ஜம்முனு வாழ காம்கேரின் OTP-202: பொய் சொல்வது பாவமில்லையா?

பதிவு எண்: 933 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 202
ஜூலை 21, 2021

பொய் சொல்வது பாவமில்லையா?

உண்மையை சொல்லாமல் இருப்பது என்பது வேறு. பொய் சொல்வது என்பது வேறு.

வீட்டில் சாதம் குறைவாக இருக்கும்போது ஒரு தாய் தன் குழந்தைகளிடம் ‘இன்னிக்கு எனக்கு வயிறு சரியில்லை… கொஞ்சமாகத்தான் சாப்பிடுவேன்…’ என சொல்லிவிட்டு குழந்தைகள் வயிற்றை நிரப்புவது பொய் சொல்வதில் வராது.

பிறவியிலேயே ஒரு கால் நடக்க முடியாத தன் மகனை உப்பு மூட்டை ஏற்றி விளையாட்டு காண்பிக்கும் போது கனம் தாங்காமல் மூச்சு வாங்கும் தருணத்தில் ‘எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா உன்னை இப்படி சுமந்துகொண்டு விளையாடுவது’ என சொல்லும் அப்பாவின் வார்த்தைகள் பொய் அல்ல.

தன் உடன் பிறந்த தம்பிக்காக தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு கைகடிகாரத்தின் மாடல் தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லி அவனுக்கு அதை பரிசளிக்கும் ஒரு அண்ணனின் பாசமொழியில் உள்ள பொய்யும் பொய்யில் அடங்காது.

அதாவது பிறரின் நலனுக்காக உண்மையை சொல்லாமல் இருப்பதோ அல்லது உண்மையை சற்று மாற்றிச் சொல்லி எதிராளியை மகிழ்விப்பதோ பொய்யில் வராது. ஆனால் நடந்த உண்மையையே மாற்றி அப்படி நடக்கவே இல்லை என சொல்லி பிறர்மீது பழிபோடுவதும், தான் தப்பிக்க நினைத்து மற்றவர்களை மாட்டிவிடுவதும்தான் அப்பட்டமான பொய்.

இதைத்தானே திருக்குறளும் சொல்கிறது:

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

நாம் பணத்தாலும், பொருளாலும் செய்கின்ற உதவிகளைவிட பல நேரங்களில் நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு மதிப்பு மிக மிக அதிகம்.

கோபத்தில் கத்திவிட்ட பிறகு நம்மிடம் இருந்து ‘சாரி, ஏதோ கோபத்தில் பேசிட்டேன். மனசுல எதையும் வச்சுக்காதே…’ என்ற கரிசனமான வார்த்தைகளுக்காக எத்தனை உறவுகளும் நட்புகளும் ஏங்கிக்கொண்டிருப்பார்கள் தெரியுமா?

ஏன் கத்திய நாம் கூட எதிராளியை புண்படுத்திவிட்டோமே என மனதுக்குள் புழுங்கிக்கொண்டுதான் இருப்போம், தவறு யார் மீதிருந்தாலும். நம் செயலுக்கான காரணத்தை எதிராளிக்கு புரியும்படி விளக்கிய பிறகுதான் கொஞ்சம் நிம்மதி அடைவோம்.

நீங்கள் விரும்பும் ஒரு நபரின் லைக்கோ அல்லது கமெண்ட்டோ உங்கள் ஃபேஸ்புக் பதிவுக்குக் கிடைத்துவிட்டால் அந்த நாளெல்லாம் சந்தோஷம்தான். மறுக்க முடியுமா?

சாதாரணமாகவே ஒரு சின்ன வார்த்தை, சிறிய விளக்கம், ஒரு சிரிக்கும் ஸ்மைலி, ஒற்றை வார்த்தை பாராட்டு மனித மனங்களை ஆற்றுப்படுத்தும் என்றால், உண்மையிலேயே மன அழுத்தத்தில் இருக்கும்போது நாம் கொடுக்கும் மிகச்சிறிய ஆறுதல்மொழி எத்தனை ஆறுதலாக இருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

நாம் சொல்லும் ஒரு வார்த்தை பிறர் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றுமேயானால் அந்த வார்த்தை அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே. பொருள் உதவியைவிட இன்று அதிகம் தேவையாக இருப்பது மனரீதியான ஆறுதலே.

போஸ்ட் கார்டுகளும், இன்லண்ட் கடிதங்களும் புழக்கத்தில் இருந்த காலகட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

அக்கா தங்கை. இருவருக்கும் ஓரிரு வயது வித்தியாசம் மட்டுமே இருக்கும். அநேகமாக  16, 17 வயதினர்களாக இருக்கலாம்.

அக்கா கொஞ்சம் அமைதியானவள். அதிகம் நண்பர்கள் கிடையாது. தங்கை கொஞ்சம் கலகலப்பானவள். நண்பர்கள் அதிகம்.

அப்பா அம்மாவுக்கு பணி நிமித்தம் வேறு ஊருக்கு மாற்றல் ஆகிறது. திடீரென வேறு ஊர் மாறியதில் தங்கை கொஞ்சம் அப்செட். நீண்ட நாள் நண்பர்களை விட்டு வந்தது,  புதிய பள்ளி சூழல் இப்படி தங்கை மனதளவில் சோர்வாகவே இருந்து வந்தாள். அவள் சிறுவர் பத்திரிகைகளுக்கு படம் வரைந்து அனுப்பும் வழக்கம் உள்ளவள். பெரும்பாலும் அவள் வரைந்து அனுப்புபவை பிரசுரம் ஆகும். ஊர் மாறியதில் அந்த வழக்கத்தையும் தொடராமல் விட்டுவிட்டாள்.

அக்காவுக்கு தங்கையின் சோர்வு வருத்தத்தைத் தந்தது.

ஒருநாள் தங்கைக்கு ஒரு போஸ்ட் கார்ட் வருகிறது. அதில் அவள் தங்கையின் ஓவியம் வரையும் திறமையைப் பாராட்டி அவள் நெருங்கிய பள்ளித்தோழி கடிதம் எழுதி இருந்தாள். ‘ஏன் இப்போதெல்லாம் உன் ஓவியம் பத்திரிகைகளில் வருவதில்லை… ஏன் வரைவதை விட்டுவிட்டாய்?’ என கேட்டு உரிமையாய் கடிந்துகொண்டிருந்தாள்.

இதைப் பார்த்ததும் தங்கை மனதளவில் மகிழ்ந்தது முகத்தில் பிரகாசமாக வெளிப்பட்டது. பழையபடி கலகலப்பானாள். ஓவியம் வரையத் தொடங்குகிறாள். பத்திரிகைகளுக்கு அனுப்ப ஆரம்பிக்கிறாள். தொடர்ச்சியாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவள் தோழியிடம் இருந்து கார்ட் வருவது தொடர்ந்தது.

அந்த போஸ்ட் கார்டுகளில் தோழியின் வீட்டு முகவரி இல்லை. பதில் கடிதம் எழுத முடியவில்லையே என வருந்தினாள்.

தங்கையின் மனச்சோர்வு அகன்றதில் அக்காவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனாலும் மனது  ‘பொய் சொல்லி விட்டோமோ’ என சஞ்சலப்பட்டது.

எதற்காக சஞ்சலம்?

தங்கையின் மனதை சரி செய்ய அவள் தோழி எழுதுவதைப் போல இத்தனை நாட்கள் போஸ்ட் கார்ட் எழுதியதே அவள் தானே?

இதில் வரும் அக்கா நான்தான் என்பதை யூகித்துவிட்டீர்கள் தானே?

நான் செய்தது பொய்யோ, புரட்டோ, ஏமாற்று வேலையோ கிடையாது. உண்மைக்குப் புறம்பானதும் இல்லை. ஒரு நல்ல விஷயத்துக்காக எடுத்துக்கொண்ட சிரத்தை. நோக்கம் சரியாக இருக்கும்வரை எதுவுமே தவறு கிடையாது. சட்டத்துக்கும், தர்மத்துக்கும், மனசாட்சிக்கும் விரோதமில்லாமல் செய்கின்ற செயல்பாடுகள் தவறே கிடையாது.

அம்மாவின் சமையலில் உப்பும் காரமும் குறைவாக இருந்தாலும் ‘சூப்பரா இருக்கும்மா’ என பாராட்டுவதும், அப்பா வாங்கிவந்த உடையின் கலர் நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் ‘சூப்பரா இருக்குப்பா, எனக்கு இந்த கலர் ரொம்பப் பிடிக்கும்பா’ என சொல்வதும், தாறுமாறாய் கிறுக்கி படம் வரையும் குழந்தையிடம் ‘ஆசம், என்ன ஒரு கிரியேட்டிவிட்டி’ என சொல்லி ஊக்கப்படுத்துவதும் பொய்யில் வருமா? சொல்லுங்கள். வராதல்லவா?

அதுபோல்தான் பிறர் மீதான அன்பின் காரணமாக சொல்லும் சின்ன சின்ன பொய்கள்கூட வாழ்க்கையை அழகூட்டும்.

எல்லை மீறாதவரை எல்லாமே பேரழகுதான்.

(புதிய தலைமுறை பெண் இதழில் நான் எழுதி வெளியான கட்டுரையில் ஒரு பகுதி)

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 26 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon