ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 103
ஏப்ரல் 13, 2021
கஷ்டப்படறீங்களா? உதவி வேண்டுமா? சொல்லி அனுப்புங்கள்!
‘ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்’ என்று சொல்வார்கள். நாம் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு நல்லது செய்தால் அந்த நற்செயலுக்கான பலன் வேறு ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு வந்து சேரும் என்பது இயற்கை.
‘கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே’ என்பார்கள். அதன் பொருள் இப்படியும் இருக்கலாம். உங்கள் கடமையை செய்யுங்கள். அதற்கான பலன் நேரடியாக நீங்கள் செய்த கடமைக்கே கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். வேறு வடிவத்திலும் அதற்கான பலன் கிடைக்கலாம்.
அதாவது ‘இந்தா பிடிச்சுக்கோ, நீ செய்த செயலுக்கான பலன்’ என நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் பலனை நேரடியாக செட்டில் செய்துகொண்டிருக்க செயலும், பலனும் பண்டமாற்றுப் பொருள் கிடையாது. அது ஒரு அழகிய பூமராங் விளைவு. வாழ்க்கையே ஒரு பூமராங்தான். உங்கள் வாழ்க்கைப் பாதையில் நேர்மையாக நேர்மைறை எண்ணங்களுடன் ஒழுக்கமாக பிறருக்கு எந்தவிதத்திலும் தொந்திரவு கொடுக்காமல் வாழ்ந்துகொண்டிருந்தால் அதற்கான பலன் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் உங்களை வந்து சேரும்.
உதாரணத்துக்கு நீங்கள் பிறருக்கு உதவும் சுபாவம் உள்ளவர்கள் என்றால், நீங்கள் யார் யாருக்கெல்லாம் உதவுகிறீர்களோ அவர்கள் எல்லோரும் உங்களுக்கு திரும்ப வந்து ஏதேனும் ஒரு உதவி செய்வார்கள் என்று நினைக்க முடியுமா?
தினமும் நீங்கள் பயணம் செய்யும் பாதையில் சாலையைக் கடக்க தடுமாறும் கண் தெரியாதவர்களுக்கும் வயதில் பெரியவர்களுக்கும் உதவுகிறீர்கள், தினமும் காகத்துக்கு சாதம் போடுகிறீர்கள், ஆடு மாடு நாய்களுக்கு வீட்டு வாசலில் தாகம் போக்க தண்ணீர் வைக்கிறீர்கள் என்றால் உங்கள் கணக்கில் புண்ணியம் சேர்ந்துகொண்டே இருக்கும். அதற்கான பலன் நேரடியாக யார் யாருக்கெல்லாம் நீங்கள் சாலையைக் கடக்க உதவினீர்களோ அவர்கள் மூலம் கிடைக்கும் என நினைப்பீர்களா? எந்தெந்த காகம் நீங்கள் போட்ட சாதத்தை சாப்பிட்டதோ அவை உங்கள் மீது திரும்ப அன்பை செலுத்தும் என்றுதான் எண்ணுவீர்களா? எந்தெந்த ஆடு மாடுகள் நீங்கள் வைத்த தண்ணீரினால் தாகசாந்தி அடைந்ததோ அவை உங்களுக்கு நன்றியுடன் இருக்கும் என எதிர்ப்பார்க்கத்தான் முடியுமா?
அதுபோல்தான் நீங்கள் செய்யும் நல்லவற்றுக்கு பலன் வேறு எங்கிருந்தாவது யார் மூலமாவது உங்களுக்குத் தேவையான நேரத்தில் கிடைக்கும்.
நீங்கள் செய்த நல்லவற்றுக்கு மட்டும்தான் பூமராங் விளைவு உண்டாகும் என்பதில்லை. நீங்கள் அறியாமல் செய்த கெட்ட விஷயங்களுக்கும் இதே பூமராங் பலன்தான்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே சாவு என்பார்கள். அதுபோல நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறீர்களோ அப்படிப்பட்ட பலன்களே கிடைக்கும்.
பொதுவாக வீடுகளில் பெரியவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை பாதிக்கும் என்பார்கள். அதுவும் உண்மையே. ஒரு அப்பாவோ அல்லது அம்மாவோ கெட்டவராக இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு ‘அவர் பிள்ளையா நீ’ என்ற முத்திரை குத்தப்படும். அந்தப் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் நன்றும் தீதும் அவர்களின் அப்பா அம்மாவினால் மட்டுமே. ‘செஞ்ச பாவத்துக்கு அவன் பிள்ளை அனுபவிக்கிறான்…’ என சபிக்கவும் செய்வார்கள்.
இதையெல்லாம் நம் நாட்டில் கர்மா என்ற ஒரு வார்த்தையில் அழகாக சொல்வதுண்டு. கர்மாவாகட்டும் பூமராங் விளைவாகட்டும் எல்லாமே இயற்கையினாலும் இறைசக்தியினாலும் மட்டுமே.
கர்மாவையும், பூமராங் விளைவையும் சட்டமாக்கினால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
சட்டமாக்கி இருக்கிறார்களே?
ஆச்சர்யமாக உள்ளதா? உண்மைதான். ஆனால் அவர்கள் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே சட்டம் இயற்றி உள்ளார்கள்.
எங்கு தெரியுமா? சுவிஸர்லாந்தில்.
சுவிஸர்லாந்து தேசத்தில் ‘டைம் பேங்க்’ (Time Bank) என்று ஒரு முதியோர் பென்ஷன் திட்டத்தை அந்த நாட்டு அரசாங்கம் Swiss Federal Ministry of Social Security என்ற பெயரில் நடத்துகிறது. இதை தமிழில் கால வங்கி, நேர வங்கி என்றெல்லாம் அழைக்கலாம். இந்த ‘நேர’ வங்கியில் நாம் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது நம்முடைய நேரத்தை டெபாசிட் செய்யலாம்.
ஆம் நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது Swiss Federal Ministry of Social Security -யில் கணக்கு ஆரம்பித்து நம்முடைய ஓய்வு நேரத்தை (Free Time) டெபாசிட் செய்து வந்தால், பிறகு நமக்கு தேவைப்படும் போது அந்த நேரத்தை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். கிட்டத்தட்ட வங்கியில் பணத்தை டெபாசிட் செய்து தேவையானபோது எடுத்துக்கொள்வதைப் போல்தான்.
உதாரணத்துக்கு நமக்குத் தெரிந்த ஒரு பெரியவர் வீட்டில் தனியாக வசிக்கிறார் என்றால் அவருக்கு நாம் தினமும் சென்று சாப்பாடு கொடுத்து சில மணி நேரங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தால் நாம் எத்தனை மணி நேரங்கள் அவருக்காக செலவு செய்தோமோ அந்த நேரங்கள் நேர வங்கியில் டெபாசிட் ஆகும். பிறகு பின்னாளில் நாம் உதவி தேவைப்படும் நேரத்தில் நேர வங்கிக்குத் தகவல் கொடுத்தால் நமக்கு உதவ அவர்கள் ஆட்களை அனுப்பி வைப்பார்கள்.
இந்தத் திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புபவர்கள் ஆரோக்கியமாகவும், சேவை மனப்பான்மை உடையவர்களாகவும் இருப்பது அவசியம். தினமும் உதவி தேவைப்படும் முதியவர்களை அக்கரையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படி அவர்கள் செலவிடும் நேரங்கள் அரசு பராமரிக்கும் அவர்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு வருட முடிவிலும் இந்த நேர வங்கியில் எத்தனை மணி நேரம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று கணக்கிட்டு சம்மந்தப்பட்டவருக்கு ‘நேர சேமிப்பு அட்டை’ (Time Bank Card) வழங்குவார்கள்.
நமக்கு தேவைப்படும் போது அந்த அட்டையை பயன் படுத்தி நம்முடைய நேரத்தை எடுத்து கொள்ளலாம். அப்படி நாம் நம் நேரத்தை எடுக்க நாம் ரிக்வெஸ்ட் கொடுக்கும் போது, அவர்கள் நமக்கு உதவி செய்ய ‘நேர சேமிப்பாளர்கள்’ யாரையாவது அனுப்பி வைப்பார்கள்.
இத்திட்டத்தினால், நாமும் எந்தவித தாழ்வு மனப்பான்மையின்றி அவரிடம் உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.
எத்தனை அருமையான திட்டம் இது.
இது உண்மையா பொய்யா கற்பனையா என்றெல்லாம் தெரியவில்லை. இணையத்தில் படித்த செய்திதான். ஆனாலும் பூமாரங் விளைவுக்கு ஏற்பவும், கர்மாவின் அடிப்படையிலும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து இதுதான் பூமராங் விளைவு, இவ்வளவுதான் கர்மா என சொல்லாமல் சொல்லிச் செல்கிறதே இந்த நேர வங்கியின் செயல்பாடு.
நம் நாட்டில் இதற்கெல்லாம் சட்டம் இயற்றவில்லை. ஆனால் இயற்கை இப்படித்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்களாக இருந்தால் அதற்கான பலன் ஏதேனும் ரூபத்தில் நமக்கு நல்லவற்றையும் நல்ல மனிதர்களையும் அடையாளம் காட்டுகிறது. கெட்டவர்களாக இருந்தாலும் இதேதான். ‘வைத்து செய்கிறது’ என கஷ்டத்தின் உச்சத்தை சொல்வார்களே அதுபோல வைத்து செய்துவிட்டுத்தான் கடந்து செல்கிறது. உணர்ந்திருப்போம் பல நேரங்களில்.
வாழ்க்கையே பூமராங்தானே? எனவே, எண்ணும் எண்ணத்திலும், சொல்லும் செயலிலும், செய்யும் செயலிலும் கவனம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP