ஜம்முனு வாழ காம்கேரின் OTP-200: நீங்கள் ஒரிஜினல் தங்கமா, முலாம் பூசப்பட்ட தங்கமா?

பதிவு எண்: 931 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 200
ஜூலை 19, 2021

நீங்கள் ஒரிஜினல் தங்கமா, முலாம் பூசப்பட்ட தங்கமா?

முதலாமானவர். மெத்தப் படித்தவர். நேர் சிந்தனையாளர். நேர்மைக்குப் புறம்பான வழிகளை கனவிலும் நினைத்துப் பார்க்காத உத்தமர். கனிவானவர். கருணைமிக்கவர். தன்னைப் போலவே தன்னைச் சுற்றி உள்ளவர்களும் உயர வேண்டும் என்று நினைத்து நல் வழிகளை எடுத்துச் சொல்லும் சீரிய பண்பாளர், தலைமைப் பண்புகள் அத்தனையையும் தன்னுள் வளர்த்துக்கொண்டவர்.

இதன் காரணமாய் இவர் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி உயர் பதவியை அடைந்து, தன் குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைத்து அவரவர்கள் தங்கள் திறமையால் நல்ல வேலையில் அமரச் செய்து, அவர்களுக்குத் திருமணமும் முடித்து தலை நிமிர்ந்தபோது அவருக்கெனெ சொந்தமாக ஒரு அப்பார்ட்மெண்ட்டில் இரண்டு படுக்கை அறையுடன் கூடிய ஒரு வீட்டை கட்டிக்கொள்ள முடிந்தது. அதற்குள் அவர் ஓய்வு பெறும் நாளும் வந்தது.

ஓய்வு பெறும் நாளன்று அவர் அலுவலகத்தில் தடபுடலாக அவருக்கு விழா ஏற்பாடு செய்திருந்தனர். அவரும் தன் பங்குக்கு தன்னுடன் பணி புரிந்தவர்களுக்கு ஒரு கைப்பையில் நிறுவனத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி கூறி ஒரு கவிதை எழுதி பரிசளித்தார். தலைவாழை இலை விருந்தும் கொடுத்து மகிழ்ந்தார்.

நண்பர்கள் அனைவரும் விழாவில் ‘நல்லவர்’, ‘பண்பாளர்’, ‘உழைப்பால் உயர்ந்தவர்’, ‘நேர்மையானவர்’ என்று அவரை புகழ்ந்து தள்ளிவிட்டனர். சிலர் கவிதைகள் எல்லாம் எழுதி லேமினேஷன் செய்து பரிசளித்தனர். நிர்வாகம் அவருக்கு தங்கத்தில் மோதிரமும், செயினும் அணிவித்து கெளரவித்தது.

அவரும் அவர் குடும்பத்தினரும் மிகுந்த மன நிம்மதியுடன் வீடு திரும்பினர்.

அன்றைய இரவு நிலவொளியில் அமர்ந்து அவர் தன் மனைவி மக்களுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார். வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை அன்றைய தினம் அவர் பூரணமாக பெற்றதைப் போன்ற மனநிறைவுடன் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தார். இனி வரும் நாட்களில் என்ன செய்யலாம் என்பதையெல்லாம் பிள்ளைகளுடன் பேசி முடிவு செய்தார்.

இப்படிப்பட்ட நல்ல அப்பா கிடைத்தமைக்கு பிள்ளைகளும் மனதார நன்றி சொன்னார்கள். செயற்கைத்தனமாக ‘நன்றி அப்பா’ என்று வார்தைகளால் சொல்லி அல்ல, அவரை மனதார சந்தோஷப்படுத்தி, அவரையும் அம்மாவையும் ஓவியத்தில் வரைய ஏற்பாடு செய்து, அவருக்குப் பிடித்த விதமாய் குடும்பத்துடன் வந்திருந்து அவருக்குப் பிடித்த உணவு வகைகளை தயாரித்து விருந்தளித்து, கூடி, பேசி, சந்தோஷித்து என எல்லாமே அவருடைய விருப்பத்துக்கு இணங்க ஏற்பாடு செய்து மகிழ்ந்தார்கள்.

அன்று நிலவு வெளிச்சம் எல்லா மாதங்களையும் விட மிகப் பிரகாசமாக இருப்பதைப் போல தோன்றியது அவர் குடும்பத்தினருக்கு. அன்றைய தினத்தை அவர் நல்லவராய் வாழ்ந்த அவருடைய வாழ்க்கைக்குக் கிடைத்த ஆகச் சிறந்த பரிசாக நினைத்துக் கொண்டாடினார்கள்.

இரண்டாமனவர்.

இவரும்…
மெத்தப் படித்தவர்தான். ஆனால் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் இம்மியும் சம்மந்தமே இல்லாமல் அத்தனை கெட்ட பழக்கங்களையும் கொண்டவர்.

இவரும்…
நேர் சிந்தனையாளர்தான். ஆனால் தன் தரமற்ற சிந்தனையையே நேர் சிந்தனை என ஊருக்கு உபதேசம் செய்பவர்.

இவரும்…
நேர்மையானவர்தான். ஆனால் தான் செய்கின்ற ஊழல்களுக்கு நேர்மை என பெயர் சூட்டி அதுவே நேர்மைக்கான இலக்கணம் என கொஞ்சமும் கூச்சமின்றி சொல்லிக்கொண்டு வாழ்பவர். லஞ்சம் வாங்காமல் சின்ன துரும்பையும் நகர்த்துவதில்லை என்ற கொள்கையை கொண்டிருந்தார்.

இவரும்…
கனிவானவர்தான். கருணைமிக்கவர்தான்.  ஆனால் தன் கருணைக்கும் கனிவுக்கு எப்போதுமே ஒரு விலை கிடைத்தாக வேண்டும் என எல்லாவற்றிலும் தன லாபம் பார்ப்பவர்.

இவரும்…
தன்னைப் போலவே தன்னைச் சுற்றி உள்ளவர்களும் உயர வேண்டும் என்று நினைத்து நல் வழிகளை எடுத்துச் சொல்லும் சீரிய பண்பாளர்தான். ஆனால் ஒரு சின்ன கரக்‌ஷன். அப்படி இருப்பதாக வெளியில் நடித்துப் பேசிப் பழகி நட்புக்கு துரோகம் செய்து, உடன் பணி ஆற்றுபவர்களை  நம்ப வைத்து  அவர்களை கீழே தள்ளி அவர்கள் முதுகில் ஏறி முன்னேறி உயர் பதவியை அடைந்தவர்.

இவரும்…
தலைமைப் பண்புகள் அத்தனையையும் தன்னுள் வளர்த்துக்கொண்டவர்தான். ஆனால் என்ன? அடக்குமுறை, அதிகாரத் திமிர், உழைப்பைச் சுரண்டுதல் என்பதையே தலைமைப் பண்புகள் என பட்டியலிடாதக் குறையாக வாழ்ந்து வருபவர்.

இதுபோன்ற உயரிய கொள்கைகளினால்(!),
இவர் தன் திறமையைவிட பிறரை கீழே தள்ளி மேலே உயர்ந்ததால் மிக உயரியப் பதவியில் இருந்தார். பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்திருந்தார். ஆனால் அவர்களில் ஒருவர் உள்நாட்டிலும் மற்றொருவர் வெளிநாட்டிலும் செட்டில் ஆகி திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. ஒன்றுக்கு மூன்றாய் வீடுகள். பரபரப்பான இடத்தில் ஒரு அப்பார்ட்மென்ட்டையே வாங்கி தன் மனைவியின் பெயரை சூட்டி இருந்தார். பெரும் பணக்காரர்கள் புழங்கும் சாலையில் குட்டி பங்களா ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார். தவிர தன் கிராமத்தில் ஒரு தனி வீடு கட்டி அவ்வப்பொழுது சென்று தங்கி ஓய்வெடுக்கப் பயன்படுத்திக்கொண்டார். மனைவியை திருப்த்திப்படுத்த திகட்டத் திகட்ட நகைகள். வங்கி டெபாசிட்டில் கணக்கில் வரும் பணத்தையும், கணக்கில் வராதவற்றை இன்வெஸ்மெண்ட்டில் மனைவி பெயரிலும் போட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் பணத்தாலும் தங்க நகைகளாலும், விலை உயர்ந்த கார்களினாலும் கட்டமைத்துக்கொண்டிருந்தார்.

இவருக்கும் ஓய்வு பெறும் நாள் வந்தது. இவருக்கும் விருந்துக்கும் விழாவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இவரைப் பற்றியும் நல்லவர், வல்லவர் என சம்பிரதாயத்துக்கு மைக்கில் பேசினார்கள். ஆனால் பார்வையாளர்களாக இருந்த அனைவருக்கும் தெரியும் அவருடைய நல்லவர் வல்லவர் லட்சணம். மனதுக்குள் நக்கல் அடித்துக்கொண்டே விழாவில் கலந்துகொண்டு கலைந்தார்கள்.

வீட்டிலும் தடபுடல் விருந்து. அவருடைய மனைவி தன் தோழிகளிடமும், உறவினர்களிடமும் என் கணவர் எத்தனை நல்லவர், வல்லவர், நேர்மையானவர் தெரியுமா? அதனால்தான் இப்படி வேலையில் நல்ல பதவியில் அமர முடிந்தது, அதனால்தான் வீடு வாசல் என வாங்கிப் போட முடிந்தது, குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைத்து முன்னேறச் செய்ய முடிந்தது என  ‘பித்தளைக்கு தங்க முலாம்’ பூசுவதைப் போல ஒழுங்கீனமான அவருக்கு நல்லவர் என்ற  ‘தங்க முலாம்’ பூசிக் கொண்டிருந்தார்.

‘இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவருக்கு கொஞ்சமாக குற்ற உணர்வு எட்டிப் பார்த்தது…’ என்று சொல்வேன் என நினைக்காதீர்கள். ‘ஆஹா, என் மனைவி எப்படியெல்லாம் என்னைக் கொண்டாடுகிறாள். நான் இப்படி சொத்து பணம் நகைகள் என சேர்த்து வைத்ததினால்தான் இந்த மரியாதை’ என தனக்குத்தானே ‘ஷொட்டு’ போட்டுக்கொண்டார். தன் நேர்மையின்மைக்கு கொஞ்சமும் வருந்தவே இல்லை. காரணம். தான் நேர்மையில்லாதவனாக வாழ்ந்திருப்பதையே மறக்கும் அளவுக்கு அவருடைய எண்ணம் சொல் செயல் எல்லாமே மறத்துப் போயிருந்தது. இப்படித்தான் பலரும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் வேதனை.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும்.

உண்மையிலேயே நல்லவராக இருப்பவருக்கு நல்லவர் என்ற பட்டம் கிடைக்கும்போது கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கும், கெட்டவராக இருப்பவருக்கு நல்லவர் என்ற பட்டம் கிடைப்பதற்குமான வித்தியாசத்தை பாருங்கள்.

கெட்டவராக வாழ்ந்தவர் மிக தைரியமாக  ‘நான் கெட்டவன், நேர்மை இல்லாதவன், லஞ்சம் வாங்குபவன், பண்பில்லாதவன்’ என தான் வாழ்க்கையில் உயர்ந்ததுக்கு உண்மையான காரணங்களை அடுக்க முடிவதில்லைதானே? கெட்டவர்களும் ‘நான் நல்லவன், வல்லவன், நேர்மையானவன், பண்பாளன்’ என்ற அடைமொழிகள் மூலம்தானே தன்னை இந்த சமுதாயத்துக்கு நிரூபிக்க வேண்டியுள்ளது.

தீய சக்திகளும், மூலாம் பூசி மற்றவர்களை நம்ப வைக்க நல்ல சக்திகளின் அடையாளத்தைத்தானே நாட வேண்டியுள்ளது.

இப்படி முலாம் பூசப்பட்ட நல்லவன் பட்டமே இத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கும்போது முலாம் பூசாமல் நல்லவனாகவே வாழ்பவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி கிடைக்கும் என யோசித்துப் பாருங்கள்.

பணமும், நகையும், சொத்தும், காரும், பங்களாவும் மட்டுமே சந்தோஷம் கிடையாது. தன் தேவைக்கு ஏற்ப தேவையான அடிப்படை வசதிகளுடன் வாழும் வாழ்க்கையில்தான் பூரண மன நிம்மதி கிடைக்கும். அனுபவித்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 1,101 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon