ஜம்முனு வாழ காம்கேரின் OTP-190: நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா? (Sanjigai108)

பதிவு எண்: 921 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 190
ஜூலை 9, 2021

நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா?

முன்குறிப்பு: சமர்த்துப் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கும், சமர்த்தாக வளரும் பிள்ளைகளும் விதிவிலக்குகள். அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்!

—-

‘டேய், எனக்கு எங்க அப்பா அம்மா இந்த சைக்கிளை பிறந்த நாளுக்கு வாங்கிக்கொடுத்திருக்காங்கடா…’

‘ஆ… சூப்பரா இருக்கே… எனக்கு ஒரே ஒரு ரவுண்ட் தாடா… ஓட்டிப் பார்த்துட்டுத் தரேன்…’

‘ஓகேடா… இந்தா…’

ஓட்டிப் பார்த்த நண்பன் சைக்கிளை கொடுத்துவிட்டு ‘உங்க வீட்டுல அப்பா அம்மா இரண்டு பேரும் வேலைக்குப் போறாங்க… அதனால் சைக்கிள் எல்லாம் பரிசா வாங்கிகொடுக்க முடிகிறது… ஆனால் எங்க வீட்டில் எங்க அப்பா மட்டும்தான் வேலைக்குப் போகிறார். அதனால் சைக்கிள் எல்லாம் கனவுதான் எனக்கு…’

இதுதான் புதிதாக நண்பனுக்கு பிறந்தநாள் பரிசாகக் கிடைத்திருக்கும் சைக்கிள் பற்றிய முந்தைய தலைமுறைக் குழந்தைகளின் உரையாடலாக இருந்திருக்கும்.

அத்துடன் தான் படித்து நல்ல வேலைக்குப் போய் தான் ஆசைப்பட்ட பொருளை வாங்க வேண்டும் என்கின்ற வைராக்கியமும் குழந்தைகளிடம் இருக்கும். அவர்கள் வளரும்போது அந்த பொருள் அவர்களுக்குத் தேவையே இருக்காது என்பதுகூட தெரியாத வெகுளியாக இருப்பார்கள்.

ஆனாலும் அந்த வைராக்கியம்தான் அவர்களை நன்றாகப் படிக்க வைக்கும், நல்ல வேலைக்குச் செல்ல உந்துசக்தியாக இருக்கும் என்பதுதான் உளவியல்.

ஆனால் இன்று 18 வயதேயான மகனின் பிறந்தநாளுக்கு அறுபதானாயிரம் மதிப்புள்ள பைக் வாங்கிக்கொடுத்தால்கூட ‘நான் கேட்டது எண்பதனாயிரம் மதிப்புள்ள அந்த பைக். அதுதான் இப்போது ட்ரெண்டிங்… இது சென்ற வருட மாடல்… ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் செய்வாங்க…’ என்று அழுகையும் ஆர்பாட்டமும்தான் பெற்றோர்களுக்கு பதிலாகக் கிடைக்கிறது.

அத்துடன் நண்பன் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கினால், தான் அதைப்போல ஒரு பைக் வாங்குவது பெருமையல்ல, அதைவிட விலை உயர்ந்த பைக் வாங்கி அவனுக்கு முன் கியரை உயர்த்தி ‘உர்ர்ர்ர்’ என ஓட்டிச் சென்று நண்பன் முகத்தில் பொறாமையைப் பார்க்க வேண்டும் என்பதே பெரும்பாலான பிள்ளைகளின் எண்ணமாக இருக்கிறது.

பெற்றோர்களுக்கு முடியுமா, முடியாதா? அவர்களின் சம்பாத்தியத்தில் இதெல்லாம் சாத்தியமா, சாத்தியம் இல்லையா? என்ற கருத்தெல்லாம் கிடையவே கிடையாது.

எனக்கு எது வேண்டும் என தீர்மானித்துவிட்டால் அது அப்படியே இம்மியும் மாடல் மாறாமல் கிடைத்தாக வேண்டும். இல்லையென்றால் ‘நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவே இல்லை…’ என்ற பட்டத்தை தாரளமாய் கொஞ்சமும் மனசாட்சியின்றி கொடுக்கிறார்கள் அல்லது ‘நீயெல்லாம் ஒரு நல்ல அப்பா அம்மாவா?’ என அதிகாரத்துடன் கேள்வி கேட்கிறார்கள்.

முன்பெல்லாம் தன் பெற்றோர் ஒரு பொருளை பரிசாக வாங்கிக்கொடுத்தால் அதைப் ‘பெருமையாக’ உணர்ந்தார்கள். இன்று பெற்றோர் வாங்கிக்கொடுக்கும் பொருள், அது எதுவாக இருந்தாலும் தன் நட்பு வட்டத்தினரிடம் ‘பொறாமைப்படும்’ அளவுக்கு விலை உயர்ந்ததாக, லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் உள்ளதாக, புத்தம் புது மாடலாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நினைக்கிறார்கள் என்று மென்மையாகக் கூட சொல்ல முடியவில்லை ‘வெறியாக’ இருக்கிறார்கள்.

தன்னளவில் பெருமைப்படும் உணர்வு, மற்றவர்களை பொறாமைப்பட வைக்க வேண்டும் என்ற உணர்வாக என்று மாறியதோ அன்றே தலைமுறை இடைவெளி அதிகரித்துவிட்டது என்றுதானே பொருள்.

இந்த இடைவெளியை ஏற்படுத்தியதில் பெற்றோருக்கும் பங்குண்டு. இருவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த சூழல் பெருகியதும் பெற்றோர்களுக்கு குறிப்பாக அம்மாக்களுக்கு தங்கள் குழந்தைகளை தாங்கள் அக்கறையுடன் பாசத்துடன் வளர்க்க முடியவில்லையோ, பிள்ளைகள் பள்ளியில் இருந்து வரும்போது சுடச்சுட டிபன் செய்து வைத்துக்கொண்டு காத்திருக்கும் ‘நல்ல’ அம்மாவாக நாம் இல்லையோ என்ற குற்ற உணர்வுக்குள் சிக்குகிறார்கள். அந்தக் குற்ற உணர்விடம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியாக ஆரம்பித்ததே பிள்ளைகள் கேட்கும் முன்பே அவர்களுக்குத் தேவையோ தேவையில்லையோ விலை உயர்ந்த பொருட்கள் வாங்கித் தரும் ஆபத்தான வழக்கம்.

‘நானும் வேலைக்குப் போவதால்தான் இப்படி உனக்கு விலை உயர்ந்த கார் பொம்மை வாங்கிக்கொடுக்க முடிகிறது…’ என ஐந்து வயது குழந்தையிடம் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைப்பது எங்கு சென்று முடிகிறது தெரியுமா?

‘ஐப்பது இலட்சத்துக்கும் அதிகமான ஆடிக்காரே வாங்கிக்கொடுத்தாலும், இது சாதாரண ஆடி-A6 கார், இது சொகுசுக் காரே இல்லையாம்…’ என்று குற்றம் சாட்டும் தலைமுறையினர் பெருகிவிட்டார்கள்.

பெற்றோர்களும் இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லவே.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ‘குடும்பத்தில் பணக் கஷ்டம் காரணமா என் புள்ளைய பள்ளிக்கு பஸ்ல அனுப்ப வேண்டிய சூழல்’ என ஒரு பெண் தேம்பி தேம்பி அழுது கொண்டே சொன்னார். பிள்ளைகளை பஸ்ஸில் அனுப்புவது என்ன அத்தனை வருத்தப்பட வேண்டிய விஷயமா?

‘எல்லா வசதிகளும் இருந்தும் பஸ்லதான் பள்ளிக்கு அனுப்பிச்சாங்க எங்களையெல்லாம்! ஒரு சைக்கிள் வாங்கறதுக்கே நாங்க பட்ட பாடு இருக்கே’ என நிதி ஆலோசகர் திரு. வ. நாகப்பன் அவர்கள் ஒரு உரையில் சொல்லி இருக்கிறார்.

நடிகர் அரவிந்த சாமியின் நேர்காணல் ஒன்று. நடிகர், புகழ் பெற்றவர், நல்ல பிசினஸ் பின்னணியில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் அவர் சொன்ன ஒரு கருத்து வாழ்க்கை மீது பலர் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை மாற்றுவதாக அமைந்திருந்தது. மிகப் பெரிய தொழிலதிபரின் ஒரே மகனாக பிறந்தவர். இருந்தாலும்  வாழ்க்கை புரிவதற்காக அவர் அப்பா பஸ் பாஸ் எடுத்துக்கொடுத்து பஸ்ஸில்தான் பள்ளிக்கு அனுப்பினாராம்.

இப்படித்தான் முந்தைய தலைமுறை பெற்றோரும் இருந்து வந்தனர்.

இப்போதெல்லாம் பெற்றோரும் மாறிவிட்டனர். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளும் மாறிவிட்டன.

சிந்திப்போம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 692 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon