வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[21] : கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி! (நம் தோழி)

கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி!

நேர்மறையாக சிந்திப்பது என்பது வலுக்கட்டாயமாக நாம் சந்தோஷமாக இருப்பதைப் போல வெளிக்காட்டிக்கொண்டு ‘என்னை எதுவும் அசைக்க முடியாதுப்பா’ என வெளிவார்த்தைக்காக பெருமை பேசுவது கிடையாது. அப்படி இருப்பது உள்ளுக்குள் மேலும் மேலும் எதிர்மறை சிந்தனையை தூண்டிவிடுவதாக மட்டுமே இருக்கும். மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

இயல்பாக உங்களுக்கு இருக்கும் கஷ்டங்களையும் வருத்தங்களையும் வெளிப்படுத்த உங்கள் உணர்வுகள் துடிக்கும்போது அதை அடக்கி ‘சும்மா இரு…’ என அதட்டினால் அப்போதைக்கு அது உள்ளுக்குள் சுருண்டு கொள்ளலாம். ஆனால் எப்போதடா நீங்கள் அசருவீர்கள், வெளியில் வந்து ஆட்டம் போடலாம் என உள்ளுக்குள் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டுக் காத்திருக்கும்.

பிறகு எப்படித்தான் நேர்மறையாக சிந்திப்பது, நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக்கொள்வது?

நேர்மறை எண்ணங்கள் என்பது ஒரு அழகான உணர்வு. அது தானாகவே உங்களுக்குள் இருந்து பிரவாகமாக பொங்க வேண்டும்.

வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஏழ்மையில் வாழ்பவர்களை கவனித்துப் பாருங்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவார்கள். மழையோ வெயிலோ புயலோ அன்றன்று வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் உள்ளவர்கள் வயிறு நிறையும். ஆனாலும் அவர்கள் முகத்தில் எப்போதுமே மகிழ்ச்சி ததும்புவதை கவனித்திருக்கிறீர்களா? இதுவரை இல்லை என்றால் கவனித்துப் பாருங்கள். அவர்களின் இந்த மனோநிலைக்குக் காரணம், அவர்கள் தங்கள் கஷ்டங்களை இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். தங்களுக்கு இருக்கும் கஷ்டங்களை தனியாகப் பிரித்து எடுத்து ‘எங்களுக்கு எவ்வளவு கஷ்டம்’ என லென்ஸ் வைத்துப் பார்ப்பதும் இல்லை, ‘எங்களுக்கென்ன குறைச்சல், எங்களைப் போல சந்தோஷமா யாரால் இருக்க முடியும்?’ என இல்லாததை இருப்பதாக பெருமை பேசுவதும் இல்லை.

அவர்கள் எதிர்கொள்வதை உள்ளது உள்ளபடி எதிர்நோக்குகிறார்கள், அதில் உள்ள கஷ்டங்களையும் வலிகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கு பதிலாக மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும் நாட்களையும், ஒருவேளை சாப்பாட்டுக்குகூட வழியில்லாத நாட்களையும் ஒன்றாகவே கடக்கிறார்கள். வாழ்க்கை அதன்போக்கில் செல்கிறது. நேர்மறை சிந்தனை, எதிர்மறை சிந்தனை என்ற குழப்பமெல்லாம் கிடையாது.

கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி இதுவே அவர்களின் வாழ்க்கை மந்திரமாக உள்ளது. அதனால்தான் அவர்கள் எந்தவிதமான விசித்திரமான மனோவியாதிகளுக்கும் ஆளாவதில்லை. ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் என எந்த சிக்கல்களுக்குள்ளும் மாட்டிக்கொள்வதில்லை.

இவர்களுக்குள் நேர்மறை சிந்தனை தானகவே பிரவாகமாக பொங்கி வழிவதைக் காணலாம். வாழ்க்கையை அதன்போக்கில் வாழப் பழகியவர்களுக்கே இது சாத்தியம்.

உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதும், பிறரிடம் நற்பெயர் வாங்குவதற்காக நம் இயல்பை மாற்றிக்கொண்டு நடிக்காமல் இருப்பதும், தேவையில்லாததற்கெல்லாம் பொய்யாய் நடித்து பொய்யான வாழ்க்கையை வாழாமால் இருப்பதும், பிறரை கீழ்த்தள்ளி அவர்கள் மேல் ஏறி நாம் முன்னேற வேண்டும் எண்ணத்தை துறப்பதும் என ஒருசில நல்ல குணாதிசயங்களை உங்கள் இயல்பாக்கிக்கொண்டால் உங்களுக்கான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவமும் தானாகவே உங்களுக்குள் உண்டாகும். பிரச்சனைகளை எதிர்கொள்வதுடன் அதில் இருந்து வெளிவருவதற்கான யுக்திகளும் யோசனைகளும் தானாகவே தோன்றி உங்களை வழிநடத்தும். இயல்பாகவே நீங்கள் நேர்மறை சிந்தனைகளுடன் வாழத்தொடங்குவீர்கள்.

நான் சொல்ல வருவதை சுருக்கமாக சொல்லிவிடுகிறேனே…

‘நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பிரச்சனைகளாகவே பாருங்கள். ‘இதெல்லாம் பிரச்சனையே இல்லை…’ என்று போலியாக சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். அப்போதுதான் உங்கள் மனதும் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கான நேர்மையான வழிகளை யோசிக்கும் பக்குவத்தைப் பெறும்’

‘கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால் முயற்சி’ என்ற பக்குவத்தைப் பெறுவதற்கும் இது ஒன்றுதான் வழி.

சாதனைகளுக்கும், வேதனைகளுக்கும் அளவுகோல் ஏதேனும் உண்டா என்ன?

வலிகளில் சிறியதென்ன, பெரியதென்ன? ஒரு சிலர் தங்கள் பிரச்சனையை பிறரிடம் பகிரும்போது ‘இதெல்லாம் ஒரு கஷ்டமா… நாங்கள் படாத கஷ்டமா’ என்று சர்வ சாதாரணமாக சொல்வார்கள். இன்னும் ஒருசிலர் ‘நாம் எப்படி வாழ்கிறோமோ அதற்கேற்பத்தான் நமக்கு கிடைக்கும் நல்லது கெட்டதுகள்… நாம் சரியா இருந்தா எல்லாம் நல்லதாகவே கிடைக்கும்… எல்லாம் நாம் நடந்துகொள்ளும் விதத்தில்தான்…’ என அவர்கள்தான் உலகில் மிகச் சரியாக பிரச்சனைகள் ஏதும் இன்றி வாழ்ந்து வருபவர்களைப் போல பேசுவார்கள்.

இப்படி பேசினால் அவர்களிடம் தங்கள் பிரச்சனைகளைப் பகிரும் நண்பர்களுக்கு மேலும் மன அழுத்தம் கூடுமே தவிர குறையாது.

மாறாக, அவர்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ ஏற்பட்டிருந்தால் (அவர்களின் பெயரைக் குறிப்பிடாமல்) அதை அவர்களிடம் ஷேர் செய்து அவர்கள் எப்படி அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்தார்கள் அல்லது வெளிவந்தீர்கள் என்பதை சொன்னால் அவர்களுக்கு ஏதேனும் ஒரு மாற்றுப்பாதை தானாகவே புலப்படும்.

அதைவிட்டு ‘எல்லாம் நாம் நடந்துகொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது’ என்பதுபோன்ற கர்வத்தனமான பேச்சுகள் ஒருபோதும் எதிராளிக்கு மன ஆறுதலை தரவே தராது.

சாதனைகளில் சிறியதென்ன, பெரியதென்ன? ஒரு சிலரது சாதனைகளைப் பற்றிப் பேசும்போது  ‘இதுபோல் நிறையபேர் இருக்கிறார்கள்….’,  ‘இதெல்லாம் என்ன பெரிய விஷயமா?, ‘இந்தக் காலத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளன’ என்பது போன்ற கமெண்ட்டுகளை சர்வ சாதாரணமாக சொல்பவர்களின் கர்வத்தின் உச்சம் எப்போற்பட்டது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஒரு சிலருக்கு விடியற்காலை 5 மணிக்கு எழுந்துகொள்வதே சாதனையாக இருக்கலாம். இன்னும் ஒருசிலருக்கு தினமும் வாக்கிங் செல்வதே சாதனையாக இருக்கலாம். இதெல்லாம் சாதனையா என ஒரு கேள்விக்குறி போடுவதே அபத்தம். அவர்களுக்கு அது சாதனை. அவ்வளவுதான். அந்த ஊக்கம் அவர்கள் வாழ்க்கையை நகர்த்திச் செல்லுமேயானால் அதில் உங்களுக்கென்ன உறுத்தல்?

தினமும் நான் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து என் பணிகளை ஆரம்பிப்பது குறித்து சமூக வலைதளங்களில் பகிரும்போதும், என் பெற்றோர் குறித்து பெருமையாக சொல்லும்போதும் ஒருசிலர் ‘வாழ்த்துகள். இதுபோல் நிறைய பேர் இருக்கிறார்கள்…’, ‘வாழ்த்துகள். எல்லா பெற்றோருமே இப்படித்தான்…’ என சம்பிரதாயமாக வாழ்த்துவதைப்போல் வாழ்த்திவிட்டு நாம் மகிழ்ச்சியாக பகிர்வதை ‘இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா… என்னவோ சொல்ல வந்துட்டா…’ என்ற மனப்பாங்கில்  தங்கள் உள்ளத்து அழுக்கை / பொறாமையை ஒற்றை வரியில் வெளிப்படுத்துவார்கள்.

‘எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கட்டுமே, நான் என் அனுபவத்தை மட்டும்தான் சொல்லி இருக்கிறேன்…’ என்று பதில் சொல்லி இருக்கிறேன்.

ஒருவரின் சாதனையாகட்டும், வேதனையாகட்டும் அதற்கு சிறியது பெரியது என்ற அளவுகோல் எல்லாம் கிடையவே கிடையாது. அவரவர் வாழ்க்கை, அவரவர் பக்குவம், அவரவர் உழைப்பு, அவரவர் ஏற்ற இறக்கம். That’s all.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
January  21, 2021

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (ஜனவரி 2021)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 21

புத்தக வடிவிலேயே படிக்க… நம் தோழி ஜனவரி 2021

(Visited 19 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon