ஹலோ with காம்கேர் – 335
November 30, 2020
கேள்வி: Book Smartness – க்கும் Street Smartness – க்கும் என்ன வித்தியாசம்?
புத்தக அறிவுக்கும், நடைமுறையில் அதை பயன்படுத்தும் புத்திசாலித்தனத்துமான இடைவெளியில்தான் நம் வெற்றி தோல்விகள் உள்ளன.
‘வாழ்க்கையின் OTP’ என்ற தலைப்பில் நான் எழுதி முடித்து புத்தகமாகத் தயாராகிக்கொண்டிருக்கும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கட்டுரை உங்கள் பார்வைக்கு.
சென்ற ஆண்டு ஃபேஸ்புக்கில் நான் எழுதி வந்த ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.
‘எப்போது நீ நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உனக்கு மேலே ஒன்று வேலை செய்கிறது என்று அர்த்தம். அதன் பெயர்தான் விதி. வீரன் வெற்றி பெற்றால் வீரத்தால் விளைந்தது. கோழை தோல்வியடைந்தால் கோழைத்தனத்தால் வந்தது. வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ விதியின் பிரவாகம். எடுத்து வைத்த அடியெல்லாம் வழுக்குகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லையா. நின்றுவிடு. முடிவை கடவுளிடம் விட்டுவிடு. அவன்மீது நம்பிக்கை இல்லை என்றால் காலத்திடம் விட்டுவிடு. நடுக்கடலில் தத்தளிக்கும் ஆளே இல்லாத படகுகூட என்றோ ஒருநாள் ஏதோ ஒரு கரையைச் சேரும்…’ – ‘அர்த்தமுள்ள இந்துமதம்’
வேலையில் ஏற்றம் எதுவுமே இல்லாமல் பின் தங்கிவிட்ட ஒரு நண்பர் என்னிடம் தன் நிலையைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார்.
உணவு உடை இருப்பிடம் இந்த மூன்றுக்காகவே நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
அந்த ஓட்டத்தின் வேகம் நாம் படித்த படிப்புக்கும், நம்முடைய திறமைக்கும் ஏற்ப நாம் செய்கின்ற வேலையைப் பொருத்து அமையும். ஒரு சிலர் வேகமாக முன்னேறுவார்கள், சிலர் கொஞ்சம் கொஞ்சமாய் மெதுவாய் ஏற்றம் பெறுவார்கள், இன்னும் ஒருசிலர் பின்தங்கி விடுகிறார்கள்.
வாழ்க்கையில் முன்னேற படிப்பும், திறமையும் மட்டும் போதாது. Street Smartness அவசியம் தேவை. அது என்ன Street Smartness?
புத்திசாலித்தனத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று Book Smartness, இரண்டாவது Street Smartness.
கல்வி அறிவை வைத்துக்கொண்டு அதன்படி நான் இப்படித்தான் என்று தன்னைச் சுற்றி ஒரு வரையறை அமைத்துக்கொண்டு வாழும்போது வாழ்க்கையின் ஓட்டம் கடினமாகவே இருக்கும். இந்த மாதிரியான புத்திசாலித்தனத்துக்கு ‘புக் ஸ்மார்ட்னெஸ்’ என்று பெயர். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என சும்மாவா சொன்னார்கள் நம் பெரியோர்கள்.
இருக்கும் இடத்துக்கு ஏற்றாற்போல அவர்களின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சூட்சுமத்துடன் வாழத் தெரிந்தவர்களிடம் ‘ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னெஸ்’ அதிகமிருக்கும். ஓரளவுக்கு அடித்துப் பிடித்து மேலே வந்துவிடுவார்கள் இவர்கள்.
ஓரிடத்தில் பணிக்கு சேருவதற்கு முன்பே அந்தப் பணி குறித்து ஆராய்ந்துவிட்டே சேர வேண்டும். அப்படி சேர்ந்த பிறகு அதில் உங்களைப் பொருத்திக்கொள்ள தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி தகுதிகளை வளர்த்துக்கொண்டும் உங்களால் மேலே வரமுடியவில்லை என்றாலும் உங்களை விட தகுதியானவர்கள் மேலே சென்று கொண்டிருக்க நீங்கள் கீழே சென்றுகொண்டிருந்தால் எங்கோ தவறிருக்கிறது என்பதை உணர்ந்து அதை கண்டறிந்து களைய முற்பட வேண்டும்.
எதுவுமே ஒத்துவரவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் அந்த இடம் உங்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து வெளியே வந்து உங்களுக்கான மாற்றுப் பாதையை கண்டறிய வேண்டும். காலம் தாழ்த்தத் தாழ்த்த உங்கள் வயதும் ஏறிக்கொண்டே வரும். குடும்பமும் பெரிதாகி இருக்கும். குழந்தைகளும் வளர்ந்து அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும்.
அமெரிக்காவுக்கு எம்.எஸ் படிக்கச் சென்ற ஒருவர் படிப்பை பாதியிலேயே விட்டு இந்தியா வந்தடைந்தார். அவருக்கு ஈடுபாடு ஆன்மிகத்தில். அதை நோக்கிய பாதையில் தன்னை வடிவமைத்துக்கொண்டார். யோகாவில் பட்டம் பெற்று பேராசிரியராக பணியில் சேர்ந்து, தனியாக யோகா வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
எல்லோரும் அவர் அமெரிக்காவில் இருந்து படிப்பை பாதியில் விட்டு இந்தியா வந்த போது அவர் மீது பரிதாபப்பட்டார்கள். ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்றார்கள். ஆனால் அவர் தெளிவாகவே இருந்தார். தனக்குப் பிடித்தப் பாதையை தானே அமைத்துக்கொண்டார்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software