ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 13: ‘பிசி பிசி’ என சொல்பவரா நீங்கள்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 13
ஜனவரி 13, 2021

‘பிசி பிசி’ என சொல்பவரா நீங்கள்?

பிசியாக இருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் ஒருநாளும் ‘தாங்கள் பிசி’ என அவர்கள் வாயால் சொல்லவே மாட்டார்கள். யார்  ‘பிசி பிசி’ என சொல்வார்கள் என்றால் நிறைய ஓய்வு நேரத்தை பெற்றிருப்பவர்களும், சோம்பேறித்தனத்தை இயல்பாகக் கொண்டிருப்பவர்களும்தான் தாங்கள் மிகவும் பிசி என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். காரணம் அவர்கள் மனதுக்குள்  தாங்கள் நேரத்தை வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி அவ்வப்பொழுது எட்டிப் பார்ப்பதால் அந்த குற்ற உணர்வை மறைப்பதற்கு பிசி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

மேலும் உண்மையிலேயே 24 * 7 பிசியாக இருப்பவர்கள் நேரத்தை சரியாக நிர்வாகம் செய்யத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அதனால்தான் அவர்களால் நிறைய வேலைகளை அந்தந்த நேரத்தில் பரபரப்பில்லாமல் சரியாக செய்துவிட முடிகிறது.

அவர்கள் கோயிலுக்கும் செல்வார்கள், உறவினர்களின் திருமணங்களுக்கும் செல்வார்கள், சினிமா பீச் என பொழுதுபோக்கிற்கும் நேரம் செலவிடுவார்கள், வீட்டில் குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவார்கள், அலுவலகத்திலும் திறமையினால் நிறைய சாதிக்கவும் செய்வார்கள். சுருங்கச் சொன்னால் மனநிறைவுடம் மிக மகிழ்ச்சியான மனநிலையில் வாழ்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களையே இதற்கு உதாரணமாக்கலாம். வீட்டு வேலை, அலுவலக வேலை இரண்டிலும் நேர்த்தியாக இருப்பற்கு அவர்களிடம் இருந்தே பாடம் கற்கலாம்.

பெரிய தொழிலதிபர்கள் முதல் சிறிய அளவில் கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் வரை கவனித்துப் பாருங்கள். அவர்கள் எல்லோரும் இப்படித்தான் பரபரப்பான தங்கள் தொழில் வாழ்க்கையின் ஊடே தங்கள் சொந்த வாழ்க்கையிலும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எதையுமே விட்டுக்கொடுத்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் நேர நிர்வாகம்.

ஆனால் சோம்பலை இயல்பாகக் கொண்டவர்கள் ஒரே வேலையை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை நாள் முழுவதும், வாரம் முழுவதும், மாதம் முழுவதும் இழுத்துக்கொண்டே செல்வார்கள். இதனால் அவர்களுக்கு மனநிறைவே கிடைக்காது. இன்னும் சொல்லப் போனால் வெகு சீக்கிரம் எரிச்சல் அடைவார்கள். காரணம் செய்கின்ற வேலையில் நிறைவு ஏற்படாததினால் உண்டாகும் மன அழுத்தம். ஆனால் அவர்கள் அதற்குக்கொடுத்துக்கொள்ளும் பெயர் என்ன தெரியுமா, தங்களுக்கு வேலை அதிகம். தாங்கள் மிகவும் பிசி.

உண்மையிலேயே பிசியாக இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

சுறுசுறுப்பாக இருப்பார்கள். எப்போதும் தங்களை ஏதேனும் ஒரு பணியில் ஈடுபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.

ஒரே நேரத்தில் நிறைய வேலைகளை செய்வார்கள். உதாரணம்: நடந்துகொண்டே, வீட்டை சுத்தம் செய்துகொண்டே போனில் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பேசுவது. இதனால் போன் பேசுவதற்குக்கூட நேரம் இல்லை என்ற வார்த்தையே இவர்களிடம் இருந்து வராது.

செய்ய வேண்டிய வேலைகளை பிறகு செய்யலாம் என ஒத்திப் போடவே மாட்டார்கள். அவ்வப்பொழுது செய்து முடித்து விடுவார்கள்.

வருடம்தோறும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வார்கள். நிறைய செலவு செய்து நெடுந்தூரப் பயணமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லாமல் அருகில் இருக்கும் இடங்களையும் தேர்ந்தெடுப்பார்கள்.

தங்கள் குடும்பத்தினரின் தேவைகளையும் அவ்வப்பொழுது பூர்த்தி செய்துகொண்டே வருவார்கள். அதனால் குடும்பத்தினர் மனஅழுத்தம் இல்லாமல் இருக்க முடிவதோடு, இவர்களும் தங்கள் வேலைகளை பூரண திருப்தியுடன் செய்ய முடிகிறது.

குடும்பம் குழந்தைகள் இவர்களுக்காக செலவிடும் நேரம் குறைவாக இருந்தாலும் நிறைவாக செலவிடுவார்கள். முழுமையாக தங்களை அர்பணிப்பார்கள்.

குடும்ப நிகழ்ச்சிகளையும் விட்டுக்கொடுத்துக்கொள்ள மாட்டார்கள். குடும்ப விழாக்களுக்கு சென்று இரண்டு மூன்று மணிநேரம் செலவிட இயலவில்லை என்றாலும் கிடைக்கும் இடைவெளியில் தலையைக் காட்டிவிட்டாவது வந்துவிடுவார்கள்.

அலுவலக பிரச்சனைகளை தங்கள் மனதுக்குள் வைத்து குழம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள்.  வீட்டில் மனைவி / கணவன் அல்லது பெற்றோரிடம் பகிர்ந்துகொள்வார்கள். இதனால் வித்தியாசமான கோணத்தில் தீர்வுகள் கிடைக்க வாய்ப்பைப் பெறுவார்கள்.

எந்த பிரச்சனையையும் ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயல்வார்கள். இதனால் பிரச்சனைகளால் உண்டாகும் மன அழுத்தத்தை மனதுக்குள் தூக்கி சுமந்துகொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பிப்பார்கள். சரி செய்ய முடியாத அல்லது அதற்கு வாய்ப்பே இல்லாத பிரச்சனையாக இருந்தால் முற்றிலும் அந்த விஷயத்தில் இருந்து முழுமையாக வெளியே வந்துவிடப் பார்ப்பார்கள்.

வீம்புக்காகவும் ஈகோவுக்காகவும் எந்த ஒரு விஷயத்தையும் பிடித்து தொங்கிக்கொண்டே இருக்க மாட்டார்கள். ஈகோவை விட தங்கள் மன நிம்மதி முக்கியம் என கருதுவார்கள்.

அடுத்தவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட மாட்டார்கள். ஆனால் ஆலோசனை கேட்டு வந்துவிட்டால் எந்த நிலைக்கும் கீழிறங்கி தங்களால் முடிந்த அளவுக்கு உதவுவார்கள்.

பகட்டுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் வீண் செலவு செய்ய மாட்டார்கள். அன்றன்றைய வாழ்க்கை முறைக்கு எந்தெந்த வசதியெல்லாம் தேவையோ அதையெல்லாம் செய்துகொள்ள தவறமாட்டார்கள்.

தங்கள் செல்வாக்கை பிறருக்கு ஷோகேஸ் செய்துகாட்ட முயற்சிக்க மாட்டார்கள். திருப்தியுடன் வாழ்வார்கள்.

எளிமையான வாழ்க்கை முறை வாழ்வார்கள்.

இது என் வாழ்க்கை டெம்ப்ளேட். நான் இப்படித்தான் வாழ்கிறேன். எனது செயல்பாடுகளை இப்படித்தான் அமைத்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் சூழலுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்குங்கள். படோடோபத்தையும் ஆடம்பரத்தையும் விட எளிமையான வாழ்க்கை முறையே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும் என்பதை மனதில் வைத்து எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிடுங்கள்.

‘உண்மையிலேயே’ பிசியாக வாழ வாழ்த்துகள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 26 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon