Announcement – ஹலோ With காம்கேர்: விவாதக்களம் அல்ல!

புரிதலுக்காக மீண்டும் சிறு விளக்கம்!

முன் குறிப்பு: இதற்கு மேல் புரியும்படி சொல்ல எனக்கு நேரம் இல்லை என்பதால் ஒருமுறைக்கு இருமுறையாக படித்து புரிந்துகொள்ளுங்கள்!

அனைவருக்கும் வணக்கம். என் பதிவுகளைப் படித்துவரும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

என்னுடைய பதிவுகளில்… ஒரு வரியில் பதில் சொல்லிவிடக் கூடிய கேள்விகளுக்குக்கூட மிக விரிவாக எல்லோருக்கும் புரியும்படி விளக்கி விரிவாக எழுதி வருகிறேன் என்பது என் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து வரும் நீங்கள் அனைவரும் அறிந்ததே.

மேலும் நான் கொடுக்கும் விளக்கங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க நடைமுறையில் ப்ராக்டிகலாக செயல்படுத்தக் கூடியவையே. இன்னும் சொல்லப் போனால் நானும் பின்பற்றி மற்றவர்களுக்கும் ஆலோசனையாகக் கொடுத்து நடைமுறையில் வெற்றி அடைந்த ஆலோசனைகளையே பதிவிடுகிறேன். எழுதுகிறேன். பகிர்கிறேன். ஆகவே, என் பதிவுகள் அனைத்தும் கற்பனை எதுவும் கலக்காத அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட அனுபவப் பதிவுகள்.

ஏனெனில் என் அனுபவம், என் குடும்பத்தினரின் அனுபவம், என்னைச் சுற்றி இயங்கும் இந்த சமுதாயத்தின் அனுபவம், என் நிறுவன ஊழியர்களின் அனுபவம் என எனக்கு எதிர்படும் / என்னைக் கடந்து செல்லும் / நான் கடந்து வரும் அனைவரின் அனுபவங்களின் தொகுப்பையே பதிவுகளில் எழுதி வருகிறேன்.

எந்த புத்தகத்தில் இருந்தும் எழுதுவதற்காக தேடி எடுத்து எழுதுவதில்லை. அதாவது ரெஃபரென்ஸ் எடுத்தெல்லாம் எழுதுவதில்லை. அதற்கு நேரமும்  இல்லை.

அதுபோல மேம்போக்காக சிந்தித்தும் எழுதுவதில்லை.

குறிப்பாக நிறைய பெற்றோர் என்னிடம் தங்கள் குழந்தைகளின் (சிறு வயது குழந்தைகள் மட்டுமல்ல, வளர்ந்த குழந்தைகளும், பிள்ளைகள் பெற்ற குழந்தைகளும் இதில் அடக்கம்) நலனுக்காக கவுன்சிலிங்குக்கு வருவதால் அவர்களுக்கு நான் கொடுக்கும் தீர்வுகள் / ஆலோசனைகளையே இங்கு பதிவிடுகிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம். ஆலோசனைகள் வழங்குவது என் முழுநேரப் பணியும் அல்ல. முழுநேர சேவையும் அல்ல. நான் இயங்கும் துறை முழுக்க முழுக்க தொழில்நுட்பம்.

அப்படி ஆலோசனை பெற்றவர்களின் பிள்ளைகள் நல்லபடியாக மாறி இருப்பதாகவும் ஒருசிலர் ஃபீட்பேக் கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆலோசனையின் போதும் அதுபோன்ற சூழல் எனக்கு அமைந்தால் நான் என்ன செய்வேனோ அதையே சிந்தித்து ஆலோசனையாக வழங்குகிறேன். அதையே எழுதியும் வருகிறேன்.

தவிர, உங்களுக்கு வேறு ஏதேனும் சூழல் அமைந்து அது நான் சொல்லி இருக்கும் கருத்துக்களுடன் ஒத்து வரவில்லை எனில் உங்கள் சூழல் என்ன என்று ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் சிந்திக்க வேண்டுமே தவிர நான் கொடுத்துள்ள ஆலோசனைகளை விமர்சிப்பதில் பிரயோஜனமும் ஏதும் இல்லை.

நான் எழுதும் விஷயங்கள் ஒவ்வொன்றும் 360 டிகிரி கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதுபவை.

அப்படி 360 டிகிரி கோணத்தில் ஆராய்ந்து கிடைக்கும் தீர்வுகளிலும் உங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால் தனிப்பட்ட முறையில்தான் உங்கள் பிரச்சனைகளை அலசி ஆராய வேண்டும்.

மேலும் ஒரு முக்கியமான விஷயம். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைப்பதில்லை. பெரும்பாலும் கிடைத்ததை / இருப்பதை வைத்துக்கொண்டுதான் கடந்து செல்ல வேண்டியிருக்கும். என்னதான் ஆலோசனை கொடுத்தாலும், கவுன்சிலிங் சென்றாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்றாடம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகளும் சூழல்களும் ஆயிரம் இருக்கும். ஆலோசனைகளும், கவுன்சிலிங்குகளும் பிரச்சனையை முழுமையாக சரி செய்ய உதவுவதைவிட பிரச்சனைகளை சமாளிக்கவே உதவி செய்யும் என்பதை நினைவில் வையுங்கள்.

நான் விவாதக்களம் அமைத்தால் நாம் பொறுமையாக ஒவ்வொன்றையும் விவாதிக்கலாம். நான் விவாதக்களம் அமைக்கவில்லை. தினமும் காலையில் நேர்மறை சிந்தனைகளை எழுதுகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அது உங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்குமேயானால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அவ்வளவுதான்.

காலை 6 மணிக்கு பதிவிட்டுவிட்டு என் பின்னூட்டங்களை என் நிறுவன வேலைகளுக்கு நடுநடுவேதான் கவனிக்க முடிகிறது. அதிலும் விளக்கம் கொடுக்க வேண்டிய பின்னூட்டங்களாக இருந்தால் அதிக நேரம் பிடிக்கிறது. என் பணியில் என் கவனத்தை சிதறடிக்கிறது.

ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன், என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை மாடரேட் செய்து வைத்துள்ளேன் என்று. குறிப்பிட்ட சில வார்த்தைகள் இடம்பெற்றால் அந்த பின்னூட்டம் தானாகவே நீங்கிவிடும்.

புரிதல் இல்லாத பின்னூட்டங்கள் பிறரையும் குழப்பி அவர்களின்  சரியான புரிதலையும் சிதற அடிக்கும் என்பதால் என்பதால் அவையும் நீக்கப்பட்டுவிடும்.

எனவே யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

நான் எழுதியதில் என்னிடம் சந்தேகம் கேட்டால்கூட பரவாயில்லை அல்லது உங்கள் பிரச்சனையை சொல்லி தீர்வு கேட்டாலும் கூட பரவாயில்லை. நான் எழுதிய பதிவில் உள்ள கருத்துக்களை எடுத்து விவாதம் செய்தால் அதற்கு எனக்கு நேரம் இல்லை என்பதே நான் சொல்ல வரும் கருத்து. மேலும் காலை நேரத்து மன அமைதியையும் அவை இழக்க வைப்பதாக உள்ளது. எனவே என் எழுத்து பிடித்திருந்தால் படியுங்கள்.

என் பதிவுகளை படித்து என்னை நித்தம் எழுத உத்வேகம் அளிக்கும் அனைவருக்கும் மீண்டும் நன்றி… நன்றி… நன்றி!

முக்கியமான குறிப்பு: இதற்கு மேல் புரியும்படி சொல்ல எனக்கு நேரம் இல்லை என்பதால் ஒருமுறைக்கு இருமுறையாக படித்து புரிந்துகொள்ளுங்கள்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

நவம்பர் 27, 2020

(Visited 22 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon