ஜம்முனு வாழ காம்கேரின் OTP-56: சில நேரங்களில் சில ‘மாஸ்க்’ மனிதர்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 56
பிப்ரவரி 25, 2021

சில நேரங்களில் சில ‘மாஸ்க்’ மனிதர்கள்!

நேற்று ஒரு வேலையாக போஸ்ட் ஆஃபீஸ் சென்றிருந்தேன். நானே நேரில் சென்று செய்து முடிக்க வேண்டிய முக்கியமான வேலை என்பதால் உதவியாளர் யாரையும் அனுப்பாமல் நானே சென்றிருந்தேன்.

வழக்கம்போல நான் முகத்துக்கு மாஸ்க்கும், கைகளுக்கு கிளவுஸும் அணிந்திருந்தேன். பையில் சானிடைசர். எனக்கு முன் நின்றிருந்தவருக்கும் எனக்கும் போதுமான இடைவெளி விட்டு சமூக இடைவெளியும் கடைபிடித்தேன்.

அதற்குள் போஸ்ட் ஆஃபீஸ் முழுவதையும் ஒரு சுற்றுப் பார்த்தேன். பணியாளர்கள் 90 சதவிகிதம் மாஸ்க் அணியவில்லை. வாடிக்கையாளர்களில் 80 சதவிகிதம் அணியவில்லை. ஒட்டு மொத்தமாக 30 சதவிகிதம் மக்கள் மாஸ்க் அணிந்திருந்தனர்.

அப்படியே அணிந்திருந்தவர்களின் வாயை மட்டுமே மாஸ்க் மூடியிருந்தது. மூக்கு வெளியில் கார்ட்டூன்களை நினைவூட்டியது. கார்ட்டூன்களில் மூக்குகள்தானே பிரதானம். அதில் வித்தியாசப்படுத்தித்தானே கார்ட்டூன் கேரக்ட்டர்களை உருவாக்குவார்கள்.

ஒரு சிலர் தாடைக்கு மாஸ்க் போட்டிருந்தனர். இன்னும் ஒருசிலருக்கு அது கழுத்துவரை இறங்கி இருந்தது. தாடைக்கு மாஸ்க் அணிய முடியும். கழுத்து வரை மாஸ்க் எப்படி வருகிறது என்று பார்க்கலாம் என்றால் நாகரிகம் கருதி கவனிக்கவில்லை.

வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இருமும்போதும் தும்மும்போதும் மிக சின்ஸியராக மாஸ்க்கை தாடைக்கு நகர்த்திவிட்டுக்கொண்டு கடமையை முடித்துவிட்டு மாஸ்க்கை திரும்பவும் பழைய நிலையில் பொருத்திக்கொண்டார்கள். நான் அவர்களை கவனித்தபோது அழகாக ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டு கூலிங் கிளாஸை சரி செய்துகொள்ளும் கம்பீரத்துடன் மாஸ்க்கை கைகளால் சரி செய்துகொண்டார்கள்.

நான் நின்று கொண்டிருந்த கவுண்ட்டரில் இரண்டு பேரே நின்றிருந்தாலும் கால் மணி நேரமாகியும் ‘க்யூ’ அப்படியே இருந்தது. நகரவே இல்லை. மற்ற கவுண்ட்டர்களிலும் இதே நிலைதான். நான் நின்று கொண்டிருந்த கவுண்ட்டர் ஸ்டாஃப் கத்தையாக சில அப்ளிகேஷன்களை வைத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் எண்ட்ரி போட்டுக்கொண்டிருந்தார். மற்றவர்களாவது பெயருக்கு மாஸ்க் அணிந்து அதை தாடையிலும் கழுத்திலும் தொங்கவிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் என் கவுண்ட்டர் ஸ்டாஃபோ மாஸ்க் என்ற ஸ்மரனையே இல்லாமல் அவர் வேறு உலகில் இருப்பவரைப் போல கருமமே கண்ணாயினராக பணியில் கவனமாக இருந்தார்.

இதற்கிடையில் ஒரு பணிப்பெண் ஃப்ளாஸ்க்கில் காபி எடுத்துவந்து வரிசையாக ஒவ்வொரு கவுண்ட்டராக கொடுத்துக்கொண்டே வந்தார். அவர் மாஸ்க் அணியவில்லை. நான் நின்று கொண்டிருந்த கவுண்ட்டர் வந்ததும் என் மீது இடித்துக்கொண்டே சென்றார். நான் அவரை அழைத்து சமூக இடைவெளி விட்டு இடிக்காமல் செல்லுங்கள் என்று சொல்லலாம் என்றால் சிட்டாய் பறந்துவிட்டார். பறந்து பறந்து வேலை செய்வார்கள் என்று சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்குச் சொல்வார்களே அதுப்போல பறக்காத குறைதான். அத்தனை பரபரப்பு.

என் பக்கத்துக் கவுண்ட்டரில் இருந்த ஒரு நடுத்தர வயது பெண், மாஸ்க்கை தாடைக்கு நகர்த்திவிட்டு நாக்கில் எச்சிலைத் தொட்டு பணத்தை என்ன ஆரம்பித்தார். தொடர்ச்சியாக மூன்று நான்கு முறை எச்சில் விநியோகம் செய்து பணத்தை எண்ணி முடித்தார். அவர் எச்சில் செய்த ரூபாய்களை கவுண்ட்டரில் இருப்பவர் பெற்றுக்கொண்டு வேலையை முடித்து ரசீது போட்டுகொடுத்தனுப்பினார். அந்த வாடிக்கையாளர் எச்சில் தொட்டு ரூபாய் நோட்டுகளை எண்ணுவதை அவரும் கவனித்தார். ஆனாலும் எந்த எச்சரிக்கையும் செய்யவில்லை. தானும் அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணிய பிறகு தன் கைகளை சானிடைசர் போட்டு சுத்தமும் செய்துகொள்ளவில்லை. ஆனால் டேபிள் மூலையில் சானிடைசர் பாட்டில் ஜம்மென்று உட்கார்ந்திருந்து  ‘என்னைப் பார் என் அழகைப் பார்’ என்று சொல்லிக்கொண்டு.

ஆதார் அட்டை செக்‌ஷன் ஸ்டாஃப் மட்டும் மாஸ்க் அணிந்திருந்தார். வாடிக்கையாளர்கள் மாஸ்க் கழற்றிவிட்டுதானே போட்டோவுக்கு தயாராக வேண்டும். பின் கை ரேகைகளை பதிவாக்கி விட்டு கைகளை சுத்தம் செய்யாமலேயே திரும்பவும் மாஸ்க்கை நன்றாக துடைத்துக்கொண்டு முகத்தில் பொருத்திக்கொண்டனர். சுத்தமாக இருக்கிறார்களாம். தான் அமரும் பைக்கின் சீட் தூசியால் ஒரு லேயர் படர்ந்து ஒரு அடி உயர்ந்திருந்தாலும் மறந்தும் அதை துடைத்துவிட்டு அமர மாட்டோம். ஏன் கைகளால் ஒரு தட்டு தட்டின்னால்கூட போதுமே. செய்ய மாட்டோம். பைக் அருகில் வந்ததும்தான் சுறுசுறுப்பே வரும். ஆனால் மாஸ்க்கை சுத்தம் செய்யாத சானிடைசர் போடாத கைகளால் நன்றாக சுத்தம் செய்வோம். மனிதர்களின் மனோபாவம் ஆச்சர்யமாக இருந்தது.

இதற்குள் கவுண்ட்டரில் கியூ நகர்ந்து எனக்கான இடம் வந்தது. அந்த ஸ்டாஃப் சட்டென நாக்கில் எச்சில் தொட்டு ஒரு டாக்குமெண்ட் கத்தையில் இருந்து ஓரிரு டாக்குமெண்ட்டுகளை எடுத்துக்கொண்டு பக்கத்து கவுண்ட்டர் ஸ்டாஃபிடம் கொடுத்துவிட்டு அவர் காதுக்கருகில் குனிந்து ஏதோ ரகசியமாய் சொன்னார். அலுவலக தகவலாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இருவருமே சிரிக்கவில்லை. சீரியஸாகவே தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். ரகசியம் சொன்னவரும், ரகசியம் கேட்டவரும் மாஸ்க் அணியவில்லை என்பதுதான் ஹைலைட்.

எனக்கான வேலை முடிந்ததும் ‘நன்றி மேடம்’ என்று சொல்லி கிளம்ப முற்பட்டபோதுதான் அந்த ஸ்டாஃப் என்னை நிமிர்ந்துப் பார்த்தார். கைகளில் கிளவுஸ் போட்டிருந்ததை கவனித்தார். அதிசயத்தைப் பார்த்ததைப் போல சிரித்துக்கொண்டார்.

அப்போதுதான் பொறி தட்டியது. நான் போஸ்ட் ஆஃபீஸில் நுழைந்ததில் இருந்து என்னைக் கடந்து செல்லும் பலரும் என்னை ஒருமுறை நின்று பார்த்துவிட்டுச் சென்றதை உணர்ந்தேன். அவர்களுக்கு என் கைகளில் அணிந்திருந்த கிளவுஸே காட்சிப்பொருளாகி இருந்தது.

சிலரின் பார்வையில் வியப்பு. சிலரில் பார்வையில் ‘ஓவர் சீன்’ என்ற நக்கல். சிலரின் பார்வையில் நாம் முகத்துக்குக்கூட மாஸ்க் போடவில்லையே, இவர் கைகளுக்குக்கூட கிளவுஸ் போட்டிருக்கிறாரே என்ற பயம்.

இந்த உணர்வுகளெல்லாம் என்னைக் கடக்கும் சில நொடிகள்தான். கடந்து சென்ற அடுத்த நொடி அவரவர்கள் பாணியில் அவரவர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.

நான்

முகத்துக்கு மாஸ்க்
கைகளுக்கு கிளவுஸ்
பையில் சானிடைஸர்
பழகும்போது சமூக இடைவெளி
அவசியப்படுவோருக்கு கைகூப்பி வணக்கம்
வீட்டை தினமும் டெட்டால் / எலுமிச்சை சாறும் உப்பும் கலந்த நீரால் துடைத்தல்
வீட்டுக்கு வந்ததும் கால் செருப்பை சுத்தம் செய்தல்
இளம் சூட்டில் வெந்நீர் குளியல்
அணிந்திருந்த ஆடைகளை துவைத்தல்
காலை டிபனில் கருவேப்பிலை, மிளகு, இஞ்சி கலந்தரைத்த நீர்மோர்
மதிய சாப்பாட்டில் நெல்லிக்காய், பூண்டு
மாலை எலுமிச்சைப்பழம், இஞ்சி கலந்த பாலில்லாத டீ
இரவில் சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், கடுக்காய், மஞ்சள் கலந்த பொடி போட்டு வெந்நீர் குடித்தல்…

என ஒவ்வொரு நாளும் என் சமூகக் கடமையை சரியாக, மிகச் சரியாகவே செய்துகொண்டிருக்கிறேன். எனக்காக மட்டும் அல்ல, என்னைச் சார்ந்த இந்த சமுதாயத்துக்காகவும் சேர்த்துத்தான்.

நாம் வாழும் இந்த சமுதாயத்துக்கு இதைக்கூட செய்ய முடியவில்லை என்றால் எப்படி?

கொரோனா இன்னும் முற்றிலும் ஓயவில்லை மக்களே! இரண்டாவது அலை, மூன்றவாது அலை என விஸ்வரூபம் எடுக்கக் காத்திருக்கின்றன என மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனமாக இருப்போம். சுத்தத்தைக் கடைபிடித்து சுகாதாரத்துடன் நாமும் வாழ்ந்து சார்ந்தோரையும் வாழ வைப்போம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 9 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon