ஜம்முனு வாழ காம்கேரின் OTP-131: நீங்களும் இன்ஸ்டண்ட் மருத்துவராகலாமே!


பதிவு எண்: 862 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 131
மே 11, 2021

நீங்களும் இன்ஸ்டண்ட் மருத்துவராகலாமே!

எங்கள் உறவினர்களுக்கு வாரா வாரம் போன் செய்து பேசுவோம். என்னதான் பொதுவான நலன் விசாரிப்புகளாக இருந்தாலும் கடைசியில் கொரோனா கால இறப்புகள் குறித்தே வந்து நிற்கும்.

அவர்கள் கொரோனா செய்திகள் குறித்து மிகவும் அச்சப்பட்டு, மனதளவில் சோர்ந்துதான் பேசுவார்கள்.

நான் அவர்களிடம் எப்படி பேசுவேன் தெரியுமா?

‘கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்லும் 99 சதவிகிதம் உடல் நலம் பெற்று வீடு வந்து சேர்கிறார்கள். மீதமிருக்கும் 1 சதவிகிதமே இறக்கிறார்கள். நமக்கு அவைதான் கண்களில்படுகின்றன. அவைதான் அதிகம் பேசப்படுகின்றன. எனவே கவலைப்படாதீர்கள். கவனமாக இருங்கள்’

இதுதான் நான் அவர்களிடம் பகிரும் விதம்.

ஆம். வயதானவர்கள் மனதளவில் சோர்ந்துவிடக் கூடாது என்பதால் நான் எதிர்மறை விஷயங்களை அவர்களிடம் பகிரவே மாட்டேன். எதிர்மறை விஷயங்களையும் நேர்மறையாக்கியே சொல்வேன். எப்படியும் அவர்கள் செய்திகள் மூலம் தெரிந்துகொள்வார்கள். இருக்கட்டுமே. என் வாயால் நான் ஏன் எதிர்மறையை அவர்கள் மனதுக்குள் புகுத்த வேண்டும். செய்திகள் டிஜிட்டல் வடிவில் சென்று சேரும். நாம் பேசுவது ஆத்மார்த்தமாக அவர்கள் மனதுக்குள் பதியும். ஒரு விஷயம் டிஜிட்டலாக சென்று சேர்வதற்கும், ஆத்மார்த்தமாக சென்று சேர்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? டிஜிட்டலாக சென்று சேரும் எதிர்மறை விஷயங்களை ஆத்மார்த்தமாக நேர்மறையாக்க முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

நேர்மறையாக்க முடியாவிட்டாலும் எதிர்மறையை இன்னும் அதிகமாக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் யாரிடமும் கொரோனா குறித்த என் பயத்தையும், கவலையையும் பகிரவே மாட்டேன்.

கொரோனா காலத்தில் மனநலனைக் காப்பதற்கு இதுவும் ஒருவகை மனநல மருத்துவமே. இதற்கு மருத்துவம் படித்திருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. மனிதாபிமானம் இருந்தால் போதும். நீங்களும் இன்ஸ்டண்ட் மருத்துவராகலாம்.

ஒரு சொல், ஒரு வார்த்தை, ஒரு செய்தியில் ஒருதுளி நேர்மறையை மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமேயானால் நீங்களும் ஆகச்சிறந்த மனநல ஆலோசகரே.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#ஹலோ_காம்கேர் #Hello_Compcare

(Visited 12 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon