ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 68
மார்ச் 9, 2021
தங்கத்திலேயே ஊன்றுகோல் கொடுத்தாலும் அது ஊன்றுகோல்தானே, கால் அல்லவே?
சென்ற ஞாயிறு அன்று ஜீ-தமிழில் ‘தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சி. ‘சிங்கில் பேரண்ட்டாக’ குழந்தைகளை வளர்க்கும் அப்பாக்களும் அம்மாக்களும் ஒரு புறம். மறுபுறம் அவர்களின் குழந்தைகள்.
பெரும்பாலான பெண்கள் இளம் வயதினராகவே இருந்தார்கள். ஆண்களும்தான்.
பெண்கள் தங்கள் இணையை விட்டு விலகியதற்கு முக்கியக்காரணம் அவர்களின் மது, மாது உள்ளிட்ட பல்வேறு தவறான பழக்கங்க வழக்கங்களைச் சொன்னார்கள்.
ஆண்கள் மனைவி இறந்துபோனதையே காரணம் சொன்னார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகள் பள்ளி படிக்கும் வயதில் இருந்து திருமணம் ஆனவர்கள் வரை பலதரப்பட்ட வயதினரில் இருந்தார்கள்.
இணையை இழந்த பெண்கள் மிக தைரியமாக பேசினார்கள். ஆண்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதிகம் கண்ணீர் விட்டார்கள்.
குழந்தைகள் என்னதான் உற்சாகமாகப் பேசினாலும் அவர்களின் ஏக்கம் ஆங்காங்கே வெளிப்படத்தான் செய்தது. மற்ற நண்பர்களின் அப்பாக்களைப் பார்க்கும்போது அப்பா குறித்த சிந்தனை வருவதை தவிர்க்க முடிவதில்லை என்று சொல்லும்போது பார்க்கும் நமக்கே நெஞ்சம் நெகிழ்கிறது.
அப்பா, அம்மா இருவரும் சேர்ந்து வளர்க்கும்போதுதான் குழந்தைகள் மனதளவில் ஆரோக்கியமாக வளர முடியும் என்பது என் கருத்து. நல்ல சாப்பாடு, துணி மணிகள் இன்ன பிற செளகர்யங்களை வாரி வாரி வழங்கினாலும் அப்பா அல்லது அம்மா என்ற ஸ்தானம் வெற்றிடமாக இருக்கும்போது, அது என்ன காரணத்தினால் வேண்டுமானாலும் இருக்கலாம், அது குழந்தைகளைப் பொறுத்தவரை மிகப்பெரிய இழப்புதான்.
அப்பா இல்லாத குழந்தையை வளர்க்கும் அம்மாக்கள் குழந்தைகளை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாதே என கூடுதல் அக்கறையுடன் வளர்க்கும்போது கண்டிப்பு கொஞ்சம் கூடுதலாக இருப்பதை தவிர்க்க முடியாது. பாசத்தைப் பொழிந்தாலும் அதிலும் ஒரு ஓரமாக சின்ன கண்டிப்பு இருந்துகொண்டேதான் இருக்கும்.
அப்பா அம்மா இருவரும் சேர்ந்து வளர்க்கும்போது குழந்தைகள் ஒருவர் திட்டினால் மற்றொருவரிடம் ஆறுதல் பெறுவார்கள். யாரேனும் ஒருவர்தான் எனும் நிலையில் தங்கள் எல்லா உணர்வுகளையும் தாங்களே சுமக்க வேண்டும் அல்லது அம்மா / அப்பா யார் இருக்கிறார்களோ அவர்களிடம் காண்பிக்க வேண்டும். இது கொடுமையான ஒரு சூழல். அனுபவிப்பவர்கள் மட்டுமே அதை உணர முடியும்.
நல்ல மனமுதிர்ச்சி உள்ள குழந்தைகள் அம்மாவை புரிந்துகொண்டு பெயர் சொல்லும் அளவுக்கு வளருவார்கள். எல்லா குழந்தைகளுக்கும் மனமுதிர்ச்சி ஒரே அளவில் இருப்பதில்லையே.
விளைவு. அப்பா சரியில்லாத பெண் குழந்தைகள் ஆண்களையே வெறுத்தல் என்ற நிலைக்கு வருகிறார்கள் அல்லது அப்பா ஸ்தானத்தில் யாரைப் பார்த்தாலும் அப்பா போல கருதி அன்புக்காக ஏங்கும் நிலைக்குச் செல்கிறார்கள். இரண்டுமே ஆபத்துத்தானே.
ஆண்களையே வெறுப்பவர்கள் வாழ்க்கை நரகம். அப்பா வயதில் இருப்பவர்களை அப்பா போல கருதி ‘அப்பா அப்பா’ என அழைத்தாலும் யாரை அவர்கள் அப்பா என அழைக்கிறார்களோ அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் நிறைய. இப்படி எந்த எல்லைக்கும் செல்லாமல் சரியான பாதையில் செல்லும் அளவுக்கு குழந்தைகளை வளர்ப்பதுதான் சிங்கில் பேரண்டாக இருந்து குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்களின் சாமர்த்தியமாக உள்ளது.
இதே பிரச்சனைதான் ஆண் குழந்தைகளை வளர்ப்பதிலும். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு வருகின்ற பிரச்சனைகள் குறைவு. ஆனால் பிரச்சனை வேறு ரூபத்தில்.
சிங்கில் பேரண்ட்டாக இருந்து குழந்தைகளை அப்பாவுக்கு அப்பாவாக, அம்மாவுக்கு அம்மாவாக வளர்த்தாலும் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அந்த இடம் வெற்றிடமே.
ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளிக்கு தங்கத்திலேயே ஊன்றுகோல் செய்துகொடுத்தாலும், ஊன்றுகோல் ஊன்றுகோல்தானே. கால் இல்லாவிட்டால் என்ன தங்கத்தில் ஊன்றுகோல்தான் இருக்கிறதே என சொல்ல முடியுமா?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP