ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 12
ஜனவரி 12, 2021
வருத்தங்களில் சிறிதென்ன பெரிதென்ன?
அமெரிக்காவில் கார் ஓட்ட சட்டரீதியான வயது 16. அங்கு வசிக்கும் என் உறவினரின் 16 வயது மகளுக்கு புதிதாக ஒரு கார் வாங்கிக் கொடுத்தார்கள். அவளுக்குப் படித்த கலர், பிடித்த மாடல் என எல்லாமே அவளுக்குப் பிடித்ததுதான். ஆனால் அவள் முகம் வாடி இருந்தது. கொஞ்சம் அழவே செய்தாள்.
‘மாடல் பிடிக்கவில்லையா… அடுத்த மாடல் கார் வேண்டுமா?’ என்ன ஏது என்று துருவித் துருவி கேட்டு பல மணி நேரங்கள் கழித்தே அவள் மனம் திறந்தாள்.
அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்களே சம்பாதிக்கத் தொடங்கிய பின்னர்தான் புதுகார் வாங்கி தருவார்கள். அதுவரை அவர்களுக்கு இங்கு நாம் Second Sale என்று சொல்வோமே அதுபோல பழைய கார்தான்.
என் உறவினரின் மகளுக்கு புதிதாக கார் வாங்கிக்கொடுத்தது சந்தோஷமாக இருந்தாலும் பள்ளியில் ‘என்ன நீ சம்பாதிக்காமல் உன் அப்பா அம்மா சம்பாத்யத்தில் புது கார் வாங்கிவிட்டாய்?’ என அவள் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்ற பதிலை சொன்னாள்.
ஆக ஒவ்வொருவரும் வளரும் சூழலுக்கும், கல்வி அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப உணர்வுகள் மாறுபடும்.
‘உன் கஷ்டங்கள் எல்லாம் பெரிய விஷயமா… நான் படாத கஷ்டமா’ என்றெல்லாம் பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் பேசுவது கர்வத்தின் உச்சம்.
நான் காம்கேர் ஆரம்பித்த நேரத்தில் எனக்கு வயது 22. என் வயதும், கல்வியறிவும், சுறுசுறுப்பும், தொழில் வளர்ச்சியும் பலரின் கண்களை உறுத்தியது.
அப்போது என்னிடம் பணியில் இருப்பவர்களுக்கும் என் சம வயதே இருக்கும். அலுவலகத்தில் நுழைந்ததும் எனக்கு சல்யூட் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சிரித்த முகத்துடன் குட் மார்னிங் சொல்லலாம் அல்லவா? ஆனால் சொல்ல மாட்டார்கள்.
அட அதுகூட வேண்டாம், சிரிக்கவாவது செய்யலாம் அல்லவா? அதற்கும் காசு கொடுத்தால்தான் செய்வேன் என்பது போன்ற பாவனையில் இறுக்கமாக இருப்பார்கள்.
ஆரம்பத்தில் அவர்கள் என்னை மதிக்காமல் இருப்பதைப் போல கொஞ்சம் அவமானமாகவே உணர்வேன்.
என் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொண்டபோது ‘அவர்வர்களுக்கு எத்தனையோ கஷ்டங்கள் வாழ்க்கையில், இதெல்லாம் ஒரு வருத்தமா’ என்று அலட்சியமாக பதில் சொன்னார்கள்.
ஆனால் என் பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்த சிறிய வேதனை என் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது.
அதற்கு நானே ஒரு தீர்வை கண்டுபிடித்தேன். அவர்கள் அலுவலகத்தில் நுழைந்ததும் கையெழுத்துப் போடும் ரெஜிட்டரை என் அறைக்கு மாற்றினேன். அவர்கள் உள்ளே நுழைந்ததும் நானே சிரித்தபடி குட்மார்னிங் சொல்லி வரவேற்க ஆரம்பித்தேன்.
இதுவே அவர்களுக்கு வழக்கமாகி நான் மறந்தாலும் அவர்களே சொல்ல ஆரம்பித்தார்கள்.
எனவே எதையும் பொதுவிதியில் வைக்க முடியாது. குறிப்பாக அவரவர் வலிகள் அவரவர்களுக்கு. அதை சின்னது பெரியது என வரையறை செய்ய முடியாது.
இப்போதுகூட பார்ப்பதற்கு வயதில் சிறியதாகத் தோன்றுவதால் பல இடங்களில் என்னைவிட வயதில் குறைவானவர்கள் கூட சர்வ சாதாரணமாக பெயர் சொல்லி அழைப்பதும், ஆமாம்‘பா’, இல்லம்‘மா’, சொல்லு‘டா’ என்று பேசுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நாசூக்காக, இதமாக அவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டுதான் அந்த இடத்தைவிட்டு நகர்கிறேன். அது எனக்காக மட்டும் அல்ல, பொதுவெளியில் இயங்குகின்ற எல்லா பெண்களையும் மனதில் வைத்தே செய்கிறேன்.
ஏன் அவர்களைவிட நான் சிறியவளாகவே இருந்தால்தான் என்ன பொதுவெளியில் பழகும்போது முன்பின் அறிமுகம் இல்லாத, குடும்ப நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் இல்லாதபட்சத்தில் ‘மேடம்’ என்று அழைப்பதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது?
பூக்கடை, மளிகைக்கடை போன்று சிறு சிறு கடைகளில் வேலை செய்யும் 20, 21 வயது இளைஞர்களை கவனித்துப் பாருங்கள். தங்கள் கடைக்கு வருகின்ற பெண்கள் எத்தனை வயதானாலும் அவர்களை ‘அக்கா’ என்றே அழைப்பார்கள். அவர்கள் தன்னை விட பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி. ஏன் 60 வயது பாட்டி வந்தாலும் அவர்களும் அக்காதான் அவர்களுக்கு. அவர்களைப் பொருத்த வரை ‘அக்கா’ என்று அழைப்பது ஒரு மரியாதை. அந்த மரியாதை வார்த்தையை அவர்கள் ஆளுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக்கொள்வதில்லை. அதிகம் படிக்காத அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகளில் இதுவும் ஒன்று.
ஒரே பொருள்படும் ஒரு வார்த்தையை உச்சரிப்பதில்கூட பெரிய வித்தியாசம் வந்துவிடுகிறது என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை.
‘மா’ என்று அழைப்பதற்கும், ‘அம்மா’ என்று முழுமையாக அழைப்பதற்குனே வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.
‘மா’ என்றால் உரிமையில் வயதில் குறைவானவர்களை அன்புடன் வாஞ்சையுடன் அழைப்பது.
‘அம்மா’ என்று முழுமையாக குறிப்பிடுவது மரியாதையின் உச்சம். வயது வித்தியாசமின்றி எல்லா பெண்களையுமே ‘அம்மா’ என்றழைக்கலாம்.
பொதுவெளியில் அன்பை விட மரியாதையே மெச்சப்படுகிறது. விரும்பப்படுகிறது. போற்றப்படுகிறது.
மேடம், சார் என ஆங்கிலத்தில் அழைப்பதற்கு கடினமாக உணர்பவர்கள் அம்மா, ஐயா என்று அழகு தமிழில் அழைத்துவிட்டுப் போகலாமே!
உரிமையான வார்த்தைகளில் மட்டுமல்ல, மரியாதையான வார்த்தைகளிலும் நம் அன்பையும் பண்பையும் வெளிப்படுத்த முடியும்.
மரியாதையான வார்த்தைகளில் பிறரை அழைத்துப் பாருங்கள். உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் இரண்டு மடங்காகும்.
பொதுவெளியில் இயங்கும்போது நான் வயது வித்தியாசம் இன்றி, கல்வி, வேலை, பதவி பாகுபாடின்றி அனைவரையும் மேடம், சார் என்றே அழைக்கிறேன். பரஸ்பரம் அதுவே நல்லதொரு இணக்கமான சூழலுக்கு வழிவகுக்கிறது.
இங்கு ஆண்கள் பெண்களை அழைப்பதில் உள்ள சிக்கலை மட்டும் பேசவில்லை. பெண்களே கூட தோழிகள் / உறவினர்கள் அல்லாத சக பெண்களை பொதுவெளியில் எப்படி அழைக்கலாம் என்பது குறித்தும் பேசியுள்ளேன்.
மேலும் அழைப்பது என்றால் நேரில் கூப்பிடுவது மட்டும் அல்ல. எழுதுவதில், பிறரிடம் ஒருவர் குறித்து பேசுகையில் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் என ஒட்டுமொத்தமாக பொதுவெளியில் எப்படி இங்கிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே இந்தப் பதிவு.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது, இதெல்லாம் ஒரு பிரச்சனையா என மனதுக்குள் எள்ளி நகையாடுபவர்கள் தங்கள் வீட்டில் டிபனுக்கு உப்புமா செய்தால் கூட வேண்டா வெறுப்பாய் விழுங்கிவிட்டு, ஓட்டலுக்குச் சென்று தங்களுக்குப் பிடித்ததை வாங்கி சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ளும் வகையினராகவே இருப்பார்கள்.
நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு, உப்புமாவெல்லாம் ஒரு பிரச்சனையா என்று அமைதியாக சாப்பிட்டு தூங்க வேண்டியதுதானே. முடிவதில்லை அல்லவா?
அதுபோல்தான் நான் இங்கு குறிப்பிட்ட அத்தனை விஷயங்களும்.
திரும்பவும் சொல்கிறேன். வருத்தங்களிலும், கஷ்டங்களிலும் சிறிதென்ன, பெரிதென்ன? பிறர் கஷ்டங்களை உணர முடியாவிட்டால் ஒன்றும் பிரச்சனை இல்லை. இம்சைப்படுத்தாமல் அமைதியாக கடந்து சென்றுகொண்டே இருக்கலாம். தவறே இல்லை.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP