ஹலோ With காம்கேர் -318: தீபாவளி லேகியம் செய்துட்டீங்களா?

ஹலோ with காம்கேர் – 318
November 13, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: தீபாவளி லேகியம் செய்துட்டீங்களா?

பொதுவாக எல்லோருக்கும் தீபாவளி என்றாலே இனிப்பும் காரமும், பட்டாசும் புதுத்துணியும்தானே நினைவுக்கு வரும். எனக்கு தீபாவளி லேகியம்தான் முதலில் நினைவுக்கு வரும். அதன் பின்னர்தான் தீபாவளி தொடர்பான கொண்டாட்டங்கள்.

நேற்று வெளியே நல்ல மழை. கொடைக்கானல் ஊட்டிபோல அடந்த குளிர். சுடச்சுட ‘லெமன் டீ’ போட்டு சாப்பிட்டுவிட்டு வேலைகளை ஆரம்பித்தோம். இரண்டு மூன்று மணி நேரங்கள் வீடே பலகார சுவையுடன் மணந்தது. இரண்டு நாட்களாய் சமையல் அறைக்கு தீபாவளிக் களை வந்துவிட்டது.

தின்பண்டங்களை தயார் செய்யும்போதே மாவினால் பிள்ளையார் பிடித்து சுவாமிக்கு நிவேதனம் வைத்துவிட்டுதான் வேலைகளை ஆரம்பிப்போம்.

எங்கள் வீட்டில் நேற்று இனிப்பும், காரமும் தயார் ஆனது. தீபாவளி லேகியம் செய்துவிட்டார் அம்மா.

இன்று தீபாவளி லேகியம் தயார் ஆகிவிடும். சமையல் அறையை ஒட்டி இருக்கும் பூஜை அறையில் இரவே அப்பா புதுத்துணி, பட்டாசு எடுத்து வைத்துவிடுவார். இனிப்பு கார வகைகளும் தீபாவளி தினத்தன்று காலையில் சுவாமிக்கு முன் தயாராய் இருக்கும்.

ஓமப்பொடியும், மைசூர் பாகும் உங்கள் பார்வைக்கு. சாமர்த்தியம் உள்ளவர்கள் எடுத்து சாப்பிடுங்கள்.

அம்மாவின் தீபாவளி லேகியம் செய்யும் முறையை விளக்கியுள்ளேன். முடிந்தவர்கள் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுங்கள்.

தீபாவளி லேகியம் செய்யும் முறை!

தேவையானவை

1. பனை வெல்லம் – 500 கிராம்
2. நல்லெண்ணெய் – 25 கிராம்
3. நெய் – 25 கிராம்
4. தேன் – 25 கிராம்
5. சுக்கு – 25 கிராம்
6. சித்திரத்தை – 25 கிராம்
7. மிளகு – 25 கிராம்
8. ஜீரகம் – 25 கிராம்
9. ஓமம் – 25 கிராம்
10. கண்டதிப்பிலி – 25 கிராம்
11. அரிசி திப்பிலி – 25 கிராம்
12. விரளி மஞ்சள் – 1

செய்முறை

1. மேலே குறிப்பிட்ட சாமான்களில் 5-12 வரை எல்லாவற்றையும் வாணலியில் லேசாக சூடுபடுத்திக்கொள்ளவும்.
2. அவற்றை மிக்ஸியில் பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
3. பனை வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
4. வெல்லம் கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.
5. அதை மறுபடியும் அடுப்பில் வைத்து ஒரு கம்பிப்பாகு பதம் வரும்வரை காய்ச்சிக்கொள்ளவும்.
6. நாம் தயார் செய்துள்ள பவுடரை பாகில் நிதானமாகக் கொட்டி அடுப்பில் வைத்துக் கிளறவும்.
7. சிறிது கெட்டியானதும் நல்லெண்ணெய் விட்டு கிளறவும்.
8. பிறகு நெய் விட்டுக் கிளறவும்.
9. ஓரளவுக்கு லேகியப் பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடவும்.
10. கை சூடு பொறுக்கும் அளவுக்கு ஆறியவுடன் சிறிய உருண்டையாக உருட்டிப் பார்க்கவும்.
11. உருண்டையாக வராமல் நீர்த்திருந்தால் மீண்டும் அடுப்பில் வைத்து 2-3 நிமிடங்கள் கிளறவும்.
12. பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆறியவுடன் தேனைவிட்டு நன்றாகக் கிளறவும்.
13. காற்றுக்புகாத பாத்திரத்தில் எடுத்துவைத்து, ஸ்பூன் போட்டு பயன்படுத்தினால் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

அனைவருக்கும் இனிப்பான பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 142 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon