ஹலோ with காம்கேர் – 333
November 28, 2020
கேள்வி: சிறுவயதில் உங்கள் பிள்ளை சாப்பிட மறுத்தால் என்ன செய்வீர்கள்?
‘வளர்ந்த குழந்தைகள் தங்கள் சம்பளத்தைக் கூட பெற்றோரிடம் சொல்வதிலையே என்ன செய்வது’ என்ற கேள்விக்கான பதிலை எழுதி இருந்தேன்.
அதற்கு நான் கொடுத்திருந்த பதிலுக்கு ஒருசிலர் ‘எவ்வளவு கேட்டும் அவர்கள் சொல்வதில்லை, நாம் கேட்டுத்தான் அவர்கள் சொல்ல வேண்டுமா, அவர்களாக அல்லவா சொல்ல வேண்டும்’ என்று பதில் கொடுத்திருந்தார்கள்.
இந்த ‘அவர்களாக அல்லவா சொல்ல வேண்டும்?’ என்ற ஈகோ-வைத்தான் விட்டுவிடச் சொல்கிறேன். உங்களில் யாருக்கேனும் இந்த ஈகோ என்ற வார்த்தைப் பிடிக்கவில்லை என்றால் ‘ஈகோ’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘எதிர்பார்ப்பு’ என்ற வார்த்தையைப் பொருத்திக்கொள்ளுங்களேன்.
திருமணம், குழந்தை என அவர்களுக்கான குடும்பம் உருவாகும் வரையிலாவது பெற்றோர்களுக்கு பிள்ளைகள் சம்பளம் தெரிவதுதான் உத்தமம். பெற்றோர்கள் பிள்ளைகளின் சம்பளத்தை எதிர்பார்த்து இல்லை என்றாலும் இதே லாஜிக்தான்.
பிள்ளைகள் தங்கள் சம்பளத்தை பெற்றோரிடம் சொல்வது என்பது வெறும் பணம் காசு விஷயத்துக்காக மட்டும் அல்ல. அதைக்கூட பெற்றோரிடம் சொல்ல முடியவில்லை அல்லது சொல்ல மனதில்லை அல்லது சொல்லத் தோன்றவில்லை என்றால் பிறகென்னப் பிணைப்பு இருக்கப் போகிறது பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில்?
திருமணத்துக்கு மணமகனோ, மணமகளோ பார்க்க வேண்டும் என்றால் மகன் / மகள் என்ன சம்பாதிக்கிறான்(ள்) என்பதையும் சொல்ல வேண்டியிருக்குமே? அதெப்படி அந்த நேரத்தில் கூட தன் சம்பளத்தை சொல்லாமல் இருப்பார்கள் பிள்ளைகள்.
அப்படியே சொல்லவில்லை என்றாலும் திரும்பத் திரும்ப கேட்டுகொண்டே இருக்க வேண்டியதுதான். வேறென்ன செய்வது?
உங்கள் பிள்ளைகள் தானே அவர்கள். குழந்தையாக இருக்கும்போது அவர்கள் சாப்பிட மறுக்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.
‘நான் கொடுத்து சாப்பிட மறுக்கிறார்கள், என்னை மதிப்பதில்லை, நான் கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிடுவதில்லை… அதனால் இனி சாப்பாடு அவர்களுக்குத் தயார் செய்யப் போவதில்லை’ என எந்த அம்மா அப்பாவாவது அலுத்துக்கொண்டு ஒதுங்கியதுண்டா… பிள்ளைகளை ஒதுக்கியதுண்டா?
இல்லைதானே…
அந்தக் குழந்தைக்கு விதவிதமாக, வெவ்வேறு பதத்தில், வித்தியாசமான பதார்த்தங்கள் செய்து அவர்களை எப்படியாவது சாப்பிட வைக்க எத்தனை முன்னெடுப்புகள் செய்கிறீர்கள்?
சாப்பிடும் தட்டு, சாப்பிடும் சூழல் என எதில் எல்லாம் மாற்றங்கள் செய்து அவர்களை சாப்பிட வைக்க முடியுமோ அத்தனையையும் செய்கிறீர்கள் தானே?
அந்த லாஜிக் தானே எல்லாவற்றிலும் இருக்க வேண்டும்?
வளரும் பிள்ளைகள் எப்படி இருந்தாலும் பெற்றோர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு விதமாக பேசித்தான் அவர்களிடம் பிணைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒரே மாதிரி கேள்வி கேட்காமல் கேள்வியை மாற்றி மாற்றி கேளுங்கள். ஒரே மாதிரி பேசி போரடிக்காமல் அவர்கள் போக்கில் சென்று அவர்களுக்கு ஏற்றவாறு பேசுங்கள். எப்படி சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு அடுத்தடுத்த நாள் வெவ்வேறு விதமான டிஷ்கள் செய்து சாப்பிட வைக்க முயல்கிறீர்களோ அதுபோலவே.
மாற்றங்கள் எல்லாம் ஓரிரு நாட்களில் உருவாகிவிடாது. அது ஒரு தொடர் நிகழ்வு. எந்த இடத்தில் விட்டுப் பிடிக்க வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுப் பிடிக்க வேண்டும். எந்த இடத்தில் தட்டிக் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் தட்டிக்கொடுக்க வேண்டும். ஆனால் ஒருபோதும் தள்ளிவைத்து விடாதீர்கள். நீங்களும் ஒதுங்கி வந்து விடாதீர்கள்.
இரண்டில் எதை நீங்கள் செய்தாலும் சேதாரம் உங்களுக்குத்தான்.
கேள்வி கேட்பது பெற்றோரின் கடமை மட்டுமல்ல உரிமையும்கூட. பதில் சொல்வது பிள்ளைகளின் தலையாயக் கடமை. இரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கும்போது அங்கு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான பிணைப்பு சுமூகமாக இருக்கும்.
அவரவர் கடமையை அவரவர்கள் செய்யத் தவறினால் விளைவு அதற்கேற்றாற்போல்தான் இருக்கும்.
பிள்ளைகள் கேட்பதில்லை என பெற்றோர்கள் பேசாமல் தவிர்ப்பதும், பெற்றோர் கண்டுகொள்வதில்லை என பிள்ளைகள் ஒதுங்குவதும் ஆரோக்கியமான குடும்ப அமைப்புக்கு நல்லதல்ல.
சிந்திப்போம்.
எப்படி செய்தாலும் பிள்ளைகள் மாறுவதில்லை. அவர்கள் போக்கில்தான் இருக்கிறார்கள் என்றால் கவலைப்படாதீர்கள். கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. இதுதான் வாழ்க்கை. இப்படித்தான் வாழ்ந்து கடக்க வேண்டும். பிள்ளைகளால் பிரச்சனை இல்லை என்றால் வேறு விதமான பிரச்சனை உங்களுக்கு உண்டாகும். அதை தீர்ப்பதற்குப் போராட வேண்டி இருக்கும்.
எந்த சூழலிலும் உங்கள் கடமையை மட்டும் செய்து கொண்டே இருங்கள். பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும் மேலும் மேலும் பந்தமும் பிணைப்பும் கீழ்நோக்கி இறங்காமலாவது இருக்கும்.
ஆன். வாழ்க்கையில் மாற்றம் என்பது ஏற்றம் மட்டும் அல்ல, இறக்கம் இல்லாமல் இருப்பதும்தான்.
முக்கியமான ஒருவிஷயம், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைப்பதில்லை. பெரும்பாலும் கிடைத்ததை / இருப்பதை வைத்துக்கொண்டுதான் கடந்து செல்ல வேண்டியிருக்கும். என்னதான் ஆலோசனை கொடுத்தாலும், கவுன்சிலிங் சென்றாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்றாடம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகளும் சூழல்களும் ஆயிரம் இருக்கும். ஆலோசனைகளும், கவுன்சிலிங்குகளும் பிரச்சனையை முழுமையாக சரி செய்ய உதவுவதைவிட பிரச்சனைகளை சமாளிக்கவே உதவி செய்யும் என்பதை நினைவில் வையுங்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software