ஜம்முனு வாழ காம்கேரின் OTP-199: மனசாட்சியுடன் ஓர் உரையாடல்!

பதிவு எண்: 930 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 199
ஜூலை 18, 2021

மனசாட்சியுடன் ஓர் உரையாடல்!

பொதுவாக சிறுவர் சிறுமியர்களுக்கான வாழ்வியல் கருத்தரங்குகள் நடத்தும்போது அப்படி இருக்க வேண்டும், இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பொதுவான அறிவுரைகளாக சொல்வதை விட கதைகள் மூலம் சிலவற்றை விளக்குவோம். அவை கற்பனைக் கதைகளாக இருந்தாலும் சரி, நிஜமான நிகழ்வுகளாக இருந்தாலும் சரி அவற்றை எடுத்துப் பேசும்போது, அவை அறிவுரைகளைவிட சிறந்த பலன் அளிக்கும்.

சிறுவர்களை விடுங்கள், நாமே ஒரு சினிமா பார்க்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அது முழுக்க முழுக்க நடிப்புதான், கதைதான் என தெரிந்தாலும் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறோம். ஹீரோ ஜெயித்து வில்லன் தோற்கும்போது ஆனந்தப்படுவதும், ஹீரோயின் துன்பப்படும்போது நாமும் வருந்துவதும், வில்லன் அராஜகம் செய்யும்போது துடிப்பதும் என நாமும் அந்த கதையின் ஊடே வாழ ஆரம்பிக்கிறோம். திரைப்படங்களைப் பார்க்கும்போது உருக்கமான காட்சிகள் வரும்போது கண்ணீர் விடுபவர்களும் இருக்கிறார்கள். மறுக்க முடியுமா?

ஆனால் அதே கதை நிஜத்தில் நமக்கே நடக்கும்போதுகூட அதற்கு நாம் அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. யாருக்கோ எங்கேயோ நடக்கும்போது அதன் ஊடாக சொல்லப்படும் கருத்துக்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிறது என்பதுதான் நான் சொல்ல வரும் கருத்து.

இதையே கொஞ்சம் வலுவாக்கி சிறுவர்களுக்கு உளவியல் பயிற்சி அளிக்கிறோம். கற்பனையில் வெர்ச்சுவலாக ஒரு காட்சியை கற்பனை செய்துகொள்ளச் சொல்வது. அந்த காட்சிக்கு வசனம் எழுதி அவர்களுக்கு முன்பே கதையாக்கி சொல்லி விடுவோம்.

அதாவது தீய பழக்கங்கள் இருந்தால் அவற்றால் நம் மனமும் உடலும் சீர்கெடுவதுடன், சமுதாயத்தில் நல்ல மனிதன் என்ற உயரிய அங்கீகாரமும் பறிபோய்விடும் என்பதை ஒரு காட்சியிலும், நல்ல பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து வந்தால் கிடைக்கின்ற நற்பலன்களை எல்லாம் தொகுத்து மறு காட்சியிலும் வசனம் எழுதி திரைக்கதைபோல எடுத்துச் சொல்லி அப்படியே வெர்ச்சுவலாக கற்பனை செய்யச் சொல்வோம்.

அதற்கு குறிப்பிட்ட நிமிடங்கள் என கால அளவை ஒதுக்குவோம். அவர்கள் கண் மூடி கற்பனையில் நாங்கள் கொடுத்த திரைக்கதைக்கு வடிவம் கொடுத்து தங்களைத் தாங்களே உணர வேண்டும். இதுதான் கான்செப்ட்.

இந்த பயிற்சி முடிந்ததும் அவரவர்கள் அந்த வெர்ச்சுவல் நிகழ்ச்சியில் தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை விவரிக்க வேண்டும். பாதி பேர் கற்பனைக் காட்சியில் உணர்ந்த உணர்வுகளை விவரிக்க முயலும்போதே நெகிழ்ந்து விடுவார்கள். ஒரு சில சிறுவர்கள் அழக்கூட செய்திருக்கிறார்கள். பேசா மடந்தையாக இருக்கும் ஒரு சில சிறுவர்கள் மிக தைரியமாக தன்னம்பிக்கையாக தங்கள் உணர்வுகளை விவரிப்பார்கள்.

இது ஒருவிதமான உளவியல் பயிற்சி. இளைஞர்களைவிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் பொதுவாக பள்ளி மாணவர்கள் கல்லூரி செல்லும் இளைஞர்களைவிட கொஞ்சம் கூடுதலாக பிறர் சொல்வதை பின்பற்றும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். விதிவிலக்குகள் எங்கும் எதிலும் உண்டு. அவற்றை விட்டுத்தள்ளுங்கள்.

அப்போது அவர்களுக்குள் செல்லும் கருத்துக்களும் பயிற்சிகளும் வாழ்நாள் பலன் தரும். எனவே 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை இந்தப் பயிற்சியின் மூலம் மிகச் சிறப்பாக பட்டைத் தீட்ட முடியும்.

இதை வளர்ந்து அனுபவப்பட்ட பெரியோர்களாகிய நாமும் கூட சுய பரிசோதனை செய்துகொள்ளலாம்.

எப்போதெல்லாம் நம் மகிழ்ச்சி ஒருபடி மேலே சென்று கர்வம் என்ற கோட்டைத் தொட ஆரம்பிக்கிறதோ, எப்போதெல்லாம் அதீத சந்தோஷத்தினாலும் தொடர் வெற்றிகளினாலும் ஒருவித மயக்கம் உண்டாகிறதோ அப்போதெல்லாம் நம் உழைப்புக்குக் கூலியாக அந்த மகிழ்ச்சியும் வெற்றியும் நமக்குக் கிடைக்கவில்லை என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனையாக நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால் நமக்குக் கிடைத்த வெற்றியும், அதனால் உண்டான மகிழ்ச்சியின் உச்சமும் நம் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதிதானே தவிர, நாம் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்த அதிசய சக்தி வாய்ந்த மனிதர்கள் அல்ல என்ற உண்மை புரியும்.

அந்தகாலத்து சினிமாக்களில் பெரும்பாலும் மனசாட்சி பேசுவதாக ஒரு காட்சி இருக்கும். அதாவது, நடிகர் நடிகைகளின் மனசாட்சி பேசுவதாக அமையும் காட்சிகளில் அவர்களே இரட்டை வேடத்தில் தோன்றுவார்கள். அந்த இரண்டில் ஒன்று அவருடைய மனசாட்சியாக இருக்கும். அந்த மனசாட்சி அவர்களை திட்டும். அடிக்கும். கோபிக்கும். ஆற்றுப்படுத்தும். ஆறுதல் சொல்லும். அரவணைக்கும். வழிநடத்தும்.

இதைத்தான் நான் உளவியல் ரீதியாக ‘வெர்ச்சுவல் இமேஜினேஷன்’ என்று சொல்கிறேன்.

யாரோ ஒருவர் வந்து நமக்கு ஆறுதல் சொல்வார்கள், நம்மை வழி நடத்துவார்கள், நமக்கு வழி காட்டுவார்கள், நம்மை செம்மைப்படுத்துவார்கள் என்றிருக்காமல் நம்மை நாமே சீர்தூக்கிப் பார்த்து நம் உணர்வுகளை சமன் செய்துகொள்ள உதவும் அற்புதமான ஒரு யுக்தியே ‘வெர்ச்சுவல் இமேஜினேஷன்’ எனப்படும் மெய்நிகர் கற்பனை செய்து பார்க்கும் உளவியல். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon