பதிவு எண்: 854 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 123
மே 3, 2021
மே தின ரிசல்யூஷன்!
புத்தாண்டு ரிசல்யூஷன் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது என்ன மே தின ரிசல்யூஷன்?
ஒருசிலரை கவனித்துப் பாருங்கள். வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்களுக்கு சம்பளம் கொடுக்கும் தினம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கையில் வைத்துக்கொண்டே அவர்களிடம் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
‘நீ இப்போதெல்லாம் சரியான நேரத்துக்கு வருவதில்லை…’
‘சுத்தமாக பெருக்க மாட்டேன் என்கிறாய்…’
‘நிறைய லீவ் எடுக்கிறாய்…’
இப்படி ஏதேனும் ஒரு காரணத்தை தேடித் தேடி பேசிக்கொண்டிருப்பார்கள். கடைசியில் சம்பளப்பணத்தை ஏதோ இலவசமாகக் கொடுப்பதைப் போல கொடுப்பார்கள்.
இதே மனநிலையில்தான் பெரும்பாலான நிறுவனங்களில் சம்பளம் கொடுக்கும் தினங்களில் / வங்கியில் கிரெடிட் செய்யும் தினங்களில் சிறப்பு மீட்டிங்குகளை நடத்தி ‘மிக சிறப்பான கவனிப்புகளை’ செய்வார்கள். சிறப்பு மீட்டிங்கில் மிக சிறப்பான கவனிப்புகள் என்றால் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கோணத்தில் பணியாளர்களின் குறை நிறைகளை விரிவாக அலசுவார்கள்.
வீடாக இருந்தாலும் நிறுவனமாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை இப்படிச் செய்வது ஒரு ஆதிக்க மனோபாவம் என்றுதான் சொல்வேன். நமக்காக பணிபுரிவர்களுக்கு அவர்கள் செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்கும் தினம் எந்தக் குறையும் சொல்லாமல் மகிழ்ச்சியுடன் சம்பளம் கொடுத்தால் மட்டுமே அதை வாங்குபவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். கொடுக்கும் நமக்கும் பெருந்தன்மையாக இருக்கும்.
ஒரு நிறுவனம் என்பது வெறும் கற்களால் கட்டமைக்கப்பட்டதன்று. அதன் வெற்றி தோல்வி என்பது அந்த நிறுவனத்துக்காக பணிபுரிபவர்களினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. எனவே நிறுவனத்தைக் கட்டமைக்கும் பணியாளர்களை கெளரவமாக நடத்த நினைத்தால் சம்பளம் கொடுக்கும் தினம் அவர்களிடம் குறைகள் சொல்ல வேண்டாமே.
அப்படியே உங்கள் குறைகள், குற்றங்கள், எதிர்பார்ப்புகள் ஏதேனும் இருந்தால் அதையெல்லாம் சொல்ல வேறொரு நாளை தேர்ந்தெடுங்கள்.
இதுதான் வருடா வருடம் நான் எடுக்கும் உழைப்பாளர் தின ரிசல்யூஷன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP