ஜம்முனு வாழ காம்கேரின் OTP-101: ஒரு விருந்து கொடுக்கும் ஜாக்பாட்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 101
ஏப்ரல் 11, 2021

ஒரு விருந்து கொடுக்கும் ஜாக்பாட்!

ஒரு சிலர் தாங்கள் வேலை செய்யும் டேபிளில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான பொருட்கள் இறைந்து கிடந்தால்தான் வேலை செய்யும் மனநிலையே வருகிறது என்றும், அப்படிப் பரவலாகப் போட்டு வைக்கவில்லை என்றால் அந்த வேலை மனதில் இருந்து மறந்துவிடுமோ என்ற பயம் உண்டாவதாகவும் கூறுவதுண்டு.

வேலைகளும் அவை சம்மந்தப்பட்ட பொருட்களும் நம் கண் முன் இருந்தால்தான் நினைவில் இருக்கும் என்றால் மனித உறவுகளை நினைத்துப்பாருங்கள். அவை எந்த அளவுக்கு நெருக்கமாக நாம் தொடர்பில் இருக்க வேண்டிய அற்புதமான தொடர்புகள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஒருசிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ‘தினமும் போன் செய்து பேசிக்கொண்டும், நலன் விசாரித்துக்கொண்டும், பண்டிகை தின வாழ்த்துகள் சொல்லிக்கொண்டும் இருந்தால்தான் நினைவில் இருக்கும் என்ற அவசியம் இல்லை. நல்ல புரிதல் இருந்தால் மனதாலேயே குசலம் விசாரிக்க முடியும், மனதாலேயே அன்பு பாராட்ட முடியும்…’

ஆனால் என்னைப் பொருத்தவரை இது சாத்தியமில்லை. தினமும் போன் செய்து நலன் விசாரிக்க வேண்டாம். குறைந்தபட்சம் பண்டிகை தினங்களின்போதாவது போன் செய்து சில நிமிடங்கள் பேசுவது ஒன்றுதான் மனித சங்கிலியில் துரு பிடித்துவிடாமல் பாதுகாக்கும் ஒரே வழி. பண்டிகை தினங்களில் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வதை ஒருசிலர் வழக்கமாக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அந்த வழக்கமும் இப்போது மெல்ல மெல்ல குறைந்துவிட்டது. தவிர ஊர் திருவிழா காலங்களில் உறவினர்கள் கூடுவதுண்டு. அந்த வழக்கமும் பெருமளவில் தேய்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

நேரில் பார்க்க வேண்டும், போனில் பேச வேண்டும் என்ற சிந்தனையையெல்லாம் ‘வாட்ஸ் அப்’ என்ற ஒரு வசதி ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டது. பண்டிகை தினத்துக்கு ஒரு வாழ்த்து செய்தியையோ, வீடியோவையோ ‘கூட்டத்தோடு கோவிந்தாவாக’ வாழ்த்தாக அனுப்பி விட்டால் கடமை முடிந்தது என்கின்ற திருப்தி உண்டாகிவிடுகிறது பெரும்பாலானோருக்கு.

அப்படித்தான் வாழ்த்து அனுப்புகிறார்களே அவர்கள் தாங்கள் அனுப்பும் தகவலிலாவது தங்கள் தனித்தன்மையை கொண்டுவரலாம் அல்லவா?  வெப்சைட்டுகளில் இருந்து யாரோ யாருக்கோ அனுப்பிய வாழ்த்துச் செய்தியை அப்படியே ஃபார்வேர்ட் செய்ய வேண்டியது. ஒரு சிலருக்கு அதைத் தேடுவதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. தங்களுக்கு வருகின்ற வாழ்த்தை அப்படியே பிறருக்கு ஃபேர்வேர்ட் செய்து கடமையை முடித்துக்கொள்கிறார்கள்.

இரண்டு வரி வாழ்த்துச் செய்தியை சொந்தமான வார்த்தைகளால் கற்பனைகளால் நிரப்பத் தெரியவில்லை அல்லது நேரமில்லை என்றால் நாம் எல்லாம் எதற்காக படிக்கிறோம், ஓடி ஓடி வேலைக்குச் செல்கிறோம், சம்பாதிக்கிறோம்?

நான் யாருக்கும் வாட்ஸ் அப்பில் பண்டிகை தின வாழ்த்துகள் அனுப்புவதுமில்லை. எனக்கு வரும் வாழ்த்துக்களை திறப்பதும் இல்லை. ஆனால் போன் செய்து பேசி விடுவேன்.

சமயம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் சந்திக்க எங்கள் வீட்டிலேயே விருந்துக்கும் ஏற்பாடு செய்வோம். அப்பா அம்மாவின் பிறந்தநாள், திருமண நாள், பூஜை  அப்படி இப்படி என ஏதேனும் ஒரு காரணம் சொல்லி எல்லோரும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் சனி ஞாயிறு விருந்துக்கு ஏற்பாடு செய்வோம். கொரோனா காலத்தில் இதை மிகவும் மிஸ் செய்கிறோம் நாங்கள். வீட்டிலேயே நாங்களேதான் சமைப்போம். ஹோட்டல்களுக்கு செல்வதில்லை. ஹோட்டல் ஆர்டர்களையும் பயன்படுத்துவதில்லை.

திருமணம், வளைகாப்பு, சீமந்தம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் கேட்டரிங். மற்றபடி எல்லாவற்றுக்கும் எங்கள் கைவண்ணத்தில் நாங்கள்தான் சமையல்.

இதில் இரண்டு சந்தோஷங்கள் ஜாக்பாட் அடிப்பதைப் போல ஒரே நேரத்தில் கிடைக்கிறது. ஒன்று, விருந்தினர்களை வரச் செய்து அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவதால் நம் மனமெனும் பேட்டரி சார்ஜ் ஆகிவிடுகிறது. இரண்டாவது, நம் கைகளால் நாமே சமையல் செய்து உபசரிக்கும்போது அதுகொடுக்கும் கிரியேட்டிவிட்டி மனதுடன் சேர்த்து உடலையும் புத்துணர்வாக்கிவிடுகிறது.

இப்படியாக நாங்கள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தால் அதுகொடுக்கும் உற்சாகம் மூன்று நான்கு மாதங்களுக்கு தாக்குப் பிடிக்கும்.

வருடத்தில் தீபாவளி பொங்கல் அன்று கூட உறவினர்களுக்கு போன் செய்து பேச முடியாத அளவுக்கு நான் ஒன்றும் பிஸி கிடையாது. நாம் பிஸியாக இருப்பதும், பணம் சம்பாதிக்க ஓடுவதும் நம்மைச் சுற்றி நல்ல உறவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல விஷயங்களை விட்டுச் செல்வதற்காகவும் என்பது என் ஆழமான நம்பிக்கை. நமக்கு நம் முந்தைய சந்ததியினர் பொக்கிஷமாக விட்டுச் சென்ற நல்ல விஷயங்களை நாமும் முழுமையாகப் பயன்படுத்தாமல் அடுத்த சந்ததியினருக்கும் விட்டு வைக்காமல் அழித்துவிட நமக்கு யார் உரிமை கொடுத்தது?

சிந்திப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 9 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari