ஜம்முனு வாழ காம்கேரின் OTP-206: ஒரு சிறிய கேக் துண்டு பெரிதாய் என்ன செய்துவிடப் போகிறது?

பதிவு எண்: 937 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 206
ஜூலை 25, 2021

ஒரு சிறிய கேக் துண்டு பெரிதாய் என்ன செய்துவிடப் போகிறது?

எத்தனை கொரோனா வந்தால் என்ன, எத்தனை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினால்தான் என்ன, நம் மக்கள் மாறிவிடப் போகிறார்களா? என்ற ஆதங்கத்தை மீண்டும் ஏற்படுத்தியது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று.

கூட்டுக் குடும்பத்தில் நடக்கின்ற ஒரு வளைகாப்பு நிகழ்ச்சி. மிகவும் ஆடம்பரமாகவும் பாரம்பர்யமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. உற்றார், உறவினர், நண்பர்கள், ஊர் மக்கள் என அத்தனை உற்சாகத்துடன் நிகழ்ச்சி களைக்கட்டி இருந்தது. பாடகர்கள், நகைச்சுவை பேச்சாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் என ஏக தடபுடலான நிகழ்ச்சி ஏற்பாடுகள்.

எங்கள் குடும்பத்தில் என் பெற்றோர் இப்படித்தான் பார்த்துப் பார்த்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள். திருமணம், வளைகாப்பு என பெரிய நிகழ்ச்சிகள் மட்டுமல்ல.  நினைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் பிறந்த நாள், திருமண நாள், பூஜை, ஹோமம் ஏதேனும் ஒரு சாக்கு வைத்துக்கொண்டு விருந்தினர்களை அழைத்து தலைவாழை விருந்துக்கு ஏற்பாடு செய்வார்கள். சமையல் முழுக்க முழுக்க என் பெற்றோர்தான். நான் மற்ற ஏற்பாடுகளுக்கு உதவுவேன். அவ்வப்பொழுது ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் சமையலுக்கும் வருவேன். சிறிய நிகழ்ச்சி என்றாலும் புகைப்படம், வீடியோ,  எங்கள் குடும்ப யு-டியூப் சேனல் என  நான் அவற்றை ஆவணப்படுத்தி விடுவேன். எங்கள் குடும்பத்தில் யாருக்கு என்ன புகைப்படம் வேண்டுமானாலும் என்னிடம்தான் கேட்பார்கள்.

வயதில் மூத்த ஒரு சில பாட்டி தாத்தாக்கள் ‘என் பிள்ளைகளிடம் கூட எங்கள் புகைப்படங்கள் இத்தனை அருமையான போஸ்களில் இருக்காது. ஒருவேளை நாங்கள் போன பிறகு எங்கள் பிள்ளைகள் புகைப்படம் கேட்டால் நீதான் கொடுக்கணும்’ என நகைச்சுவையாக சொல்வார்கள். ஆனாலும் அதில் ஒரு வருத்தம் இழைந்தோடும்.

அதென்னவோ அவர்கள் சொல்வதைப் போல பெரும்பாலும் அவர்கள் வீட்டுப் பெரியவர்களின் தனிப் புகைப்படங்களுக்கு என்னைத்தான் அணுகுகிறார்கள். அவர்கள் வீட்டில் மாட்டியிருக்கும் பெரியவர்களின் புகைப்படங்கள் அவர்களுக்கென்னவோ அந்தப் பெரியவர்களின் ஞாபகார்த்தம். ஆனால் அவற்றைப் பார்க்கும்போது அவை எனக்கான ஞாபகார்த்தமாகவே தோன்றும். ஒவ்வொரு புகைப்படமும் என்னையும் சேர்த்தல்லவா அவர்களுக்கு நினைவூட்டும். அதனால் சொல்கிறேன்.

விருந்துக்கு வருபவர்களுக்கு காபி கொடுப்பதில் இருந்து அவர்கள் சாப்பிட்டு வெற்றிலை போடுவதுவரை அத்தனை சிரத்தை எடுத்து கவனிப்பார் என் அப்பா. சுவாமிக்கு பூ முதற்கொண்டு, வெற்றிலை, புதினா, கருவேப்பிலை, கொத்துமல்லி இப்படி எல்லாமே அம்மா வைத்த செடி கொடிகளில் இருந்துதான்.

வாழை இலையில்தான் சாப்பாடு. சாப்பிட்டு முடித்ததும் அனைவருக்கும் ‘மிளகோமசீரக’ தண்ணீர் ஒரு சிறிய டம்ளரில் வைப்போம். சாப்பாட்டில் முதலில் எப்படி பாயசமோ அப்படி சாப்பிட்டு முடித்ததும் ‘மிளகோமசீரக’ தண்ணீர். அதென்ன ‘மிளகோமசீரக’ தண்ணீர். மிளகு + ஓமம் + சீரகம் இவற்றை சம அளவில் எடுத்து புடைத்து வறுத்து அரைத்த கலவை. ஜீரணத்துக்கு மிக நல்லது. சாப்பாட்டில் யாருக்கேனும் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால் அதில் இருந்தும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

அதுபோல நாங்களும் குடும்ப நிகழ்ச்சிகள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நான் செல்வதற்கு நேரம் இல்லை என்றாலும் என் பெற்றோர் இருவரும் சென்று வந்துவிடுவார்கள்.  நான் நிகழ்ச்சி முடிவதற்குள் ஏதேனும் ஒரு நேரத்தில் சென்று கலந்துகொள்வேன்.

கொரோனா படுத்துகின்ற பாட்டில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல முடியவில்லை. யாரையும் வீட்டுக்கு விருந்துக்குய் வரச் சொல்லவும் முடியவில்லை.

‘ஆடின காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பார்கள். அந்த வரிசையில் விருந்து கொடுக்கும் கைகளையும் சேர்த்துக்கொண்டு ‘விருந்து கொடுக்கும் கைகளும் சும்மா இருக்காது’ எனலாம்.

அந்த அளவுக்கு என் பெற்றோருக்கு குறிப்பாக அப்பாவுக்கு மனசு முழுக்க ஏக்கம். ஏன் அம்மாவுக்கு கிடையாதா ஏக்கம் என கேட்க வேண்டாம். அப்பா கொஞ்சம் சென்சிடிவ். அம்மா கொஞ்சம் பிராக்டிகல். சூழலுக்கு ஏற்ப மனதை திடமாக வைத்துக்கொள்வார். அந்த நேரத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதுதான் நிதர்சனம் என்பதை உணர்ந்து தைரியமாக செயல்படுவார்.

விருந்து என்பது வெறும் உணவு மட்டுமல்ல!
வயிற்றை நிரப்பும் விஷயமும் அல்ல!
பகையை முறிக்கும் ஆற்றல் பெற்றது!
நட்பை வளர்க்கும் சக்தி வாய்ந்தது!
உறவுமுறைகளை பின்னிப் பிணைக்கும் பாலம்!
தலைமுறைகளை இணைக்கும் உறவுச் சங்கிலி!
தலைமுறை இடைவெளியை குறைக்கும் மேஜிக்!

இதுதான் விருந்து குறித்த எங்கள் பார்வை.

சரி சரி சொல்ல வந்த விஷயத்தைவிட்டு எங்கோ சென்றுவிட்டேன். விருந்தளிப்பது குறித்து பேசுவதே எத்தனை சுவாரஸ்யமாக இருக்கிறது பாருங்கள்.

இதுபோன்ற மனநிலையில் இருந்ததால் நேற்று தொலைக்காட்சியில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அப்பாவும், அம்மாவும் ஒன்றிப் போயினர். ஏதோ நம் வீட்டில் நடக்கின்ற நிகழ்ச்சியைப் பார்ப்பது போன்ற பரவசம். நான் லேப்டாப்பில் வேலை செய்துகோண்டே பார்த்தேன்.

எல்லாம் சரிதான். நன்றாகவே இருந்தது. ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுத்தல். அது சிறிய விஷயமாக இருக்கலாம். இதில் என்ன இருக்கிறது என்று உங்களில் பலர் நினைக்கலாம். ஆனால் அதில்தான் நாம் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

அது உறுத்தல் இதுதான்.

செஃப் தாமு அவர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு மாங்காய் போட்டு ஒரு பதார்த்தம் செய்து காண்பித்து, அதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு ஸ்பூன் வைத்துக் கொடுக்கிறார்.

கர்ப்பிணிப் பெண்ணும் அந்த பதார்த்தத்தை ஸ்பூனினால் எச்சில் செய்து சாப்பிட்டு ‘சூப்பர்… சூப்பர்’ என பாராட்டிவிட்டு அதை விழா மேடையில் இருந்த தன் வீட்டுப் பெண்களுக்குக் கொடுத்து சாப்பிடக் கொடுக்கிறார். மற்ற பெண்களும் அதே ஸ்பூனினால் அந்த பதார்த்தத்தை வாயில் எச்சில் செய்து சாப்பிட்டு ருசி பார்க்கிறார்கள்.

ஏன் இப்படி? ஒவ்வொருவரும் ஸ்பூனினால் உள்ளங்கையில் எடுத்து சுவைத்துப் பார்ப்பதைப் போல செய்து, கைகளை டிஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொள்வதைப் போல ஏற்பாடு செய்யலாமே?

இந்த நிகழ்ச்சி என்றல்ல, எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இப்படித்தான். ஒருவர் சாப்பிட்டு எச்சில் செய்த ஸ்பூனினால் மற்றவர்களும் ருசி பார்ப்பார்கள். ஏன் சிறப்பு விருந்தினர்கள் கூட அப்படியே தங்களுக்குள் ஒரே ஸ்பூனைப் பயன்படுத்தியே ருசிபார்ப்பார்கள்.

இது பார்ப்பதற்கு சிறிய விஷயமாக இருக்கலாம். ஆனால் இதில்தானே சுகாதாரம் உள்ளது.

சுத்தம் சுகாதாரம் குறித்து வயது வித்தியாசமின்றி பலரும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாமே?

தொலைக்காட்சியைப் பார்த்து மக்கள் மாறுகிறார்களா, மக்களைப் பார்த்து நிகழ்ச்சிகளில் இதுபோன்ற காட்சிகளை வைக்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் எங்கு பிறந்த நாள் கேக் வெட்டினாலும் ஒரே ஒரு கேக் துண்டு  அத்தனை பேர் வாயிலும் சென்று வருவதைப் பார்க்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

சுத்தம் சுகாதாரம் குறித்து பெரிய அளவில் எல்லாம் பேச வேண்டியதில்லை. இதுபோன்ற சிறிய விஷயங்களில் அக்கறை எடுத்துக்கொண்டாலே மாற்றம் உண்டாகும்.

இந்தப் பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. சுத்தமும் சுகாதாரமும் கொரானாவுக்காக மட்டும் அல்ல, எப்போதுமே எல்லா காலத்துக்கும் அவசியமான ஒன்று என்பதை உணர வைக்கவே.

சுத்தமாக இருப்போம், சுகாதாரமான சூழலைப் பேணுவோம், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம். காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய இந்த பாலபாடத்தை நாமும் கற்று நம் எதிர்கால சந்ததியினருக்கு இப்போதில் இருந்தே(தாவது) தொடங்கி வைப்போம்.

இதெல்லாம் என்ன பெரிய விஷயமா என நினைக்காதீர்கள்.இதுதான் பெரிய விஷயம் இன்று!

காலம் நம்மை வாய் மூடி வாழும் சூழலுக்குக் கொண்டு வைத்துள்ளதில் இருந்தே இது எத்தனை பெரிய விஷயம் என்பதை உணர்ந்துகொள்வோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 889 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon