ஹலோ With காம்கேர் -332: பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தானே பெற்றோர்? (SANJIGAI108.com)

ஹலோ with காம்கேர் – 332
November 27, 2020

கேள்வி: பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தானே பெற்றோர்?

பெற்றோர்கள் குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். உணவு, உடை, படிப்பு, வேலை என எல்லாவற்றுக்கும் மனதளவிலும் உடலளவிலும் அனுசரணையாக இருக்கிறார்கள். ஆனால் படித்து முடித்து அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவர்களின் மாத வருமானம் என்ன என்பதைச் சொல்வதில்லை. பல நேரங்களில் தன் தேவைகளை பெற்றோரிடம் கேட்டு உரிமைப் போர் நடத்தி பெற்றோரின் கடமையை உணர்த்துபவர்கள், வெளிப் படையாக தன் வருமானத்தை கூற மறுக்கிறார்கள்.. குடும்பத்திற்கு தர வேண்டாம், ஆனால் எவ்வளவு என்பதை கூறுவதும் கடமை தானே. சில இளைஞர்களே இப்படி இருக்கின்றனர். இவர்களுக்கு கடமையை உணர்த்துவது எப்படி – திருமிகு. ராம்குமார்.

உண்மைதான். பெற்றோர் என்னதான் பார்த்துப் பார்த்து தன் உள்ளங்கைகளில் வைத்துத் தாங்கினாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் தங்களை ‘ப்ரைவேட்’ என்ற பிரைவசி வட்டத்துக்குள் வைத்துக்கொள்கிறார்கள். தன் தேவைகள் முடியும்வரை ‘பப்ளிக்’ மோடில் இருப்பவர்கள், தேவைகள் முடிந்து சுயமாக இயங்க ஆரம்பித்தவுடன் ‘பப்ளிக்’ மோடை பெற்றோருக்கு அறிவிக்காமலேயே ‘ப்ரைவேட்’ மோடாக மாற்றிக் கொள்கிறார்கள்.

பெற்றோர் அரவணைப்பில் வளரும் குழந்தைகள்தான் மனம் விட்டு பெற்றோருடன் பேசுகிறார்கள். தங்கள் பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான புரிதல் நன்றாக இருக்கிறது. தனித்தனி தீவுகளில் வசிப்பதைப் போல ஒரே வீட்டில் வாட்ஸ் அப்பிலும், வீடியோ காலிலும் பேசிக்கொள்ளும் குடும்பங்கள் பெருகியதும்கூட மனித உறவுகளுக்குள்ளான இடைவெளிக்கு முக்கியக் காரணமாகச் சொல்லலாம்.

ஒரு சில வீடுகளில் பெற்றோர்கள் தனி அறையிலும் பிள்ளைகள் தனி அறையிலும் உறங்குவதைக் காணலாம். இத்தனைக்கும் பிள்ளைகளுக்கு 12, 13 வயதுதான் இருக்கும். இதுதான் நாகரிகம். முற்போக்கு சிந்தனை. மேலை நாட்டுக் கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு அதற்கு சப்பைக் கட்டு வேறு கட்டுவார்கள். பெற்றோர் செய்யத் தொடங்கும் தவறு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

இது மேலை நாட்டுக் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொள்ளாததன் விளைவுதான்.

ஒருமுறை இந்திய நாட்டு உயர் கல்விக்கும், அயல் நாட்டு உயர்கல்விக்குமான ஒப்பீடு என்ற தலைப்பில் ஆவணப்படம் எடுக்க அமெரிக்காவில் மிசெளரி பல்கலைக்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தபோது ஒரு பேராசிரியர் (அமெரிக்கர்) மூலம் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

அவரது மகள் படித்து முடித்து வேலைக்காக வெளியூர் செல்கிறாள். மகள் வெளியூர் சென்ற நாளுக்கு அடுத்த நாள் மிகவும் சோர்வாக இருந்தார். மகள் வெளியூர் சென்றதால் சோகமா என்று கேட்டதற்கு ‘அது அவள் கேரியர்… அவளுடைய பாதை… அவள் பாதையில் அவள் பயணிக்க இருக்கிறாள்… நான் ஏன் சோகமாக இருக்க வேண்டும்… நோ செண்டிமெண்ட்…’ என்று மிக சாதாரணமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு தன் வேலையில் கவனமாக இருந்தார். ஆனால் மகளைப் பிரிந்த சோகம்தான் அவர் சோர்வுக்குக் காரணம் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தது.

அன்று மதியம் ஒரு ஷாப்பிங் மாலுக்கு நான் சென்றிருந்தபோது அவர் போட்டோ ஃப்ரேம் வாங்குவதற்காக வந்திருந்தார். போட்டோ ஃப்ரேமில் அவர் மகளுடன் அவர் இருப்பதைப் போன்ற புகைப்படத்தை வைத்து கிஃப்ட் பேக் செய்துகொண்டார்.

அதை கவனித்த நான் சிரித்தபடி ‘நோ செண்டிமெண்ட்…’ என்று அவர் சொன்ன அந்த வார்த்தையை மனதுக்குள் கொண்டு வந்து ரசித்தபடி அவரை பார்க்க, என் மனக்குறிப்பை முகக்குறிப்பால் தெரிந்துகொண்டு ‘Today I am going to meet my daughter in her workplace…’ என்று சொல்லியபடி விடைபெற்றார். 4 மணி நேரம் கார் பயணம் செய்து மகளைப் பார்க்கக் கிளம்பிச் சென்றவரின் அன்பை மிகவும் ரசித்தேன். அந்த அன்பு வெகு அழகாக இருந்தது.

யார் சொன்னது மேலைநாட்டினருக்கு செண்டிமெண்ட் கிடையாது என்று?

இந்த உதாரணம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். அவ்வளவுதான். இவரைப் போல பாசத்தில் கட்டுண்ட எத்தனையோ குடும்பங்கள் அங்கும் உள்ளன.

அவர்கள் இந்தியர்களைப் பார்த்து கேட்கும் ஆச்சர்யப்பட்டு கேட்கும்  ஒரு கேள்வி என்ன தெரியுமா?

‘எப்படி நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பங்களைவிட்டு இவ்வளவு தொலைவு பிரிந்து வந்து வருடக்கணக்கில் வாழ்க்கையை நடத்துகிறீர்கள்?’

இவர்கள் ஏன் இப்படி கேட்கிறார்கள் தெரியுமா?

இவர்கள் அப்பா, அம்மா, குழந்தைகள், உறவினர்கள் என தனித்தனியாக வாழ்ந்தாலும், அனைவரும் மிக அருகருகே தேவையென்றால் சில மணிநேர கார் பிரயாணத்தில் சென்று பார்த்துவிடும் தொலைவில்தான் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி நம் கதைக்கு வருவோம்.

என் மகன் / மகள் இரவு முழுவதும் படித்துக்கொண்டே இருந்துவிட்டு இப்போதுதான் உறங்கவே சென்றான்(ள்) என காலை எட்டு மணிக்குப் பெருமை பேசும் பெற்றோர்கள் பெருகிவிட்டார்கள். இரவு முழுவதும் அவர்கள் என்ன செய்தார்கள் என்று நோட்டம் விட வேண்டாம், என்ன செய்கிறார்கள் என்பதை இயல்பாக தெரிந்துகொள்ளக் கூட விரும்புவதில்லை பெற்றோர்கள்.

அப்படியே கவனித்தாலும் அவன்(ள்) என்ன செய்கிறான்(ள்) என்று எங்களுக்குத் தெரியவா / புரியவா போகிறது என கேட்கும் பெற்றோர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உங்களுக்குப் புரிந்தாலும் புரியாவிட்டாலும், தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அவர்கள் படிக்கும் / பணி செய்யும் அறைக்குள் பர்மிஷன் கேட்காமல் இயல்பாகச் சென்று வரும் அளவுக்காகவது உங்கள் உரிமைகளை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எதையுமே கேட்க வேண்டாம். உங்கள் நடமாட்டமே அவர்களை எச்சரிக்கும்.

அதுபோல படித்து முடித்து வேலைக்கு சென்றுவிட்டால் அவர்களை தங்கள் குழந்தைகளாக கருதாமல் ஏதோ வேற்று மனிதராக பாவித்து தனி மரியாதை கொடுக்கும் பெற்றோர்களும் பெருகிவிட்டார்கள்.

‘என் மகனுக்கு / மகளுக்கு என்ன சம்பளம் என்றே எனக்குத் தெரியாதுப்பா… நான் அதில் எல்லாம் தலையிடுவதில்லை… அவனை(ளை) நம்பி நாங்கள் இல்லை. எங்களுக்கு பென்ஷன் வருகிறது…’ என தோள்குலுக்கி பெருமைப் பேசும் பெற்றோர்களை பரவலாகக் காண முடிகிறது.

‘பாவம், குழந்தை இரவு பகலா உழைக்கிறான்(ள்), கொஞ்சம் ரிலாக்சேஷனுக்கு சனி ஞாயிறு நண்பர்களுடன் இருக்கட்டுமே…’ என நினைத்து அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார் என்பதுபோன்ற விஷயங்களைக் கூட தெரிந்துக்கொள்ளாத பெற்றோர்களை என்னவென்று சொல்வது?

இரவு பகலாய் உழைத்தால் என்ன… அதுதானே வாழ்க்கை… நீங்கள் உழைக்கவில்லையா… நீங்கள் கஷ்டப்படவில்லையா… நீங்கள் செய்யாததையா உங்கள் பிள்ளைகள் செய்துவிடப் போகிறார்கள். உங்கள் காலத்தில் அந்த சூழலுக்கு ஏற்ப நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தீர்கள். இந்த காலத்தில் இன்றைய சூழலுக்கு ஏற்ப கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். அவ்வளவுதானே.

பெற்றோர்கள் செய்யும் மற்றொரு முக்கியமான தவறு என்ன தெரியுமா?

தங்கள் மகனின்(ளின்) சம்பளம் என்ன என்று வாயைத் திறந்து கேட்காமல் இருப்பதுதான். அப்படி கேட்பது என்னவோ தங்கள் கெளரவப் பிரச்சனையாக நினைப்பது ஒருபுறம். கேட்டு சரியான பதில் கொடுக்காமல் ‘அதெல்லாம் உனக்கெதற்கு?’ என்று அலட்சியப்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் ஒரு பக்கம்.

‘நாங்கள் ஒன்றும் உன் சம்பளத்தை நம்பி இல்லை…’ என்ற மனப்பாங்கு நல்லதுதான். ஆனால் அவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள், என்ன வேலையில் இருக்கிறார்கள், என்ன சம்பளம் வாங்குகிறார்கள் என்ற அடிப்படை விஷயங்களை இயல்பாகக் கூட பேசி தெரிந்துகொள்வதில்லை என்பதுதான் வேதனை.

பிள்ளைகள் அவர்களாகவும் சொல்வதில்லை, பெற்றோர்களும் கேட்பதில்லை.

இப்படி பிள்ளைகளிடம் இருந்து தாங்களே விலகி ஒரு வட்டத்தை தங்களுக்குள் போட்டுக்கொண்ட பிறகு பிள்ளைகள் தங்கள் தேவைகளுக்கும், உரிமைப் போர்களுக்கும் மட்டும் தங்களை நாடி வந்து சுயநலமாக தங்களைப் பயன்படுத்திக்கொள்ளும்போது அழுது என்ன பயன்?

எத்தனை வயதானால்தான் என்ன, உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தான் பெற்றோர். உங்கள் பிள்ளைகளுக்கு பிள்ளைகள் பிறந்தாலும், உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பிள்ளைகள்தானே. அந்த உரிமையை ஏன் விட்டுக்கொடுக்கிறீர்கள்.

குறைந்தபட்சம் திருமணம் குழந்தைகள் என அவர்களுக்கு ஒரு கமிட்மெண்ட் வரும்வரையாவது உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளுங்களேன். அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம், ஆனால் அவசியமானதைக் கூட கண்டும் காணாமல் விட்டுவிட்டு பின்னால் புலம்புவதால் என்ன பயன்?

யோசியுங்கள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 3,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/

(Visited 2,144 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon