ஹலோ with காம்கேர் – 334
November 29, 2020
கேள்வி: நம்மை எதிர்மறைக்குள் தள்ளும் குணம் என்ன தெரியுமா?
- வாழ்க்கையில் மிகப் பெரிய அபத்தம்?
நமக்குப் பிடித்த அனைவருக்கும் நம்மைப் பிடிக்கும் என நினைப்பது.
அதை நாம் உணரும்போது நாம் முழுவதுமாக ஏமார்ந்திருப்போம். நம்மைப் பிடிக்காதவர்களிடமும் நாம் நம்மை முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டிருப்போம். அவர்கள் பற்றிய சிறு துரும்பையும் தெரிந்துகொள்ளாமல்.
- காலம் கடந்த சிந்தனை?
கோபப்படுவதால் எதுவும் ஆகப் போவதில்லை. எதுவும் மாறப்போவதில்லை என உணரும் தருணம்.
அப்படி உணரும் தருணத்தில் நமக்கு வயதாகி இருக்கும். வாழ்நாள் முழுக்க தேவையில்லாமல் கோபப்பட்டு பிபி, ஷுகர், ஹார்ட் அட்டாக் என பல்வேறு உடல்நலக் கோளாறுகளையும் சம்பாதித்திருப்போம்.
- திரும்ப கிடைக்கவே கிடைக்காத சூழல்?
பெற்றோரிடம் இன்னும் கொஞ்சம் அன்பாக நடந்துகொண்டிருக்கலாமோ என நினைக்கும் தருணம்.
அப்படி நினைத்து உருகும்போது, அவர்கள் இந்த உலகில் இருக்க மாட்டார்கள்.
- திருத்திக்கொள்ள முடியாத தவறுகள்?
தான் பெற்ற பிள்ளைகளிடம் ஏதேனும் ஒரு காரணம் வைத்துக்கொண்டு பாகுபாடு காட்டி வளர்ப்பதுதான் வீடுகளில் பெரும்பாலும் தெரிந்தே நடைபெறும் ஆகப்பெரிய தவறு.
இந்த தவறை உணரும்போது நீங்கள் காடிய பாகுபாட்டின் பலனை நீங்கள் அனுபவிக்கத் தொடங்கி இருப்பீர்கள். மூத்த குழந்தை, கடிக்குட்டி என முத்திரைக் குத்தப்பட்ட குழந்தைகளும், குடும்பத்துக்கு ஒரே ஆண் வாரிசு என கொண்டாடப்படும் குழந்தைகளும் உங்களை உதறித்தள்ள யாரை கொண்டாடாமல் விட்டீர்களோ அவர்களிடம்தான் உங்கள் கடைசிகாலத்தை கழிக்க வேண்டி இருக்கும்.
- நம்மை எதிர்மறைக்குள் தள்ளும் குணம்?
நாம் மிக நேர்மையாக இருக்கிறோம், நாம் மிக நல்லவர்கள், நாம் சிறப்பானவர்கள் என நம்மை நாமே முத்திரைக் குத்திக்கொள்ளும்போது அந்த ‘பிராண்ட்’-ஐ வலுக்கட்டாயமாக சுமக்கத் தொடங்கும்போது அந்த எண்ணம் நம்மை எதிர்மறைக்குள் தள்ளும்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? நம்மைப் பற்றிய உயர்வான சிந்தனை நேர்மறை சிந்தனையை அல்லவா உண்டாக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்.
இயல்பாக நல்லவர்களாக, வல்லவர்களாக, சிறப்பானவர்களாக, நேர்மையானவர்களாக வாழ்வது என்பது வரம். அந்த வரம் பெற்றவர்கள் தங்கள் பாதையில் சென்றுகொண்டே இருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் தாங்களே பாதையை அமைத்துக்கொள்ளவும் செய்வார்கள். அவர்களை அறியாமலேயே அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவர்களைப் பின்பற்றி வருவதற்கு மனிதர்கள் தயாராக இருப்பார்கள்.
நாம் நல்லவர்களாக இருக்கிறோம், நேர்மையானவர்களாக இருக்கிறோம் என்ற நினைப்பை சதா சுமந்துகொண்டு வாழும்போது நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் ஏதேனும் ஒரு குறை கண்டுபிடிக்கத் தோன்றும். வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாது. அதனால்தான் சொல்கிறேன், நல்லவர்களாக இருந்தால் இயல்பாக வாழுங்கள். நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்ற முத்திரையை நீங்களே உருவாக்கிக்கொண்டு நீங்களே தயாரித்த கிரீடத்துடன் வளைய வர ஆரம்பித்தால் அது உங்களுக்குப் பெரும் சுமை. அந்த சுமையுடன் நிற்கக் கூட முடியாது.
அந்த எண்ணம் உங்களை எதிர்மறை விளைவுகளுக்குள் தள்ளும். கவனம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software