#கதை: ஜம்முனு வாழ காம்கேரின் OTP-48: ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 48
பிப்ரவரி 17, 2021

ராம்ஜிக்கு ஸ்க்ரிப்ட் எழுதத் தெரியலையே!

(உண்மை சம்பவத்தின் கதை வடிவம்)

ராம்ஜி. வயது 62. சமையல் அறையில் சமைத்துக்கொண்டிருந்தார். மனமோ மகன் பேசியதன் தாக்கத்தில்.

நேற்று மூத்த மகன் சொன்ன வார்த்தை இரவு முழுவதும் தூங்க விடாமல் மனதை என்னவோ செய்துகொண்டிருந்தது. இதற்குத்தான் அவசியம் ஏற்பட்டலே தவிர மாலை 6 மணிக்கு மேல் மகன்களுடன் போனில் பேசுவதில்லை என்ற வீர வைராக்கியம் வைத்திருக்கிறார்.

செல்போன் உடைந்துவிட்டது. வேறு வாங்க வேண்டும். அதற்காக நேற்று காலையிலேயே மகனிடம் ஆன்லைனில் ஆர்டர் செய்யச் சொல்வதற்காக போன் செய்திருந்தார். பிசியாக இருப்பதால் இரவு அழைப்பதாக வாட்ஸ் அப் செய்திருந்தான். அவன் பேசும்போதுதானே பேச முடியும். அதனால் இரவில் பேச வேண்டியதாகிவிட்டது.

ஆன்லைனில் ஆர்டர் செய்து தன் வங்கி யூசர் நேம் பாஸ்வேர்டை கொடுத்து செல்போனுக்கான கட்டணத்தைச் செலுத்தச் சொல்லிய பிறகு ‘ஓகேப்பா, குட்நைட்’ என அவன் சொன்னவுடன்  போனை வைத்திருக்க வேண்டும். பாழாய்போன மனசு கேட்க மாட்டேன் என்கிறதே.

‘என்னடா, சாப்பிட்டியா… இன்னிக்கு என்ன டிபன்?’

‘இரவு மணி 11 ஆகப் போறது… தூங்க விடுப்பா… இந்த நேரத்தில் சாப்பிட்டியா, என்ன டிபன் அப்படின்னு கேள்வி கேட்டு…’

‘என்னடா நான் தப்பா கேட்டுட்டேன்… சாப்பிட்டியான்னு தானே கேட்டேன்… இப்பவே நீ இப்படி இருந்தால் உனக்கு கல்யாணம் குழந்தைன்னு ஆனதும் என்னை அப்படியே மறந்துடுவே இல்ல…’

ராம்ஜியின் இந்த ஆதங்கத்துக்கு மகன் கொடுத்த பதிலில் தூக்கம் தொலைத்திருந்தார்.

‘நீயாக சினிமாவுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுவதைப் போல் கற்பனை செய்து எழுதிக்கொள்ளாதே… நாங்கள் சொன்னோமா உன் மேல் பாசமில்லை அப்படின்னு…’

மகனின் இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப தானாகவே ‘ரீவைண்ட்’ ஆகிக்கொண்டே இருந்ததால் உறக்கம் இல்லை.

மூத்தவன் அகிலேஷ். வயது 26. நல்லவன்தான். ஆனால், பெங்களூரில் பணிபுரியும் அவன் தன் மாத சம்பளம் எவ்வளவு என்றுகூட சொல்வதில்லை. அவனுக்கு எல்லாமே ராம்ஜியின் மனைவியுடைய அண்ணனும், அண்ணியும்தான். மாமா, மாமி சொல்வதே வேதவாக்கு. அவர்களும் நல்லவர்கள்தான்.

மிகச் சரியாக இத்தனை ரூபாய் சம்பளம் என சொல்ல வேண்டாம். சும்மா பொய்யாகக் கூட ஒரு தொகையை ‘இதுதாம்பா  என் சம்பளம்…’ என்று சொல்லலாம் அல்லவா?

மூத்தவன் இப்படி என்றால் இளையவன் கதையே வேறு. சரபேஷ். வயது 24 டிப்ளமோ படித்து முடித்ததும் ஒன்றிரண்டு இடங்களில் வேலை செய்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக பிசினஸ் செய்யப் போகிறேன் என சொல்லி ரிடையர்மெண்ட் செட்டில்மெண்ட் பணத்தில் இருந்து கொஞ்சம் பணம் வேண்டும் என்று சொல்லி வாங்கிக்கொண்டு அம்பத்தூரில் தனியாக பிசினஸ் செய்து வருகிறான். செல்போன் கவர் மற்றும் உதிரி பாகங்கள் தயார் செய்து விற்பனை செய்யும் பிசினஸ்.

அவன் இயங்கும் களம் சொல்போன் சம்மந்தப்பட்டது என்றாலும் போன் செய்தால் அழைப்பை எடுக்க மாட்டான். வெறுப்பெல்லாம் கிடையாது. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவ்வளவுதான். அவனுக்கு எல்லாமே ராம்ஜியின் மனைவியுடைய அக்காவும், அக்கவின் கணவரும்தான். பெரியம்மா, பெரியப்பா சொல்வதே வேதவாக்கு. அவர்களும் நல்லவர்கள்தான்.

எப்படி இவர்கள் ராம்ஜியின் கையைவிட்டுப் போனார்கள் அல்லது ஒதுங்கிச் சென்றாக ராம்ஜியே நினைத்துக்கொண்டிருக்கிறாரா?

ராம்ஜியின் மனைவிக்கு 40 வயதிருக்கும்போது திடீரென தொடர்ச்சியாக வயிற்று வலி. பெண்களுக்கு அந்த வயதில் ஏற்படும் பிரச்சனை என நினைத்து கைவைத்தியம் செய்து கொண்டிருக்க ஒருநாள் தாங்க முடியாத வலியினால் துடிக்க மருத்துவர் முற்றிய நிலையில் புற்றுநோய் என சொல்லி கைவிரிக்க என்ன ஏது என்று யோசித்து அதிர்ச்சி அடையக்கூட நேரம் கொடுக்காமல் அவசரம் அவசரமாக போய் சேர்ந்துவிட்டார்.

ராம்ஜி தன் மனைவி திடீரென கைவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருக்க 12, 13 வயதே ஆன மகன்களுக்கு மனைவியின் அக்காவும், அண்ணாவின் மனைவியும் ‘நாங்க இருக்கோம் உங்களுக்கு அம்மாவா’ என ஆறுதல் சொல்ல மகன்களும் அம்மா ஸ்தானத்தில் அவர்களை வைத்துக்கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் வெவ்வேறு இடங்களில் வசித்தாலும் மகன்கள் படிப்பாகட்டும், வேலையாகட்டும் எதுவாக இருந்தாலும் பெரியவனுக்கு மாமியும், சின்னவனுக்கு பெரியம்மாவும் சொல்வதே வேதவாக்கு.

அவர்களும் நல்லவர்களே. குழந்தைகள் மனதை கெடுக்கவில்லை. அப்பாவிடம் இருந்து பிரிக்கவில்லை. ஆனால் தங்களைக் கொண்டாடுவதையும் தடுக்கவில்லை.  ‘அப்பாவிடமும் பாசமாக இருங்கள்’ என அறிவுரை சொல்வார்களா என தெரியவில்லை. அப்படி சொல்லச் சொல்லி அவர்களிடம் கேட்க கூச்சமாக இருந்தது ராம்ஜிக்கு. சில நேரங்களில் தனிமையில் தன் நிலையை எண்ணி அழக்கூட செய்திருக்கிறார்.

‘என்னடா அழுதியா… முகம் ஒருமாதிரி இருக்கு’ என அம்மா மிரட்டலாக வழக்கம்போல அதிகார அன்பில் கேட்கும்போதெல்லாம் ‘நீ வேறம்மா, ஆன வயசுக்கு அழுகை ஒண்ணுதான் குறைச்சல்’ என சொல்லி முகத்தில் உள்ள வியர்வையை துடைத்துக்கொள்வதைபோல கண்ணீரை மறைத்துக்கொண்டு சமையல் அறைக்குள் சென்றுவிடுவார்.

அப்பா ஸ்தானத்தில் எதற்காக இருக்கிறோம் என பல நாட்கள் நினைத்ததுண்டு. மாமி குடும்பமும், பெரியம்மா குடும்பமும் ஆலோசனை வழங்குவதற்கும் அன்பாக ஆதரவாக பேசுவதற்கும் மட்டுமே. செலவுகளுக்கு அப்பாதான் வேண்டும் அவர்களுக்கு. அதற்காகவாவது தன் இருப்பு பயனுள்ளதாக இருக்கிறதே என நினைத்து ஆறுதல் கொள்வார்.

ஏதேதோ நினைவுகள். குழப்பமாக இருந்தது. தலைவலி வேறு.

‘டேய் எத்தனை டம்ளர் தண்ணீர் விட்டாய் ரசத்துக்கு… நான் சொல்லாமலேயே ஏதோ செய்துகொண்டிருக்கிறாய்…’ அதட்டல் குரலில் சகஜ நிலைக்கு வந்தார்.

வழக்கம்போல் அவர் அம்மாவின் மிரட்டல்தான். வயது 85. நாற்காலியில் அமர்ந்து ஸ்லோகம் படித்தபடி கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு மிரட்டல் குரலில் மட்டுமல்ல கண்களிலும்தான்.

தினம் தினம் வைக்கும் ரசமும், குழம்பும், கறியும் கூட்டும்தான். ஆனாலும் அம்மாவுக்கு தான் சொல்லித்தான் மகன் சமைக்கிறான் என்ற எண்ணம். அத்துடன் தானே சமைப்பதைப் போல ஓர் உணர்வும் உண்டாகும் திருப்தி அவர் முகத்தில் தெரியும். இவ்வளவு தண்ணீர் விடு, இவ்வளவு பொடி போடு, இவ்வளவு உப்பு போடு, குக்கருக்கு இவ்வளவு சவுண்ட் வரட்டும் என சொல்லிக்கொண்டே இருப்பார்.

ராம்ஜியும் சலித்துக்கொள்ளாமல் அம்மா சொல்வதை அப்படியே கேட்டு சமைத்துக்கொண்டிருப்பார். ‘பாவம் அம்மாவுக்கும் யார் இருக்கிறார்கள் பேசுவதற்கு’ என பரிதாபத்தில் எதிர்த்துப் பேசுவதில்லை.

தன் 25 வயதில் கணவனை இழந்து மூன்று குழந்தைகளையும் சமையல் வேலை செய்து ஆளாக்கிய புண்ணியவதி. அதனால் தான் சமையலில் மிகவும் கெட்டிக்காரி என்ற எண்ணம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போல பேசுவதுதான் ராம்ஜிக்கு கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். அதுவும் தனக்கு எதுவுமே தெரியாது என நினைத்துக்கொண்டு தினம் தினம் இப்படி ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுத்து சமைக்கச் சொல்வது எப்பேர்ப்பட்ட பொறுமைசாலிக்கும் சலிப்பை ஏற்படுத்தும். ஆனால் ராம்ஜிக்கு சலிப்பே ஏற்படுவதில்லை.

‘அம்மா இன்னிக்கு வெண்டைக்காய் கறி. எவ்வளவு பொடி போடலாம்…’ என அம்மாவை நெருங்கிப் போய் கேட்டார். அம்மாவுக்கு கண்தான் தீர்க்கம். காது மந்தமாகிவிட்டது. நெருங்கி அமைதியாக பேசினால் புரிந்துகொள்வார். வாய் அசைவை கவனிக்கும்போது புரிதல் இன்னும் கூடுதலாகும்.

‘ரெண்டு பேருக்குத்தானே… பொடி இரண்டு ஸ்பூன் போடு, உப்பு கால் ஸ்பூனுக்கும் குறைவா போடு… அப்புறம் கொஞ்சம் புளிச்ச தயிர் இருந்தால் ரெண்டு ஸ்பூன் விட்டுட்டு அடுப்பில் வை… அப்போ தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வரும்…’ என வழக்கமான டிப்ஸ். வாரத்தில் இரண்டு நாள் வெண்டைக்காய் கறிதான். ஆனாலும் அம்மா அலுக்காமல் டிப்ஸ் கொடுத்துக்கொண்டே இருப்பார். அம்மாவிடம் கேட்காமல் செய்துவிட்டால் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அன்று முழுவதும் பாராமுகம்தான்.

அம்மா நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டர். ஒரு எழுத்து ஒரு வார்த்தை பிசகாமல் தினம் தினம் அதே ஸ்கிரிப்ட்டை சொல்கிறாரே.

மகன்களுக்கு மாமியும், பெரியம்மாவும் ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுத்து இயக்க, ராம்ஜிக்கு அவர் அம்மா ஸ்கிரிப்ட் எழுதிக்கொடுத்து இயக்க எல்லோருமே மிக நன்றாகவே ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள்.

அவருக்கு மட்டும்தான் ஸ்கிரிப்ட் எழுதத் தெரியாமல் போய்விட்டது. தெரிந்திருந்தால் மனைவி இறந்த அடுத்த நொடி மகன்களை அணைத்துக்கொண்டு ‘நான் இருக்கேண்டா உங்களுக்கு அம்மாவுக்கு அம்மாவாய்’ என சொல்லி இருப்பார்.

அதை நினைத்து வருத்தப்படாத நாளே கிடையாது அவர்.

ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. தினமும் விருப்பப்படி சமைத்து சாப்பிட முடிகிறது. படிக்க முடிகிறது. ஃபேஸ்புக், யு-டியூப் என பொழுது போகிறது. நினைத்துக்கொண்டால் கோயில். ஏதேனும் பணத் தேவை என்றால் மட்டும் மகன்கள் வருவார்கள். தீபாவளி, பொங்கல், பிறந்த நாளுக்கு புது டிரஸ் அமேசானில் அனுப்பி விடுவார்கள். நிம்மதியாகத்தான் சென்றுகொண்டிருக்கிறது வாழ்க்கை.

இதே நிலை தொடர்ந்தால் தன் 70+ வயோதிகத்தில் முடியாத சூழலில் மகன்களிடம் இருந்து இன்னும் இடைவெளி விழுந்துவிடுமோ என்ற பயம் அவ்வப்பொழுது ஏற்படுகிறது.

அதன் தாக்கத்தில் நேற்று இரவு மகனிடம் தன் ஆதங்கத்தைச் சொல்ல அதற்கு அவன் கொடுத்த பதில்தான், ‘நீயாக சினிமாவுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுவதைப் போல் கற்பனை செய்து எழுதிக்கொள்ளாதே… நாங்கள் சொன்னோமா உன் மேல் பாசமில்லை அப்படின்னு…’.

‘எனக்கு ஸ்கிரிப்ட் எழுதத் தெரிந்திருந்தால் நான் ஏண்டா இப்படி இருக்கப் போகிறேன்…’ என்று நேற்று மகன் சொன்னதுக்கு இப்போது வாய்விட்டு பதில் சொன்னார்.

‘என்னடா ஸ்கிரிப்ட் அது இதுனு ஏதோ சொல்லறே…’ அம்மாவின் குரல் அதட்டலாக.

அம்மாவுக்கு இதெல்லாம் சரியாக காதில் விழுந்துடும் என நினைத்துகொண்டு ‘ஒண்ணுமில்லேம்மா, மோர் கரைச்சுட்டேன். இங்கே பார் இதுதான் அளவு. எவ்வளவு உப்பு போடலாம்…’ என மோர் கரைத்த பாத்திரத்தை அம்மாவிடம் காண்பிக்க அம்மாவின் அருகில் சென்றார் ராம்ஜி.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

கிளப் ஹவுஸில் மேடம் ஃபாத்திமா பாபு அவர்களால் வாசிக்கப்பட்ட கதை:

கிளப் ஹவுஸில் இந்தக் கதை குறித்த உரையாடல்:

(Visited 1,849 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon