ஜம்முனு வாழ காம்கேரின் OTP-90: ‘கற்பனைகள்’ காவியங்கள் படைக்க மட்டும்தானா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 90
மார்ச் 31, 2021

‘கற்பனைகள்’ காவியங்கள் படைக்க மட்டும்தானா?

அவன் வீட்டின் உள்ளே நுழைகிறான். வழக்கமாக வீட்டில் பொருட்களை மாற்றி மாற்றி வைத்து ஏதேனும் மாற்றம் செய்துகொண்டே இருக்கும் அப்பாவைக் காணவில்லை. சதா ஐபேடில் புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கும் அம்மாவையும் காணவில்லை. வீடே ‘வெறிச்சோ’ என்றிருந்தது. அப்பா இருந்திருந்தால் ‘என்னப்பா சூடா காபி போட்டுத் தரட்டுமா?’ என கேள்வியை கேட்டிருப்பார். அம்மா ‘என்னடா போன வேலை நல்லபடியா முடிந்ததா?’ என்று கேள்வியை கேட்டிருப்பார். ஆனால் இருவரையும் காணவில்லை. அழுகை அழுகையாக வந்தது. இது என்னடா வாழ்க்கை என்று கோபம் கோபமாக வந்தது. ‘ஓவென’ கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. அழுதான். அழுதாலும் கேட்பதற்கு ஆட்கள் கிடையாது என்பதால் தைரியமாக சத்தம் போட்டு அழுதான். கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொள்ளக்கூடத் தோன்றாமல் சோபாவில் அப்படியே படுத்திருந்தான். என்ன நினைத்துக்கொண்டானோ சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து முகம் கழுவிக்கொண்டு வெளியே கிளம்பத் தயாரானான்.

இப்படி ஆகும் என தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அன்பாக இருந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கலாம். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என அவனது பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

ஆனால் என்ன நினைத்து என்ன பயன்? எல்லாம் முடிந்து போனது. இனி நினைவுகளை சுமந்துகொண்டு வாழ வேண்டியதுதான். வேறென்ன செய்வது?

திடீரென அம்மா ‘கந்தா…’ என அவனை அழைப்பதைப் போல் இருக்க திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். அம்மாதான் சாப்பிட கூப்பிட்டாள். அவனுக்கு அழுகையே வந்துவிடும்போல் இருந்தது. இப்போது வரும் அழுகை துக்கத்தினால் அல்ல. ஆனந்தத்தினால். எழுந்து கைகால் முகம் கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தான். தம்பி, அக்கா அனைவரும் அவனுக்கு முன்னாலேயே சாப்பிடத் தயாராக காத்திருந்தார்கள். அப்பாவும்தான்.

அனைவரையும் இப்போதுதான் முதன்முறை பார்ப்பதைப்போல் பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

அவன் இப்படித்தான் எப்போதேனும் கற்பனைக்குள் சென்றுவிடுவான். எப்போதெல்லாம் வீட்டில் அகங்காரம் தலைதூக்குகிறதோ, எப்போதெல்லாம் வாழ்க்கையின் கர்வம் தோன்றுகிறதோ, எப்போதெல்லாம் பிறரை மனம் நோக பேச வேண்டிய சூழல் உண்டாகிறதோ அப்போதெல்லாம் அவனை அறியாமல் இப்படித்தான்.

இந்தப் பழக்கம் இன்றல்ல, நேற்றல்ல. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அவனுக்குள் தொற்றிக்கொண்டது. இப்போது அவனுக்கு வயது 27.

அவன் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒருநாள் அவனது பள்ளிக்கு சைக்காலஜி நிபுணர் ஒருவர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பொதுவாக மாணவர்களுக்காகப் பேசுபவர்கள் ‘நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும்’, ‘அப்பா அம்மாவை மதிக்க வேண்டும்’, ‘ஆசிரியர்களை வணங்க வேண்டும்’, ‘நல்ல பண்புகளுடன் வாழ வேண்டும்’ அப்படி இப்படி என ஒரே மாதிரியான அறிவுரைகளையே அள்ளி வீசுவார்கள். எல்லா பக்கங்களில் இருந்தும் இதே மாதிரியான அறிவுரைகள் எனும்போது அவை போரடிக்கவே செய்யும். பொதுவாகவே அறிவுரைகள் போரடிக்கும். அதுவும் ஸ்டீரியோ டைப் அறிவுரைகள் இன்னும் கொஞ்சம் தூக்கலாக போரடிப்பது இயல்புதானே.

ஆனால் அந்த சைக்காலஜி நிபுணர் வேறு மாதிரி பேசினார். மாணவர்கள் தங்கள் வீட்டில் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா, உடன் பிறந்தவர்கள் என அனைவருடனும் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்துகொண்டார்.

பின்னர் அவர் சொன்ன ஒரு விஷயம்தான் இன்றளவும் அவன் அவ்வப்பொழுது செய்துவரும் கற்பனை உலகத்துக்குள் உலாவரும்  பழக்கமாகிப் போனது.

‘சரி மாணவர்களே, இப்போது ஒரு சூழலை கற்பனை செய்துகொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். கற்பனைதான். எனவே தைரியமாக எதிர்கொள்ளுங்கள்’ என சொல்லி அனைவரையும் கண்களை மூடிக்கொள்ளச் சொன்னார். அனைவரும் கண்களை மூடிக்கொண்டனர். அவர் சொல்வதைப் போல கற்பனை செய்யச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல அந்த மாணவர்களும் கற்பனை செய்தனர்.

இப்போது வீட்டில் நுழைகிறீர்கள். ‘அம்மா’ என கத்தியபடி நீங்கள் விசிறி அடிக்கும் காலணிகளையும், உங்கள் புத்தக மூட்டையையும் வாங்கிக்கொள்ள எதிர்கொள்ளும் அம்மாவைக் காணவில்லை. ‘வாடா செல்லம்’, ‘வாம்மா பட்டுக்குட்டி’ என உங்களை வாஞ்சையுடன் அழைக்கும் தாத்தா பாட்டியையும் காணவில்லை. உங்களுடன் வம்பு செய்யும் தம்பி அக்கா தங்கை என யாரையும் காணவில்லை. வீடு வெளிச்சமாக இருந்தாலும் உங்களுக்கு மட்டும் கும்மிருட்டில் இருப்பதாகத் தோன்றுகிறது. அப்படியே ஒரு மூலையில் உட்கார்ந்துகொள்கிறீர்கள். மாலை அலுவலகத்திலிருந்து வரும் அப்பாவையும் காணவில்லை. நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. பசி வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பிட டிபன் இருந்தாலும் எடுத்து சாப்பிட மனம் வரவில்லை. தாகம் எடுக்கிறது. குடிக்கத் தண்ணீர் இருந்தாலும் எடுத்துக்குடிக்கத் தோன்றவில்லை. அழுகை அழுகையாக வருகிறது. ‘என்னடா வாழ்க்கை’ என கோபமும் வருகிறது. ஓவென அழுகிறீர்கள்.

அவ்வளவுதான். சில நொடிகள் அப்படியே இருங்கள் என சொல்லிவிட்டு அமைதியானார். மாணவர்களில் பலரும் மாணவிகளில் சிலரும் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தனர். அமைதியான சூழலில் விசும்பல் சப்தம் கேட்டு அனைவரும் கண்விழித்தனர்.

சைக்காலஜி நிபுணர் தன் உரையைத் தொடர்ந்தார்.

‘என்ன மாணவர்களே, உங்களுக்கு பயம் காட்டுவதற்காக இந்த கற்பனையை செய்யச் சொல்லவில்லை. நிதர்சனம் எப்படி இருக்கும் என்பதை சொல்லவே இந்த கற்பனை விளையாட்டு. இந்த கற்பனைச் சூழல் இன்று இப்போது இந்த நொடி கற்பனைதான். ஆனால் உங்கள் வாழ்க்கையில் என்றேனும் ஒருநாள் வந்தே தீரும். அந்த நாள் என்று என யாருக்குமே தெரியாது. அன்று உங்கள் உடன் பிறந்தவர்கள் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகி இருப்பார்கள். தாத்தா பாட்டி ஒவ்வொருவராக காலமாகி இருப்பார்கள். அப்பா அம்மாவும்தான். நீங்கள் மட்டுமே தனித்து விடப்பட்டிருப்பீர்கள். அந்த நாள் உங்களுக்கு மிகக் கொடுமையாக இருக்கும். நீங்கள் செய்த சின்ன சின்ன தவறுகள் உங்களை உறுத்தும். அப்பா அம்மாவிடம் தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சண்டை போட்டு ஆர்பாட்டம் செய்து அடம் பிடித்தது, அவர்களுக்குத் தெரியாது என நினைத்து அவர்களை ஏமாற்றுவதாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டு செய்த செயல்கள் எல்லாம் உங்கள் கண்முன் தலைவிரித்தாடும். அதுபோல உடன் பிறந்தவர்களுடன் சண்டை போட்டது, தாத்தா பாட்டியை மதிக்காமல் அலட்சியமாக எதிர்த்துப் பேசியது என அனைத்தும் நினைவுக்கு வரும்.

இப்படி ஒரு சூழல் வரும் என தெரிந்திருந்தால் அப்பா அம்மாவுடன் இன்னும் அன்பாக இருந்திருக்கலாமே, உடன் பிறந்தவர்களுடன் பாசமாக பழகியிருக்கலாமே, தாத்தா பாட்டியை மதித்து இரண்டு வார்த்தைகள் தினமும் பேசியிருக்கலாமே என்று உள்ளுக்குள் குமைந்து குமைந்து அழத் தோன்றும். ஆனால் எதையும் செய்ய முடியாது. ஏனெனில் யாரும் இங்கே ஆணி அடித்தாற்போல் அப்படியே இருக்கப்போவதில்லை. ஒவ்வொருவராக கிளம்பிச் செல்ல வேண்டியதுதான். அதுதான் இயற்கை.

எனவே இன்றிருந்து, இந்த நிமிடத்திலிருந்து உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் அன்பாக இருங்கள், பாசமாகப் பழகுங்கள். வாழும் காலத்தை ரீவைண்ட் செய்து திரும்பவும் வாழ்வதெல்லாம் கற்பனையில் மட்டுமே சாத்தியம். ஒவ்வொரு நொடி வாழ்க்கையும் சென்றால் சென்றதுதான். 40 வயதில் 15 வயது வாழ்க்கையை கற்பனைதன செய்துபார்க்க முடியும். வாழ முடியாது.

நம் உழைப்பால் திறமையால் பதவியால் பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் வயதை சம்பாதிக்கவே முடியாது. வயதானால் வயதானதுதான். சென்ற காலங்கள் சென்றவைதான். திரும்பப் பெறவே முடியாது. சென்ற காலங்களில் நம்முடன் இருந்தவர்களையும், இருந்தவற்றையும் எத்தனை பிரயத்தனப்பட்டாலும் திரும்பப் பெறவே முடியாது.

எனவே, இன்று உங்களுக்கு பொன்னான காலகட்டம். இன்னும் நிறைய காலங்கள் உங்கள் கண் முன் காத்திருக்கின்றன. வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க இப்போது நீங்கள் சேகரித்து வைக்கும் நினைவுகளால் மட்டுமே முடியும்…’

இப்படியாக அந்த உளவியல் உரை அமைந்திருந்தது. என்ன ஒரு அருமையான உளவியல் அலசல்?

பொதுவாக நன்றாகப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும், நல்ல மனைவி / கணவன் கிடைப்பார்கள், நல்ல வாழ்க்கை அமையும் இப்படித்தான் அறிவுரைகள் இருக்கும். ஆனால், வாழ்க்கையின் நிதர்சனம் இப்படித்தான் இருக்கும். அந்த நிதர்சனத்தை எதிர்கொள்ளும்போது உங்கள் மனநிலை இப்படித்தான் இருக்கும் என வெர்ச்சுவலாக ஒரு கற்பனையை செய்யச் சொல்லி அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய அந்த சைக்காலஜி நிபுணரின் அணுகுமுறை  நாம் எந்த வயதினராக இருந்தாலும் நாம் அனைவருமே பின்பற்ற வேண்டிய அற்புதமான உளவியல்.

நடந்த எதையும் மற்ற முடியாது. ஆனால் நடந்துகொண்டிருப்பவை நம் கைகளில்தான். செல்லும் பாதையில் கர்வம் தலைத்தூக்கும்போது, நம் மண்டையில் குட்டி ‘ம்… பார்த்துப்போ’ என செல்லமாய் நமக்கு நாமே கற்பனையில் அறிவுரை சொல்லிக்கொள்வோமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

குறிப்பு: இந்த நிகழ்வில் வரும் உளவியல் நிபுணர் அடியேன்தான்!  இப்படியான கற்பனைகள் மூலம் நம்மை நாம் சரிசெய்துகொள்ள முடியும் என்பதை சிறு வயதிலேயே யாரும் கற்றுத்தராமலேயே கற்றிருக்கிறேன். ஒவ்வொரு விஷயத்தையும் அடிநாதம் வரை சென்று புரிந்துகொண்டு அலசும் ஆற்றலை இதன் மூலமே பெற முடிகிறது என நினைக்கிறேன். எல்லாம் இறை அருள். இயற்கையின் சக்தி. பெற்றோரின் ஆசி.  வேறென்ன சொல்ல?

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 72 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon