ஜம்முனு வாழ காம்கேரின் OTP-102: இரட்டை பலமும், பலவீனமும்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 102
ஏப்ரல் 12, 2021

இரட்டை பலமும், பலவீனமும்!

ஒருவரை நாம் எதிரியாக்கிக்கொள்வதும், தூக்கி எறிவதும் பெரிய செயலல்ல. ஆனால் அப்படி நாம் தூக்கி எறியும்முன்னர் அந்த நபரின் சகலத்தையும் அறிந்துகொண்டு, முடிந்தால் அவருடைய தவறை அவரே உணரச் செய்து, சாத்தியமிருந்தால் திருந்தச் செய்து, எதுவுமே முடியாதபட்சத்தில்  பிற்காலத்தில் அவரால் நமக்கு எந்த பிரச்சனையும் வராத அளவுக்கு விவேகத்துடன் தூக்கி எறிய வேண்டும். இல்லை என்றால் நாம் தூக்கி எறியும் ஒரு நபர் பலமடங்காகப் பெருகி நம்மை எதிர்க்க திட்டம் தீட்ட வாய்ப்புண்டு.

ஏனெனில் நல்ல விஷயங்களை செய்யும் நமக்கு வேண்டுமானால் எதிராளியின் பலத்தை அறிந்துகொள்ள நேரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தீய விஷயங்களுக்காகவே காத்திருக்கும் நபர்களுக்கு எதிராளியின் பலத்தை மட்டுமல்ல பலவீனத்தையும் நோட்டம் விடுவது ஒன்றுதான் வேலை.

எனவே ஒருவரை உதாசினப்படுத்தவும் தூக்கி எறியவும் முடிவெடுத்துவிட்டால் அவரால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு அவர் தன் பலமாக எதை நினைத்துக்கொண்டிருக்கிறாரோ அதை பலவீனமாக்கி அவரால் நிமிரவே முடியாது என்ற நிலையை உருவாக்க நாம் மனதளவில் தயாராக  வேண்டும்.

இதெல்லாம் சாத்தியமா? சாத்தியம்தான். கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அவ்வளவே.

பொதுவாகவே இந்த லாஜிக்கை என் நிர்வாகத்தில் நான் கடைபிடிப்பதுண்டு. நம் நேரத்தையும், உழைப்பையும், அறிவையும், கல்வியையும் பயன்படுத்தி நிறுவனத்தில் தயாராகும் ப்ராஜெக்ட்டுகளுக்கு பயிற்சி கொடுத்திருப்போம். பயிற்சியின் இறுதியில் அவர்களது துரோக முகம் நமக்குத் தெரிய வரும்.

அந்த நபரை அப்படியே வெளியில் விட்டால் நம் ப்ராஜெக்ட் குறித்த ரகசியங்கள் வெளியே செல்லும். மேலும் நாம் கொடுத்த பயிற்சியும் வீணடையும். பயிற்சி முடிந்து ப்ராஜெக்ட்டில் பணி செய்ய ஆரம்பித்த பிறகு ஒருசிலரின் கோர முகங்கள் வெளிப்படும். பாதியிலேயே அவரை தூக்கி எறிவது நமக்குத்தான் நஷ்டம்.

கூடுமானவரை தவறை நாசூக்காக எடுத்துச் சொல்லி, தவறுகளை உணரச் செய்து, மனதளவில் திருந்த வைத்து… இதெல்லாம் நடந்தால் அந்த நபரை எங்கள் நிறுவனத்தில் தக்க வைத்துக்கொள்வோம். இல்லை எனில் ப்ராஜெக்ட் முடியும்வரை அந்த நபரை அவருக்கே தெரியாமல் முழுமையாக கண்காணித்து அவருக்கு ஆதரவாக இருப்பதைப் போல நமக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு பொறியாளரை நட்பாக வைத்து அவரின் தலைமையில் அந்த நபரை பணி செய்ய வைத்து அவருடைய எதிர்மறை செயல்பாடுகளை வலுவிழக்கச் செய்வோம். சில மாதங்களில் அந்த ப்ராஜெக்ட் முடிந்ததும் மீண்டும் புது ப்ராஜெக்ட் வரும்போது அழைக்கிறோம் என சொல்லி ‘மேள தாளத்துடன்’ அனுப்பி வைப்போம்.

மன நிம்மதியுடன் நல்லவர்களாக வாழ்வது எத்தனை கஷ்டம் என்பதை காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகு நான் உணர்ந்துகொண்டேன். ஆனால் அந்த கஷ்டம்தான் நம்மை புடம்போட்ட தங்கமாக ஜொலிக்க வைக்கிறது.

‘யேய்… ஒழுங்க இரு… இல்லைன்னா என்ன நடக்கும்னு தெரியுமா?’ என மிரட்டுவதும், ‘நான் யாருன்னு நினைத்தாய்… என் பவர் என்னென்னு தெரியுமா?’, ‘என் கிட்ட ஒருத்தரும் வாலாட்ட முடியாது…’ என்றெல்லாம் நம் பெருமை பேசுவது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. இப்படி எந்தவிதமான புற பிம்பங்களும் இல்லாமல், சார்ந்து இயங்குபவர்களின் அகத்தை தெளிய வைத்து எனக்கான ஒரு சாம்ராஜ்ஜியத்தை வழிநடத்திச் செல்வது எனக்கு மிக இளம் வயதிலேயே சாத்தியமானதற்குக் காரணம் ‘விவேகம்’.

வீரமாக இருப்பவர்கள் அந்த நேரத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியும். எதிர்காலத்தில் அவர்களின் வீரதீரச் செயல்களால் எது வேண்டுமானாலும் நடக்கும்.

ஆனால், விவேகமானவர்களால் மட்டுமே எக்காலத்திலும் நிலைத்து நிற்க முடியும். பார்ப்பவர்களை பிரமிக்க வைக்க முடியும். ஒரு தலைமையாக ஜொலிக்க முடியும். பிறர் தானகவே முன்வந்து இந்தப் பண்புகளைக்கொண்டவரை பின் தொடர்வார்கள்.

இதற்கு உயர்கல்வி படித்திருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பணம், பட்டம், பதவி இருக்க வேண்டியதும் இல்லை.

விவேகம் என்பது என்னவென்று ஆணாதிக்கம் அதிகம் இருந்த அந்தக் காலத்திலும் தங்கள் விருப்பம்போல் வாழ்ந்துச் சென்றிருக்கும் நம் முந்தைய தலைமுறை பெண்களிடம் கற்றுக்கொள்ளலாம். ஆண்களில் மிரட்டல்களுக்கு பயப்படுவதைப் போல வெளியில் தெரிந்தாலும் அவர்கள் தங்களுக்கு விருப்பமானதையே செய்து வந்திருப்பார்கள். நன்கு கவனித்துப் பார்த்தால் புரியும். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை தன் கணவன் உட்பட குழந்தைகளையும் பின்பற்ற வைத்திருப்பார்கள். ஆனால் வெளியில் அவர் என்னவோ பயப்படுவது போலவும், அடங்கி வாழ்வது போலவும் தோன்றும்.

அதனால்தான் சொல்கிறேன், விவேகத்துடன் கூடிய வீரம் இரட்டை பலம். விவேகமில்லாத வீரம் நம் பலவீனம். புரிந்து நடந்துகொள்வோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 14 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon