ஜம்முனு வாழ காம்கேரின் OTP-191: சிறுகக் கட்டிப் பெருக வாழ்!


Photo Courtesy: wikipedia

பதிவு எண்: 922 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 191
ஜூலை 10, 2021

சிறுகக் கட்டிப் பெருக வாழ்!

நேற்று ‘நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா?’ என்ற தலைப்பிலான பதிவில் முந்தைய தலைமுறையினருக்கும் இந்தத் தலைமுறையினருக்குமான ஒப்பீட்டில் சில விஷயங்களை அலசி இருந்தேன்.

அதில் பெரும்பாலானோர் ‘தான் பட்ட கஷ்டத்தை தங்கள் பிள்ளைகள் படக் கூடாது என்ற எண்ணத்திலும், குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும்தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள்…’ என பின்னூட்டமிட்டிருந்தார்கள்.

சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, வாட்ஸ் அப் குழுமத்திலும், நேரடியாக பேசியவர்களின் பொதுவான கருத்தும் இப்படியேத்தான் இருந்தன.

அது அப்படி அல்ல, நான் சொல்ல வந்ததும் அதுவல்ல என்பதை புரிய வைக்கவே இன்றைய பதிவு. இப்போது 50+ வயதில் பேரன் பேத்திகள் எடுத்த பெற்றோர்கள் வேண்டுமானால் தாங்கள் பட்ட கஷ்டங்களை தங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்ற நோக்கில் வளர்த்திருக்கலாம். ஆனால் இப்போதுள்ள இளம் பெற்றோர்கள் அப்படி இல்லை. ஏனெனில் அவர்கள் பெற்றோர் பெரும்பாலும் சகல வசதிகளுடன் தான் அவர்களை வளர்த்திருப்பார்கள். விதிவிலக்குகள் உண்டு.

நன்றாக வளர்ப்பது என்பது என்றால் என்ன?

நல்ல குணநலன்களை, பண்புகளைக் கற்றுக்கொடுத்து மனிதாபிமானத்துடன் நேர்மையாக வாழ்வது எப்படி என புரிய வைப்பதுதான் நன்றாக வளர்ப்பது என்பதன் பொருள். அதையெல்லாம் இரண்டாம்பட்சமாக்கி பொருட்களை அதுவும் ஆடம்படரமான பொருட்களை வாங்கிக்கொடுப்பதுதான் நன்றாக வளர்ப்பது என்ற தவறான புரிதலில் வளர்ப்பதால் உண்டாகும் சோகங்கள்தான் ஆடி காரும், பப்ஜி விளையாட்டும், ஆபாசமாக பேசியாவது யு-டியூப் சேனல்களின் சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதிலும் வந்து முடிகிறது. அப்படி செய்பவர்களின் வயது அதிகபட்சமாக 30+ ஆக இருப்பதுதான் வேதனை.

இப்போது 25-30 வயதில் உள்ள இளைஞர்களை கவனித்துப் பாருங்கள். அவர்களின் பெற்றோர் அவர்களை சொகுசாகவே வளர்த்திருப்பார்கள். நான் நேற்றுக் குறிப்பிட்டிருந்த சைக்கிள் கனவு காலமெல்லாம் இப்போது 50+ வயதில் இருப்பவர்களின் இளமை காலத்தில் நடந்த விஷயங்கள். 25+ வயதில் இருப்பவர்களுக்கு சைக்கிள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. 18 வயது பூர்த்தியடைகிறதோ இல்லையோ பைக் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள் (பெரும்பாலும்).

நான் சொல்ல வந்தது இப்போதுள்ள பெற்றோர்களுக்கே ஆசைகள் பேராசைகளாக உள்ளன என்பதையே.

அதுவும் ஆடி காராக  இருந்தால் அதிலும் கோடியைத் தொடும் உயர்ந்த வகை ஆடி கார்; வீடு அதுவும் அப்பார்ட்மெண்ட் எல்லாம் இல்லை,  மூன்று நான்கு அறைகள் கொண்ட பங்களா டைப் வீடு; நாய் சாதாரண நாயல்ல, லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்கும் நாய்; கிரெடிட் கார்டுகள், ஒன்று இரண்டல்ல நேற்று முளைத்த வங்கி உட்பட எல்லா வங்கிகளில் இருந்தும். இவை தவிர ஐந்தாறு இலட்சம் பெறுமானமுள்ள சாதாரண வகை கார் ஒன்று, ஆணுக்கொன்றும், பெண்ணுக்கொன்றுமாய் பைக்குகள் இரண்டு என்று அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அதனால்தான் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி உண்டாகிறது. அந்த வெறி குடிபோதையைவிட மோசமானது. அதனால்தான் நல்லவை கெட்டவை எதுவுமே கண்களுக்குப்படுவதில்லை. புத்தி மழுங்கி விடுகிறது. மனசாட்சியை அடகு வைத்துவிட்டு தற்போதைய மகிழ்ச்சியே நிலை என நினைத்து நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவிடாமல் தற்காலிகமாக தங்களையே அடகு வைக்காத குறையாக சீரழிகிறார்கள்.

அதாவது இந்த வகை பெற்றோர்களின் வயது 25-ல் இருந்து 30-வயதுக்குள்தான் இருக்கிறது. அவர்களின் நோக்கம் தங்கள் குழந்தைகளை நன்றாக சொகுசாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. தாங்கள் வசதியாக வாழ வேண்டும், பிறர் பொறாமைப்படும் அளவுக்கு வாழ வேண்டும் என்ற நோக்கமே.

எல்லோருக்கும் புரிவதைப்போல சிறிய உதாரணம் ஒன்றை சொல்லட்டுமா?

தினமும் ஃபேஸ்புக் படிப்பவர்கள் ஒரு பதிவைப் படிக்கிறார்கள் என்றால் அந்தப் பதிவுக்கு எத்தனை லைக் வருகிறது என்று தெரிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு யு-டியூப் சேனலைப் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு எத்தனை சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தான் எப்படி எழுதினால் அதிக லைக்குகளை அள்ள முடியும், எப்படிப்பட்ட வீடியோவை வெளியிட்டால் அதிக சப்ஸ்க்ரைபர்கள் கிடைப்பார்கள் என்றெல்லாம் ஆராய்ந்து தங்கள் தரத்தை கொஞ்சம் கீழிறக்கிக்கொள்ளக் கூட தயங்குவதில்லை.

ஆனால் நல்ல தரமான ஃபேஸ்புக் பதிவுகளும், ஆகச்சிறந்த யு-டியூப் சேனல்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவர்களுக்கான வாசகர்களும் பார்வையாளர்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்று சோஷியல் ஸ்டேட்டஸ் என்பது வீடு, கார், பைக், ஹோம் தியேட்டர் இவை தாண்டி சொந்தமாக ஒரு யு-டியூப் சேனல் அதுவும் இத்தனை லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள் என்ற அடைமொழியுடன் சொல்லிக்கொள்வதும் சேர்ந்துள்ளது.

இப்படி கால மாற்றத்துக்கு ஏற்ப ஆசைகள் பெருகி பேராசைகளாவதுதான் பிரச்சனைகளின் அடிநாதம் என்பதே நேற்றைய பதிவில் நான் சொல்ல வந்ததன் நோக்கம்.

எல்லோரும் ஆடி கார் மோகத்தில் இருக்கின்ற காலத்தில் என்னை ஈர்த்தது எந்த வகை கார் தெரியுமா? உருவத்தில் சிறியதான டாட்டா நானோ. அதில் ஆட்டோ போல இன்ஜின் காரின் பின்னால் இருக்கும். பார்ப்பதற்கே பொம்மை போல அழகாக தோற்றமளிக்கும். அதுவும் மாம்பழ நிறத்திலான டாட்டா நானோ கார் மாம்பழத்தை இரண்டாக வெட்டினால் கிடைக்கும் ஒரு பகுதிபோல அத்தனை பேரழகாக இருக்கும்.

வீடு மற்றும் நிறுவன உபயோகத்துக்காக எப்போதுமே ஹோண்டா வகை கார் ஒன்றிருக்கும். தவிர பைக்கை விற்றுவிட்டு அதற்கு பதிலாக டாட்டா நானோ வாங்கலாம் என்று டெஸ்ட் ட்ரைவ் கூட செய்து பார்த்தோம். ஆனால் அந்த வகைக் காரில் தொடர்ச்சியாக உண்டாகும் மோட்டர் சப்தம் போன்ற சில சில செளகர்யக் குறைவுகளினால் வாங்கவில்லை.

ஆனால் அந்த வகை காரை நாம் பைக்குகளுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். மழை, வெயில் நாட்களுக்கு உகந்தது. சிறிய இடம் கிடைத்தாலும் ‘பார்க்’ செய்துவிட முடியும். நம்மூர் சந்து பொந்தெல்லாம் நுழைந்து ஓட்டலாம். மேடு பள்ளம் என எந்த வகை சாலையின் இடிபாடுகளையும் தாங்கும். சுருங்கச் சொன்னால் கடைகளுக்குச் செல்ல, அருகில் உள்ள கோயில்களுக்குச் செல்ல என பைக் ஓட்டுவதைப் போன்ற செளகர்யம் கிடைக்கும்.

மினிமலிசம் – எப்போதுமே எந்த விஷயங்களிலுமே எனக்குப் பிடித்த விஷயம். மினிமலிசம் என்பது வேறொன்றுமில்லை ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்பதே.

தோசையைக் கூட சிறிய சிறிய தோசைகளாக செய்து சாப்பிடுவதுதான் பிடிக்கும். ஹோட்டல்களுக்குச் சென்றால் கூட பெரிய தோசையை நான்கு துண்டாக்கி ஒவ்வொரு துண்டாக சாப்பிடுவதே என் பழக்கம். சிறியதாக இருக்கும்போது மலைப்பு தோன்றாது. அதனால்தான் பெரிய வேலைகளைக் கூட சிறு சிறு பகுதிகளாக்கிக்கொண்டு செய்து முடிப்பதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளேன். அது வீடாக இருந்தாலும் சரி, நிறுவனமாக இருந்தாலும் சரி.

சுயநலம், பேராசை, பொறாமை இவற்றை எந்த அளவுக்கு குறைக்கிறோமோ அந்த அளவுக்கு வாழ்க்கை வளம் பெறும். முயற்சிப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 797 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon