ஹலோ With காம்கேர் -348: சின்ன சின்ன மாற்றம் சிறகடிக்கும் உற்சாகம்!


ஹலோ with காம்கேர் – 348
December 13, 2020

கேள்வி: சின்ன சின்ன மாற்றங்களில் சிறகடிக்கும் உற்சாகத்தைப் பெறுவது எப்படி?

விடியற்காலையில் நாம் நம் வழக்கமான பணிகளை தொடங்கும் முன்னர் நமக்குப் பிடித்த பணியை செய்வதன் மூலம், யோகாவும் தியானமும் செய்துவிட்டு நாளை தொடங்குபவர்கள் சொல்லும் பலனை கிடைக்கப் பெறலாம். அதாவது நாள் முழுவதும் மனநிறைவுடன் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.

உதாரணத்துக்கு நீங்கள் ஓவியம் வரைபவர்கள் என்றால் ஏதேனும் ஓர் ஓவியத்தை வரைந்து அந்த நாளைத் தொடங்கலாம். கவிதை எழுதுபவர்கள் என்றால் ஒரு கவிதையை எழுதி அந்த நாளின் தொடக்கத்தை ஆரம்பிக்கலாம். வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசித்து தினத்தைத் தொடங்கலாம்.

இப்படியாக, நாம் நம் வழக்கமான பணிகளை செய்வதற்கு முன்னர் நம் மனதுக்குப் பிடித்த ஆத்மார்த்தமான சில விஷயங்களை செய்து வந்தால் நாளடைவில் உங்கள் மனதில் பெரிய மாற்றத்தை உணர முடியும்.

அப்படி செய்யும் பணிகளை ஆக்கப்பூர்வமாக புத்தகமாகவோ, வீடியோ தொகுப்பாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ வெளியிட்டுக் கொண்டே வரலாம்.

இப்படித்தான் என் தொழில்நுட்பத் துறையில் எனக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப அனுபவங்களை எல்லாம் பலருக்கும் பயனுள்ள வகையில் புத்தகமாக்கி வருகிறேன். அதனால்தான் இன்று அதன் எண்ணிக்கை 125-ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.

தொழில்நுட்பம்தான் நான் இயங்கும் துறை. சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆப், ஆவணப்படங்கள் என அதன் பிரிவுகள் ஏராளம்.

எழுதுவது என் மனதுக்குப் பிடித்த ஆத்மார்த்தமான விஷயம்.

என் நாளின் தொடக்கத்தை எழுத்து என்ற முதல் கியரில் தொடங்கி மெல்ல மெல்ல அடுத்தடுத்த கியருக்கு மாறி தொழில்நுட்பத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருவதே என் தினசரி வேலைகளின் பாணி.

75 வயதாகும் என் அம்மா  தினமும் காலையில் ஆறு மணி முதல் எட்டு மணி வரை தினசரி பத்திரிகைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் லேப்டாப்பில் ஆன்லைனில் வாசித்துவிட்டுதான் சமையல் வேலைக்கே வருவார். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்படுவார். என்றேனும் இன்டர்நெட் பிரச்சனை தொழில்நுட்பக் கோளாறு என்றால் படிக்க முடியாமல் போகும்போது வழக்கமான உற்சாகத்துடன் இருக்க மாட்டார். ஆனால் அதற்காக சோர்வடைய மாட்டார். தோட்ட வேலையில் கவனம் செலுத்த சென்றுவிடுவார்.

மனதுக்குப் பிடித்த ஆத்மார்த்தமான விஷயங்களை ஒன்றில்லை என்றால் அடுத்தது என அடுத்தடுத்து வைத்துக்கொள்வார். அதில் கவனம் செலுத்திவிட்டுதான் வழக்கமான சமையல் வீட்டு வேலை எல்லாமே. அதனால்தான் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பார்.

ஒருமுறை என்னிடம் ஆலோசனைக்கு ஒரு பள்ளி சிறுமியை அழைத்து வந்திருந்தனர் அவளது பெற்றோர். தினமும் அன்றன்றைய பாடங்களை படிக்காமல் ஒத்திப் போட்டுக்கொண்டே வருவதால் கடைசி நேரத்தில் பளு கூடுவதும், அந்த நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்படுவதும் அவர்களது குற்றச்சாட்டு.

அவளுடன் அவள் போக்கில் பேசி புரிய வைத்துக்கொண்டிருந்தேன்.

‘மேம், எப்போதும் படி, படி என்றே என் அப்பா அம்மா சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்… அதுவும் விடியற்காலையில் எழுந்து படி என்கிறார்கள்…’ என்றாள் அலுத்தபடி.

ஒரு கட்டத்தில் நான் சொன்னேன்.

‘எனக்குக் கூட தினமும் காலையில் எழுந்தவுடன் கத்தறிக்காய் சாம்பார் வை, வெண்டைக்காய் கறி செய் என்று யாரேனும் சொன்னால் எனக்கு உன்னைவிட அதிகமா கோபம் வரும்…’

‘அப்படியா மேம்…’

‘ஆமாம்… அதனால் நான் என்ன செய்வேன் தெரியுமா?’

‘என்ன செய்வீங்க மேம்…’ எனக் கேட்டு உற்சாகமானாள்.

‘தினமும் காலையில் எழுந்து ஒரு பக்கமோ, இரண்டு பக்கமோ எழுதுவேன். அது கதையாக இருக்கலாம், கவிதையாக இருக்கலாம் அல்லது கட்டுரையாக இருக்கலாம். இப்படி என் மனதுக்கு எது தோன்றுகிறதோ அதை எழுதுவேன். அதற்கு எனக்கு அரை மணிநேரம் பிடிக்கும். அதை எழுதி முடித்ததும் எனக்கு மனசு முழுவதும் ஒரே ஜாலியாயிடும்… அப்புறம் என்ன எந்த வேலை சொன்னாலும் செய்வேன்… செம இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்…’

‘அப்படியா மேம்…’

‘ஆமாம்மா… உனக்கு படம் வரைய தெரியும் என்று சொன்னாய். ஏன் தினமும் காலையில் எழுந்து ‘தினம் ஒரு ஓவியம்’ என்று ஒரு ஓவியத்தை வரைவதில் உன் நாளை தொடங்கக் கூடாது?’

‘செய்யலாம் மேம். அதனால் என்ன பயன்?’

‘முதலில் உடனடியாகக் கிடைப்பது நான் சொன்ன மாதிரி மனது முழுவதும் உற்சாகம். அந்த உற்சாகத்தில் நீ உனக்குப் பிடிக்காத பயாலஜி பாடத்தை எடுத்துப் படித்தால்கூட அதுவும் உனக்கு எளிதில் புரிந்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளேன்.

அடுத்ததாக, நீ வரைந்த ஓவியங்களை எல்லாம் தொகுத்து அதற்கு சின்னதாக கேப்ஷன் கொடுத்து நீயே புத்தகமாக வெளியிடலாம். வீடியோவாக யு-டியூபில் பதிவிடலாம்.

பின்னாளில் உன் ஓவியம் வரையும் திறமையே உனக்கான கேரியராக அமையலாம்… அதாவது ஓவியம் சார்ந்த அனிமேஷன், கிராஃபிக்ஸ் போன்ற பிற துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்…’

‘இதற்கெல்லாம் நேரம் இருக்காதே மேம்’

‘காலையில் நீ 5 மணிக்கு எழுந்துகொள்கிறாய் என சொன்னாய்… இன்னும் ஒரு அரை மணி முக்கால் மணி முன்னால் எழுந்துகொள். தினம் ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்கின்ற உத்வேகம் உனக்குள் வந்ததும் அதுவே உன்னை அலாரம் வைக்காமலேயே, அப்பா அம்மா எழுப்பாமாலேயே எழுந்துகொள்ளத் தூண்டும்… பின் என்ன தினம் தினம் உற்சாகம் தான்… முயற்சி செய்து பாரேன்…’ என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

சில மாதங்களுக்குப் பிறகு யு-டியூப் சேனலில் அவளுடைய ஓவியங்களை வீடியோவாக வெளியிட்ட லிங்கின் அனுப்பி வைத்தாள். அதில் தொடக்கத்திலேயே என் புகைப்படத்தை வைத்து என் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லி இருந்தாள். (அதன் லிங்கை தனிப் பதிவில் விரிவாக எழுதி கொடுக்கிறேன்.)

நீங்களும் உங்கள் தினத்தை தினசரி வேலைகளுடன் ஆரம்பிக்காமல் ஆத்மார்த்தமாக உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான விஷயங்களுடன் ஆரம்பித்துத்தான் பாருங்களேன். யோகாவும் தியானமும் செய்யும்போது கிடைக்கும் மனத் தெளிவும், உற்சாகமும் கரைபுரண்டு ஓடுவதை நீங்களே உணர்வீர்கள்.

வாழ்த்துகள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 43 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon