ஹலோ With காம்கேர் -331: இந்த மழையிலா வாக்கிங் போகப் போறீங்க, வழுக்குமே?

ஹலோ with காம்கேர் – 331
November 26, 2020

கேள்வி: இந்த மழையிலா வாக்கிங் போகப் போறீங்க, வழுக்குமே?

தினமும் மொட்டை மாடியில் என் செல்ல பிள்ளைகளுக்கு  (காக்காய், புறா, அணில், குருவி, கிளி) அரிசி, பிஸ்கட், கருவடாம் போன்றவற்றை காலை வாக்கிங்கின்போது போடுவது வழக்கம். தவிர முதல்நாள் இரவு என்ன டிபன் தயார் செய்கிறோமோ அதையும் அவற்றுக்கு எடுத்து வைத்துவிட்டுத்தான் நாங்களே சாப்பிடுவோம். ஏனென்றால் அரிசி பிஸ்கட்டுகளைவிட காகங்களுக்கு இட்லி தோசை சப்பாத்தி போன்ற டிபன் வகைகள் மிகவும் பிடிக்கும். ரசித்து ரசித்து சாப்பிடும்.

மழை நாட்களில் மழை நிற்கும் இடைவெளியில் சென்று என் செல்ல பிள்ளைகளை கவனித்துவிட்டு வருவது வழக்கம்.

ஒவ்வொரு மழை நாளின்போதும் நான் மாடிக்குக் கிளம்பும்போது எதிர்படும் என் பக்கத்து வீட்டு பெண்மணி ‘இந்த மழையிலா வாக்கிங் போகப் போறீங்க, வழுக்குமே…’ என்று சொல்வார்.  நானும் ‘வாக்கிங் இல்லை… பறவைகளுக்கு சாப்பாடு வைக்கப் போகிறேன்…’ என்பேன்.

வழக்கமான கேள்வி, வழக்கமான பதில். நேற்றும் அப்படியே. பதில் சொல்லிவிட்டு மழை நீரில் குளித்திருந்த படிகளில் கவனமாக காலை வைத்து நடந்து மாடிக்குச் சென்றேன்.

சாதாரண நாட்களில் 30 முதல் 40 பறவைகள் வரை வந்து சாப்பிடும். மாடி கதவை நான் திறக்கும் சப்தம் கேட்கும் முன்னரே மொட்டைமாடி சுவரில் வரிசையாக உட்கார்ந்திருக்கும் பறவைகள் பறந்து வந்து கதவுக்கு அருகில் வந்து குழுமிக்கொண்டு என் கால்களைச் சுற்ற ஆரம்பித்துவிடும்.

மழை நாட்களில் அவை எங்கு செல்லும், எப்படி சாப்பிடும் என்ற கவலை எனக்குண்டு. அதனாலேயே மழை நாட்களில் மழை நிற்கும் சிறிய இடைவெளியில் சாப்பாடு போட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

நேற்றும் அப்படித்தான் கொட்டிக்கொண்டிருந்த மழை சில நிமிடங்கள் நின்றது. மாடிக்கு சாப்பாடு எடுத்துச் சென்றேன். வழக்கமாக காகங்களும் புறாக்களும் வரிசையில் உட்கார்ந்திருக்கும் சுவர் வெறுமையாக இருந்தது.

சாப்பாட்டை போட்ட பிறகு மழையில் நனைந்ததால் உடலை சிலிர்த்தபடி பத்து பதினைந்து காகங்களும் புறாக்களும் பறந்து வந்து சாப்பிட்டன. அணில்களும், குருவிகளும், எப்போதேனும் வரும் பச்சைக் கிளிகளும் மிஸ்ஸிங்.

ஆங்காங்கே இரண்டிரண்டு காகங்களாய் ஜோடியாய் அமர்ந்து அடுத்து எங்கு செல்வது, மழையில் நனையாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தபடி அமர்ந்திருந்தன.

தென்னை மரங்கள் ஆடி ஓய்ந்து, அடுத்த கட்ட ஆட்டத்துக்காக ஆசுவாசப்படுத்திக்கொள்வதைப் போல் மெல்ல அசைந்துகொண்டிருந்தது.

ஒற்றை புறா ஒன்று வழக்கம்போல் ஒய்யாரமாய் கழுத்தை நீட்டி நீட்டி ஆட்டியபடி எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

நானும் பேரமைதியான அந்த காலைப் பொழுதை சில்லென்ற குளிர் காற்றை அனுபவித்தபடி சில நிமிடங்கள் நின்றிருந்தேன்.

காகங்களும், புறாக்களும் சென்ற பிறகு நானும் கிளம்பத் தயாரானேன்.

நாளை இந்த காட்சிகள் எப்படி மாறுமோ என எண்ணியபடி கவனமாக நடந்து வீட்டுக்குள் அடைந்தேன்.

இன்றைய பொழுது நல்லபடியாக செல்ல வேண்டுமே என்ற வேண்டுதலுடன் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon