ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 11: கஷ்டமானதையும் இஷ்டமானதாக்கிக்கொள்ள முடியுமே!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 11
ஜனவரி 11, 2021

கஷ்டமானதையும் இஷ்டமானதாக்கிக்கொள்ள முடியுமே!

கடினமான வேலைகளையும் இஷ்டப்பட்டு செய்ய ஒரு லாஜிக் உண்டு.

அலுவலகத்தில் நம் அறையில் இரண்டு மூன்று ஷெல்ஃபுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் திணறத் திணற புத்தகங்களையும் இதர பொருட்களையும் நிரப்பி வைத்திருப்போம். தவிர நம் டேபிளிலும் அவை குடியேறி இடத்தை ஆக்கிரமித்து மனதை சோர்வடையச் செய்யும் சூழலை உருவாக்கும்.

இரண்டு ஷெல்ஃபுகள் என்ன நான்கு ஷெல்ஃபுகள் இருந்தாலும் அந்த நான்கிலும் இரண்டு ஷெல்ஃபுகளில் உள்ள அதே பொருட்கள் பரவலாக குடியேறிவிடுவதை தவிர்க்கவே முடியாது.

நான்கு ஷெல்ஃபுகளில் உள்ள பொருட்களை ஒரே ஷெல்ஃபில் அடக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஆனால் ஷெல்ஃபுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நம்மிடம் உள்ள பொருட்கள் அத்தனையிலும் ஆக்கிரமித்துக்கொள்ளும். ஒரே ஷெல்ஃப் மட்டுமே நம்மிடம் உள்ளது, அதைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்ற சூழல் வந்தால் நம்மால் அதற்குள் பொருட்களை அடக்கிவிட முடியும்.

இதே லாஜிக் தான் நாம் செய்யும் செயல்களிலும். 24 மணி நேரம் வீட்டில் இருந்தால் 24 மணி நேரத்துக்கும் வேலை இருக்கும். அதுவும் பெண்களுக்கு 48 மணி நேரத்துக்கு வேலை இருக்கும். ஏனெனில் அவர்கள் தங்களுக்காக மட்டும் இல்லாமல் தன் வீட்டில் உள்ள அத்தனை உறுப்பினர்களின் நேரத்தையும் சேர்த்தல்லவா சுமக்க வேண்டி இருக்கிறது.

ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்களை கவனித்துப் பாருங்கள். காலை ஒன்பது மணிக்குள் வீட்டில் தனக்கும், கணவனுக்கும், குழந்தைகளுக்கும் காலை டிபன், மதிய சாப்பாடு அத்தனையையும் தயார் செய்துவிட்டு மாலை டிபனுக்கு ஏதேனும் முன்னேற்பாடு செய்து வைக்க வேண்டுமானால் அதையும் செய்து வைத்து விட்டு அலுவலகத்துக்கும் சரியான நேரத்துக்குச் சென்றுவிடுவார்கள்.

இதை நன்கு கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாக புரியும். காலை 5 மணி முதல் 9 மணி வரை 4 மணி நேரங்கள். பெண்களில் மனமெனும் டைமரில் 4 மணி நேரங்கள் தானாகவே பொருத்தப்பட்டுவிடும். அசுர வேகத்தில் அதே சமயம் நேர்த்தியாகவும் அவர்களால் தங்கள் பணிகளை முடித்துவிட முடியும்.

காரணம் டைமர்.

அதுவே வீட்டில் இருக்கும் நாட்களில் இதே வேலைகளை செய்வதற்கு 4 மணி நேரங்கள் போதவே போதாது.

ஆகவே நாம் எந்த ஒரு பணிக்கும் அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, அலுவலக வேலையாக இருந்தாலும் சரி அல்லது நம் திறமை சார்ந்த வேலையாக இருந்தாலும் சரி அதற்கான டைமரை மனதுக்குள் பொருத்திக்கொண்டு செயல்படத் தொடங்கினால் அந்த நேரத்துக்குள்ளோ அல்லது அதற்கு முன்பாகவோ பணிகளை நம்மால் முடித்துவிட முடியும்.

தினமும் செய்கின்ற பணிகளுக்கு மட்டுமில்லாமல், நமக்குப் பிடிக்காத அல்லது சற்றுக் கடினமான பணிகளை செய்வதற்கும் இதே லாஜிக்கைப் பயன்படுத்தலாம்.

மாலைக் காட்சிக்கு ஒரு சினிமாவுக்கு செல்ல திட்டமிடுகிறோம். அதற்குள் கடினமான அல்லது நமக்கு அவ்வளவாகப் பிடிக்காத சில வேலைகளை முடித்து வைத்துவிட திட்டமிடலாம். நம்மால் அதற்குள் அந்த வேலையை முடித்துவிட முடியும். காரணம் சினிமாவுக்கு செல்லுதல் என்பது நம் மனதுக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். அதை நம் மனம் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும். அதற்குள் ‘இதை’ செய்து முடித்துவிட்டால் ஜாலியாக சினிமா பார்க்கலாம் என நம் மனதுக்குள் ஒரு ஆசையைக் காட்டி மனமெனும் டைமரில் நேரத்தைப் பொருத்திக்கொண்டு வேலையை செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் நம்மால் எந்த ஒரு கடினமான வேலையையும் முடித்துவிட முடியும்.

குழந்தைகளிடம் ‘நீ இதை சமர்த்தா 10 நிமிடத்தில் சாப்பிட்டால் நான் உனக்கு அந்த கேம்ஸ் விளையாட அனுமதிப்பேன்… நீ ஜாலியா விளையாடலாம்…’ என்று சொல்லி ஆசை காட்டியே சாப்பாடு ஊட்டும் அம்மாக்களை கவனித்திருக்கிறீர்களா?

அங்கும் இதே டைமர் லாஜிக்தான் பயன்படுகிறது.

ஒரு விஷயத்தில் / வேலையில்  ஆசையைத் தூண்டி, மற்றொரு விஷயத்துக்கு / வேலைக்கு நேரத்தைக் குறித்துக்கொண்டு செய்ய ஆரம்பித்தால் இரண்டு விஷயங்களுமே / வேலைகளுமே குறித்த நேரத்தில் முடிந்துவிடும்.

இது அலுவலகம், வீடு என எல்லா இடங்களிலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடிய லாஜிக்.

மனமெனும் டைமரில் நேரத்தைப் பொருத்திக்கொண்டு வேலைகளை செய்ய ஆரம்பியுங்கள். கூடவே அந்த வேலையை முடித்த பிறகு உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்ய முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

அப்புறம் என்ன, எந்த வேலையானாலும் எப்படிப்பட்ட கடினமான பணியானாலும் ஜமாய்த்து விட முடியும் உங்களால்.

கஷ்டமானதை இஷ்டமானதாக்கிக்கொள்ள இது ஒன்றே வழி!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 9 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon