ஹலோ with காம்கேர் – 349
December 14, 2020
கேள்வி: வாசுகியை ஏன் எனக்குப் பிடித்துப் போனது?
‘வாசுகி’ ஏன் எனக்குப் பிடித்துப் போனது என்பதை தெரிந்துகொள்ள கடைசிவரை படியுங்களேன்.
காதல் திருமணம் செய்துகொண்ட மம்முட்டியும், நயன்தாராவும் தங்கள் ஒரே பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
நயன்தாரா கதகளி நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். மம்முட்டி வக்கீலாக பணி புரிந்துகொண்டே தொலைக்காட்சி சேனலிலும் நிகழ்சிகள் நடத்தி வருகிறார். மேலும் மிகச் சிறந்த கலைஞர். சிற்பங்கள் வடிப்பதில் வல்லவர்.
நயன்தாரா தன் மகளை பள்ளி வேனில் மகளை ஏற்றி விடும்போது அவரது பெண் குழந்தையை தொட்டு ஏற்றிவிடும் ஆண் பணியாளர் மீது கோபம் கொள்கிறார். அவரிடம் ‘பெண் குழந்தையை தொட்டு ஏற்றிவிடக் கூடாது என தெரியாதா?’ என திட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது காட்சி.
அதன் பிறகு வருகின்ற சில காட்சிகளில் அவர் மிகவும் சீரியஸான முகபாவனையுடனேயே இருக்கிறார். மம்முட்டி அதற்கு நேர்மாறாக மிகவும் ஜாலியான கேரக்டராக வருகிறார். விவாகரத்து கேஸ்களை கவனிக்கும் வக்கீல் என்றாலும் அவரிடம் வருகின்ற தம்பதிகளை கூடுமானவரை விவாகரத்தில் இருந்து மீட்டு ஒன்று சேர்க்கவே பாடுபடுகிறார்.
அதே குடியிறுப்பில் குடியிருக்கும் இரண்டு இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள். ஒருநாள் துணி காயப்போட மாடிக்கு செல்லும் நயன்தாராவை, அவர்கள் இருவரும் அந்த குடியிருப்பிலேயே இஸ்திரி செய்து தரும் நபர் ஒருவரும் சேர்ந்துகொண்டு வன்கொடுமை செய்து விடுகின்றனர். இதனை எதிர் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் ஒரு பெரியவர் கவனித்து விடுகிறார். அந்த இளைஞர்கள் நயன்தாராவை கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்வதை மட்டுமே அவரால் பார்க்க முடிந்தது. காரணம் சாலையைக் கடந்த எதிர் குடியிருப்பில் இருப்பவர் அவர்.
அந்த இளைஞர்கள் தாங்கள் செய்வதை பென்கேமிராவில் வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். அந்த பென் கேமிராவை தவறுதலாக விட்டுச் செல்ல நயன்தாரா மயக்கம் தெளிந்து நடந்ததை உணர்ந்தபோது அதனை கைவசப்படுத்தி வைத்துக்கொள்கிறார்.
அதன் பிறகு அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். ஆனால் தவறே செய்யாத தான் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும், தவறு செய்தவர்கள் துடிக்கத் துடிக்க சாக வேண்டும் என நினைத்து முடிவை மாற்றிக்கொள்கிறார்.
தனக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நயன்தாரா, தனது குடும்பத்துடன் முன்பு போல மகிழ்ச்சியாக வாழ முடியாமல் தவிக்கிறார். இந்த விஷயத்தில் இருந்து மீள முடியாமல், தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப முயற்சி செய்து, மீண்டும் கதகளி நடனத்தில் முழு ஈடுபடுடன் இருக்க முயல்கிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் நயன்தாராவின் கதகளி நடனம் அந்த ஊரில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பிடித்துப் போக, எந்த உதவி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளச் சொல்கிறார். அந்த போலீஸ் அதிகாரி பெண்களின் நலனுக்காக உழைக்கும் நல்லெண்ணம் கொண்டவர்.
அடுத்த நாள் நயன்தாரா அந்தப் பெண் போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து பேசுகிறார். அவரது குரலில் உள்ள நடுக்கத்தை உணர்ந்துகொண்ட அந்த அதிகாரி என்ன பிரச்சனை என்று சொன்னால்தான் என்னால் உதவ முடியும் என்று சொல்லி தைரியம் கொடுக்க அவரும் மனம் திறந்து நடந்த அனைத்தையும் சொல்கிறார்.
அதற்கு அந்த அதிகாரி ‘சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்கிறேன்… கவலைப்படாமல் தைரியமாக இருக்கச் சொல்கிறார்…’
ஆனால் நயன்தாரா தனது கேஸ் கோர்ட்டுக்குச் செல்லக் கூடாது அவர்கள் தன் கண் முன்னே துடிக்கத் துடிக்க சாக வேண்டும் என கொந்தளிக்கிறார்.
அந்த போலீஸ் அதிகாரியும் அதற்கு ஒப்புக்கொண்டு உதவுகிறார். நயன்தாராவை வன்கொடுமை செய்த மூவரும் வித்தியாசமான முறையில் இறந்துபோகிறார்கள்.
இறுதியில் மன உளைச்சளில் இருந்து மீண்ட நயன்தாரா மீண்டும் தன் கணவன் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்.
மொத்த கதையின் கருவும் இவ்வளவுதான்.
சரி… இதில் உங்களுக்கு ஒரு விஷயம் இடிக்கிறது அல்லவா?
ஒரு போலீஸ் அதிகாரி எப்படி சட்டத்தை மீறி கொலை செய்ய உதவுகிறார் என்பது தானே அது.
சற்றுப் பொறுங்கள். சொல்கிறேன்.
நயன்தாரா சில நாட்களாக மன இறுக்கத்தில் இருப்பதை கவனித்த மம்முட்டி அவருக்கு என்ன நடந்தது என்பதை எதிர் குடியிருப்பு பெரியவர் மூலம் அறிந்துகொள்கிறார்.
அதன்பின்தான் தொழில்நுட்பம் விளையாடுகிறது திரைக்கதையில்.
நயன்தாராவுடன் பெண் காவல்துறை அதிகாரி போல் பேசுவது மம்முட்டி. அவருக்கு தொடர்ச்சியாக ஆலோசனைகள் கொடுத்து கயவர்களை அழிக்க உதவுவதும் மம்முட்டி. ஆனால் இது எதுவுமே நயன்தாராவுக்கு தெரியவே தெரியாது. அவரிடம் பேசுவது காவல்துறை அதிகாரி என நினைத்தே பேசுகிறார். அவர் கொடுக்கின்ற ஆலோசனைகள்படி நடக்கின்றார்.
ஒரு புது சிம் கார்ட் வாங்கி அதில் ஆண் குரலை பெண் குரலாக மாற்றிப் பேசும் சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்கிறார். அதில் இருந்துதான் மனைவிக்கு போன் செய்து பெண் காவல்துறை அதிகாரிபோல் பேசுகிறார்.
மேலும் தன் மனைவியின் மனக் கொந்தளிப்பு அடங்க வேண்டும் என்றால் அவர் சொன்னதைப்போல அவர் கண்முன்னே அந்த மூவரும் துடிக்கத் துடிக்க இறந்தால்மட்டுமே அவரால் அந்த கொடுமையின் பாதிப்பில் இருந்து வெளிவர முடியும் என்பதை உணர்ந்து மனைவிக்கு ஒரு செல்போனும் சிம்கார்டும் வாங்கி கொரியர் செய்கிறார்.
பிறகு அந்த பெண் காவல்துறை அதிகாரி பேசுவதைப்போல் அவருக்கு போன் செய்து கொரியரில் தான் அனுப்பிய போனில் இருந்து அவரை வன்கொடுமை செய்த மூவருக்கும் போன் செய்து பேசச் சொல்கிறார். அது எப்படி சாத்தியம் என்றால் அங்கும் தொழில்நுட்பம்தான் கைகொடுக்கிறது. அந்த செல்போனில் பெண் காவல்துறை அதிகாரி பேசுவதைப் போல கடுமையாக மிடுக்காக பேசும் குரலின் ஆடியோ செட்டிங்கை செய்தே அனுப்பி வைக்கிறார். அதில் இருந்து நயன்தாரா பேசும்போது அது மிடுக்கான பெண் காவல்துறை அதிகாரி பேசும் தொணியிலேயே எதிராளிக்குக் கேட்கும்.
இரண்டு இளைஞர்களையும் எமோஷனலாக ப்ளாக்மெயில் செய்து அவர்களே தற்கொலை செய்துகொள்ளும் சூழலை உருவாக்குகிறார். இஸ்திரி செய்யும் நபரை அவரது ஆஸ்துமா பிரச்சனைக்கு உதவும் இன்கேலர் மூலம் அவரே தன் முடிவை தேடிக்கொள்வதாக காட்சிகள் விரிகிறது.
நயன்தாராவும் கொலை செய்யவில்லை. மம்முட்டியும் கொலை செய்யவில்லை. காவல்துறை அதிகாரியும் நேர்மறையற்ற முறையில் செயல்படவில்லை.
தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிக நேர்த்தியாக கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
இதில் என்ன ஒரு அருமையான விஷயம் என்றால் கடைசி காட்சி வரை நமக்கு மம்முட்டி தான் இத்தனையையும் செய்கிறார் என்று தெரியவே தெரியாது. காவல்துறை அதிகாரிதான் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டிருப்போம்.
கடைசி காட்சியில்தான் உடையும் அந்த சஸ்பென்ஸ். எதிர் குடியிருப்பு பெரியவரும் மம்முட்டியும் பேசிக்கொள்ளும் அந்த கடைசிக் காட்சியில்தான் இத்தனையையும் செய்வது மம்முட்டி என்ற உண்மை நமக்குத் தெரியும்.
ஆனால் கடைசி வரை நயன்தாராவுக்கு தெரியாது.
போதை பழக்கம் தொடர்ச்சியாக எத்தனை தவறுகளை செய்ய வைக்கிறது என்பதையும், பெண்கள் எல்லா சூழலிலும் தைரியமாக செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது இந்த திரைப்படம்.
எனக்கு குறிப்பாக இந்த திரைப்படம் ஏன் பிடித்தது என்றால், வேலைக்கு செல்லவில்லை என்றாலும் கதகளி ஆட்டத்தில் தன் திறமையை வளர்த்துக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்ணாக காட்டும் நயன்தாரா கேரக்டர், பெண்களின் நலனுக்காக உழைக்கும் நேர்மையான பெண் போலீஸ் அதிகாரி கேரக்டர், மனைவிக்கு நடந்த கொடுமைகளை தெரிந்துகொண்ட பின்னரும் அவரை வெறுத்து ஒதுக்கிவிடாமல் அவரை மனதளவில் உறுதியாக்க தன்னால் ஆன அத்தனை முயற்சியையும் மேற்கொள்ளும் கணவனாக வரும் மம்முட்டி, கடைசிவரை அந்த உண்மையை மனைவிக்கு தெரியாமலேயே வைத்திருக்கும் அவரது பண்பின் கட்டமைப்பு, தன்னிடம் விவாகரத்துக்கு வரும் தம்பதிகளை பிரிக்காமல் சேர்த்து வைக்க அவர் எடுக்கும் நேர்மையான முயற்சிகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
மொத்தத்தில் தவறு செய்பவர்களுக்கு தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது என்ற தர்மத்தை சொல்லி உள்ளதால் இந்த திரைப்படம் என்னை வெகுவாக ஈர்த்தது. கூடவே திரைக்கதையில் தொழில்நுட்பமும் இணைந்துள்ளதால் கூடுதலாகக் கவர்ந்தது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software