ஜம்முனு வாழ காம்கேரின் OTP-201: நீங்கள் ராசியானவர் என்று பெயர் எடுக்க வேண்டுமா?

பதிவு எண்: 932 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 201
ஜூலை 20, 2021

நீங்கள் ராசியானவர் என பெயரெடுக்க வேண்டுமா?

அது ஒரு சிறிய பாத்திரக் கடை. சிறிய ஸ்பூனில் இருந்து பெரிய பாத்திரங்கள் வரை கிடைக்கும். பிளாஸ்டிக் வாளிகள், பித்தளை சாமான்கள், பூஜை சாமான்கள் என சகலமும் விற்பனையில் இருக்கும். தவிர பரிசளிக்கத் தேவையான பொருட்களும் உண்டு என்பதால் விற்பனை எந்த நேரமும் ஜரூர்தான். வீட்டுக்கு ஏதேனும் தேவை என நினைத்து அந்த கடைக்குள் சென்றால் ஏமாறாமல் வாங்கிக்கொண்டுத் திரும்பலாம்.

அந்தப் பகுதியில் அது ராசியான கடை என்று பெயர் எடுத்திருந்தது. கேட்கவா வேண்டும் நம் மக்களுக்கு? வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பெரிய நகரத்துக்குச் சென்று பொருட்கள் வாங்கினாலும் ஒரு நெய் ஸ்பூனையாவது அந்தக் கடையில் வாங்கி சுப நிகழ்வைத் தொடங்கி வைத்துக்கொள்வார்கள் வீட்டுப் பெண்கள். அந்த அளவுக்கு செண்டிமெண்டான கடை.

அந்தக் கடை சிறியதாக இருக்கும் என்பதால் கடையைவிட்டு வெளியே அவர்கள் எல்லைக்குள் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்டு வாளி, துடைப்பம், ஒட்டடைக் குச்சிகள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருப்பார்கள். ஒரு இளைஞன் அந்த வியாபாரத்தை கவனிக்க நியமிக்கப்பட்டிருப்பான்.   அதுபோலவே அந்தக் கடையின் பின் வாசலில் குக்கர், மிக்ஸி போன்றவற்றை ரிப்பேர் செய்ய இரண்டு நபர்கள் அமர்ந்து பணி புரியும் அளவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி இருப்பார்கள். பின் வாசலுக்கும், முன் வாசலுக்கும் இடையேதான் மெயின் வியாபாரம். நான்கு ஐந்து பேர் நின்றாலே இடம் நிரம்பி வழியும். வியாபாரம் கொழிப்பதைப் போல ஒரு சுறுசுறுப்பு தென்படும். காலையிலும், மாலையிலும் அந்தக் கடையைக் கடந்து செல்லும்போதெல்லாம் ஊதுவத்தி வாசனை அத்தனை ரம்யமாக இருக்கும்.

கடையின் முன் வாசலில் விற்பனைக்கு நின்றிருக்கும் இளைஞனாகட்டும், பின் வாசலில் சர்வீஸில் இருக்கும் இரண்டு நடுத்தர வயது பணியாளர்களாகட்டும் எப்போதுமே கருமமே கண்ணாயினராக இருப்பார்கள். மெயின் பிசினஸுக்கு என இரண்டே இரண்டு பெண்கள் மட்டும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பார்கள்.

பொதுவாக எல்லோரும் அந்தக் கடையில் சாமான்கள் வாங்கினால் ரொம்ப ராசியாக இருக்கும் என்று நினைப்பார்கள், எனக்கோ அந்தக் கடையைப் பார்த்தாலே அத்தனை உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். ஏதோ ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன்.

காரணம் அந்தக் கடையின் சுறுசுறுப்பு. கடையின் சுறுசுறுப்புக்கு முழுகாரணமும் கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கும் 60 வயது பெரியவர்தான். அவர்தான் கடையின் உரிமையாளர், முதலாளி, உழைப்பாளி எல்லாமே. அவர் பெயர் கங்காதரன். அவர் பெயர்தான் கடையின் பெயரும். அவருக்குப் பின்னால் பெரிய சைஸ் லேமினேஷனில் ஒரு பெரியவர் ‘கோட்டீஸ்வரன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டு சிரித்துக்கொண்டிருப்பார். அது அவருடைய அப்பாவாம். ஒருமுறை நானே விசாரித்திருக்கிறேன். அவர் தன் மகன் பெயரில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். தினமும் புதிதாக பூ வாங்கி வைத்திருப்பார். வெள்ளிக் கிழமைகளில் பூமாலை போட்டிருப்பார்.

அந்தக் கடையை காலை எட்டு மணிக்குத் திறப்பது முதல் இரவு 9 மணிக்கு மூடுவது வரை பெரியவர் கங்காதரன் கடையை விட்டு நகர மாட்டார். பெரிய கண்காணிப்பு, உருட்டல், மிரட்டல் எல்லாம் கிடையாது. காலையில் கடையைத் திறந்து அப்பாவை வணங்கிவிட்டு விளக்கு ஏற்றி ஊதுவத்தி ஏற்றி வைத்துவிட்டு வியாபாரத்தை ஆரம்பிப்பார். மதியம் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு மனைவி வந்துவிடுவார். கடையின் பின் வாசலில் ஒரு சேரில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வரும் வரை அவர் மனைவி கல்லாவில் அமர்ந்து வியாபாரத்தை கவனிப்பார். அவர் சாப்பிட்டு வந்ததும் அவர் வீட்டுக்குக் கிளம்பி விடுவார். அவருக்கு ஒரே மகன். கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார்.

கடை சிறியதாக இருந்தாலும் எப்போதுமே காற்றோட்டமாக இருக்கும். வெயில் காலத்தில் கொஞ்சம் கசகசப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால் அங்கு பணி புரியும் அத்தனை பேருமே வெயிலுக்கோ, வியர்வைக்கோ எந்த எரிச்சலும் இல்லாமல் சிரித்த முகத்துடன் பணியில் இருப்பார்கள்.

இப்படி அழகாக சென்றுகொண்டிருந்த அந்தக் கடைக்கு சோதனை ஆரம்பமானது. கங்காதரனுக்கு அவ்வப்பொழுது உடல்நிலை சரியில்லாமல் போனது. தொடர் இருமல், சோர்வு, தளர்வு என தொந்திரவு கொடுக்க ஆரம்பிக்க வீட்டில் வரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழு உடல் பரிசோதனை செய்திருக்கிறார்கள். அவருக்கு தொண்டையில் புற்றுநோய் என தெரிய வருகிறது. ஆனாலும் சிகிச்சை எடுத்துக்கொண்டே கடைக்கும் வந்து சென்று கொண்டிருந்தார். அவர் மனைவியும் முழு நேரம் கடையை கவனிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டார்.

இப்படியாக 2 வருடங்கள் எடுத்துக்கொண்ட சிகிச்சைப் பலனின்றி ஒருநாள் அவர் இறந்துவிட அவர் மனைவி நிலைகுலைந்து போகிறார். இதற்குள் அவர்கள் மகன் படிப்பை முடித்துவிட கடைப் பொறுப்பை எடுத்துக்கொள்கிறார். கோட்டீஸ்வரன் என்ற புகைப்படத்துக்கு அருகே  கங்காதரன் என்ற பெயர் பொறிக்கப்பட்டப் புகைப்படமும் சேர்ந்துகொண்டது.

ஆனால் அவர் அப்பாவின் ஈடுபாடும் ஆர்வமும் உழைப்பும் அவரிடம் இல்லை. எப்போதுமே காய்ந்த மாலையும், பூவும் அந்தப் புகைப்படங்களில் தொங்கிக்கொண்டிருக்கும்.

முன் வாசலையும் பின் வாசலையும் அடைத்துவிட்டு தான் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஏசி போட்டுக்கொண்டு சொகுசாக உட்கார்ந்துகொண்டார். பின் வாசலிலும் முன் வாசலிலும் பணியில் இருப்பவர்கள் அங்கு உட்காராமல் அவ்வப்பொழுது ஏசியின் குளுமைக்காக கடை உள்ளேயே சுற்ற ஆரம்பிக்கிறார்கள். முன்வாசல் வியாபாரமும், பின்வாசல் சர்வீஸும் ஒழுங்காக நடைபெறாமல் மந்தமாக ஆரம்பித்து.

கடைக்கு உள்ளே இப்போதைய கடை முதலாளி கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கும் நேரம் வரை ஏசி ஓடிக்கொண்டே இருக்கும். அவர் கடைக்கு வருவதே 11 மணிக்கு. கடையை ஒரு பணியாளர் 9 மணிக்கு வந்து திறந்து வைப்பார். விளக்கு ஏற்றுதலோ, பூ வைப்பதோ, ஊதுவத்தி ஏற்றலோ எதுவுமே கிடையாது. ‘ரூம் ஸ்ப்ரே’ அடித்து வைப்பார்.

ஏசி போட்டால் தானே கதவை மூட வேண்டும். ஏசி ஆன் செய்யாவிட்டாலும் கதவை அடைத்தே வைக்க ஆரம்பித்தார்கள். கடை முதலாளி 11 மணிக்கு வந்து ஏசியை ஆன் செய்து ஒப்புக்கு வியாபாரத்தை கவனித்துவிட்டு 1 மணிக்கு வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு உறங்கி ஓய்வெடுத்து 4 மணிக்கு திரும்ப கடைக்கு வந்து வியாபாரத்தை கவனித்து 8 மணிக்கெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார்.

கடையைத் திறப்பதும், மூடுவதும், கல்லாப்பெட்டியில் கணக்குப் பார்த்து பணத்தை முதலாளியிடம் எடுத்துச் சென்று வீட்டில் கொடுப்பது என அத்தனையும் அங்கு பணி செய்யும் பணியாளர்கள்தான் பார்த்துக்கொண்டார்கள்.

இப்படியாக சர்வ அலட்சியமாக வியாபாரம் சென்றுகொண்டிருந்ததால், கவனிப்பும் அர்ப்பணிப்பும் குறைந்ததால் அந்தக் கடையில் லட்சணமே குறைந்ததைப் போல இருந்தது. முன்வாசலில் விற்பனைக்கு  வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் விற்பனையே ஆகாமல் பழசாகி ஒட்டடையும் தூசியும் படிய ஆரம்பித்திருந்தது. பின்வாசல் சர்வீஸ் பகுதியில் மட்டும் என்ன வாழ்ந்தது? மக்கள் வந்து சென்று கொண்டிருந்தால்தானே வியாபாரமும், விற்பனையும். கவனிப்பார் அற்று ஏனோ தானோவென சர்வீஸ் செய்துகொடுக்க ஆரம்பித்ததால் சர்வீஸ் செக்‌ஷனையும் மூடிவிட்டார்கள்.

மொத்தத்தில் வியாபாரம் மந்தமானது. மக்கள் என்ன பேசிக்கொண்டார்கள் தெரியுமா?

‘கங்காதரன் ஐயா இருந்தவரை நல்ல ராசியாக இருந்த கடை இப்போ ராசியில்லா கடையா மாறிப்போச்சு. கை ராசியான மனுஷன்… சீக்கிரம் போய் சேர்ந்துட்டார்…’

ஆம். கங்காதரன் ராசியானவர்தான். அந்த ராசி எப்படி வந்தது.

காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தை கவனிப்பது, தானே நேரடியாக கல்லாப் பெட்டியில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்ப்பது, கடை முழுவதையும் சிசிடிவி கேமிரா இல்லாமலேயே தன் நேரடி கண்காணிப்பில் வைத்திருப்பது. பணியாளர்களுடன் இணைந்து தானும் உழைத்தது, வாடிக்கையாளர்களை கனிவுடன் நடத்தியது என கங்காதரனுக்கு ‘ராசியானவர்’ என்ற பட்டம் கிடைத்ததுக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மொத்தத்தில் கங்காதரன் தான் செய்துகொண்டிருக்கும் வேலையில் காட்டிய முழுமையான ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. இதுதான் அந்தக் கடை  ‘ராசியான கடை’ என்று பெயரெடுக்கக் காரணமானது.

சுறுசுறுப்பாக புத்துணர்வுடன் வியாபாரம் செய்யும்போது அவரைச் சுற்றி உண்டாகிய பாசிட்டிவ் வைப்ரேஷனே அந்தக் கடைக்கு விற்பனையைக் கூட்டியது என்று சொல்ல வேண்டும். அதுவே உண்மையும்கூட.

அவரது மகனோ, ஏசி, கண்ணாடி அறை, வாசனைக்கு ரூம் ஸ்ப்ரே என புற வசதிகளை அதிகரித்துக்கொண்டார். ஆனால் வியாபாரத்துக்கு அத்தியாவசியமான அர்ப்பணிப்பையும், உழைப்பையும் இரண்டாம்பட்சமாக்கினார்.

அதன் விளைவு ‘ராசியான கடை’ என்ற பெயர் பறிபோனது. ஒரு சாதரணக்கடையாக குறைந்தபட்ச விற்பனை கூட இல்லாமல் ஒப்புக்கு கடையை திறக்கிறார்கள். எப்போது முழுமையாக மூடுவார்கள் என்று தெரியாது.

ஒரு தொழிலை முதன்முதலாக அஸ்திவாரம் போட்டு ஆரம்பித்தவருக்கு அதுவே உயிர். அதை எடுத்து நடத்தும் அடுத்த தலைமுறையினருக்கு அதுவே வாழ்க்கை. அதற்கும் அடுத்த தலைமுறையினருக்கு அது வெறும் பொழுதுபோக்கு. அதற்கும் அடுத்தத் தலைமுறையினருக்கோ அது பெருத்த தொந்திரவு.

உயிராக நினைத்து செய்யும் எந்த ஒரு வேலையும் தெய்வீக சக்தி பெறும். அது வியாபாரமாக இருந்தாலும் சரி அல்லது அலுவலகப் பணியாக இருந்தாலும் சரி.

நீங்கள் செய்யும் வேலை இறை சக்தி பெற ஆத்மார்த்தமாக அனுபவித்து செய்யுங்கள். உங்கள் வேலை மட்டுமல்ல நீங்களும் விரும்பப்படுவீர்கள்.

அப்புறம் என்ன ‘நீங்கள் ராசியானவர்’ என கொண்டாடப்படுவீர்கள். முயற்சித்துப் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 761 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari