ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 67
மார்ச் 8, 2021
பெண் ‘ஹிஸ்ட்டீரியா பேஷண்ட்’ அல்ல, மேஜிக் செய்யும் சக்தி பெற்றவள்!
பெண்கள் – சோர்வாக இருப்பதாகச் சொன்னால், அவள் ‘வீக்கர் செக்ஸ்’ என்று அர்த்தம் கிடையாது. அன்று அந்த நிமிடம் அவளுக்கு சோர்வாக இருக்கிறது என்று பொருள். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் – அமைதியாக நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தால் இருந்தால் அவளுக்கு எதுவும் தெரியாது என்று அர்த்தம் கிடையாது. உங்களை மதித்து உங்கள் வார்த்தைகளை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்று மட்டுமே அர்த்தம். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் – சில நேரங்களில் தனிமையில் இருக்க விரும்புவதாகச் சொன்னால், அவள் அடிக்கடி ‘மூட் அவுட்’ ஆகும் பெண் என்று அர்த்தம் கிடையாது. நாள் முழுவதும் உழைக்கும் அவளுக்கு தனக்கான சில நிமிடங்கள் தேவைப்படுகிறது என்று பொருள். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் – தாங்கள் செய்யும் வேலையில் ஏதேனும் உதவி கேட்டால், அவளால் அந்த வேலையை தனியாக செய்ய முடியாது என்று அர்த்தம் கிடையாது. நீங்கள் உதவி செய்தால் அந்த வேலை இன்னும் அழகாக நேர்த்தியாக வரும் என்று அவள் நினைக்கிறாள் என்றே அர்த்தம். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் – ஏதேனும் ஒரு விஷயத்துக்கு உங்களிடம் பதட்டப்பட்டால் அவள் ‘தொட்டால் சிணுங்கி’ என்றோ ‘சென்சிட்டிவ்’ என்றோ அர்த்தம் கிடையாது. நீங்கள் செய்கின்ற அந்த குறிப்பிட்ட செயல் அவளுக்குப் பிடிக்கவில்லை என்று மட்டுமே அர்த்தம். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் – என்றேனும் ‘பளிச்’ முகத்துடன் இல்லை என்றால், அவள் முகமே அப்படித்தான் என்று அர்த்தம் கிடையாது. அவளுக்கு அன்று வேலை அதிகம் என்று மட்டுமே அர்த்தம். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் – மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பினால் அவள் பெண்ணியவாதி, வீட்டுக்கு அடங்க மாட்டாள் என்று அர்த்தம் கிடையாது. அவள் சார்ந்த கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள விரும்புகிறாள் என்றே அர்த்தம். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் – ஏதேனும் ஒரு விஷயத்துக்காக பயந்தால் அவள் பயந்தாங்கொள்ளி என்று அர்த்தம் அல்ல. அவளுக்கு அந்த குறிப்பிட்ட விஷயத்தில் பயம் என்று மட்டுமே அர்த்தம். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் – ஏதேனும் ஒரு விஷயத்துக்காக வீட்டிலோ அல்லது பொதுவெளியிலோ கோபப்பட்டுக் கத்தினால் அவள் ‘கோபக்காரி’ என்றோ ‘ராட்சசி’ என்றோ அர்த்தம் கிடையாது. சதா கத்துவதற்கு பெண்கள் ஒன்றும் ‘ஹிஸ்ட்டீரியா பேஷண்ட்’ அல்ல. அப்படி அவள் கத்துவதற்கு முன் 1000 முறை அதே விஷயத்துக்காக உங்களின் ஹிஸ்ட்டீரியாத்தனமான செயல்பாடுகளுக்காக மென்மையாகவே உங்களிடம் விவாதித்திருப்பாள் என்பதை நினைவில் வையுங்கள். அவ்வளவுதான். That’s it.
பெண்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் அவர்களைச் சுற்றி நடக்கும் கோமாளித்தனங்களை சகித்துக்கொண்டு வாழ்கிறாள் என்றால் அதற்கு அவள் சகிப்புத்தன்மை அதிகம் உள்ளவள் என்று மட்டுமே பொருள். அவள் ஏமாளி என்று அர்த்தம் கிடையாது. அவ்வளவுதான். That’s it!
பெண்களை ஆராய வேண்டாம். ஆதரவு அளிப்பதாகச் சொல்லி அவளை அதரவற்றவளாக உணரச் செய்து கீழிறக்க வேண்டாம். கைத் தூக்கிவிடுவதாகச் சொல்லி அவள் என்னவோ பள்ளத்தில் இருப்பத்தைப் போலவும், நீங்கள் உயரத்தில் இருப்பதைப் போலவும் உங்களை நீங்களே பெரிய மனிதராக காட்டிக்கொள்ள வேண்டாம். பெண்களின் திறமையை ஊக்குவிக்கிறோம் எனச் சொல்லி அவளை உற்சாகப்படுத்துவதாகக் கருதி ‘புகழுக்கு மயங்காத பெண்கள் உண்டோ’ என மனதில் நினைத்துக்கொண்டு சிறுபிள்ளை போல அவளை வஞ்சப்புகழ்ச்சி செய்து உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ள வேண்டாம்.
திரும்பவும் சொல்கிறேன்… ஆண்கள் பலசாலிகளாக இருக்கலாம். ஆனால் புத்திசாலித்தனத்தில் பெண்கள் ஆண்களைவிட பலசாலிகள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பலமடங்காக்கி விடும் மேஜிக்கை இயற்கையே அவளுக்குக் கற்றுக்கொடுத்துள்ளது என்பதை நினைவில் வையுங்கள். அன்பைக் கொடுத்தல் பேரன்பை பெறலாம். வக்கிரத்தைக் கொடுத்தால் வன்மத்தால் உங்களைத் தூக்கி அடிப்பாள். கவனம்!
‘மேஜிக்’ செய்யும் சக்திபெற்ற பெண்களிடம் கவனமாக இருங்கள். அவளிடம் நீங்கள் எதைப் பெற நினைக்கிறீர்களோ அதை மட்டுமே அவளிடம் கொடுங்கள். பலமடங்காகத் திரும்பப் பெறுவீர்கள்.
வாழ்க்கை அழகாக இருக்கும்.
வீடு அழகாக இருக்கும்.
குடும்பம் அழகாக இருக்கும்.
சமுதாயம் அழகாக இருக்கும்.
ஏன், இந்தப் பிரபஞ்சமே பேரழகில் மிளிரும்!
புரிந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP