி இது.
ஆம். அப்பிடைசர் என்பது முழு சப்பாடு அல்ல. சாப்பிடுவதற்கு முன்னர் ‘கொறிப்பதற்காக’ நாம் எடுத்துக்கொள்ளும் பதார்த்தம். அவ்வளவே. ஆனால் அதுதான் நாம் சாப்பிடும் முழு சாப்பாட்டையும் சுவைத்து சாப்பிட வைக்கும் தூண்டுகோல்.
இதே அப்பிடைசர் லாஜிக்கைத்தான் நம் ஒளவைப் பாட்டியும் பயன்படுத்தி உள்ளார்.
வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டியது அறம் எனப்படும் நல்ல விஷயங்களை மட்டும்தான். வாழ்க்கை முழுவதும் தொடர்ச்சியாக அறம் செய்வதற்கு அப்பிடைசர் போல இருப்பதே ‘அறம் செய்ய வேண்டும்’ என்ற தீராத தூண்டுதல்தான். அந்தத் தூண்டுதலை ‘அறம் செய விரும்பு’ என்று சொன்னதன் மூலம் நமக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டியுள்ளார் ஒளவை பாட்டி.
சுருங்கச் சொன்னால், அறத்தை ‘அப்பிடைசர்’ போல நமக்கு கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார் ஒளவை.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 05, 2020 வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/