பதிவு எண்: 938 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 207
ஜூலை 26, 2021
நல்லவராக வாழ்ந்தால் கஷ்டப்பட வேண்டுமா?
ஒருவர் நல்லவர். நேர்மையானவர். ஒழுக்கமானவர். அன்பானவர். பண்பானவர். யாருக்கும் எந்த தீங்கையும் நினைத்துக்கூட பார்க்காதவர். ஆனாலும் அவர் வாழ்க்கையில் அத்தனை சுபிக்ஷமாக இருக்கவில்லை. சுபிக்ஷம் என்றால் வேலையில் ஏற்றம். மனைவியுடன் / கணவனுடன் கருத்து ஒற்றுமை. பிள்ளைகளிடம் நற்மதிப்பு இப்படி.
காரணம் என்னவாக இருக்கும்?
ஒருவர் தான் பார்க்கின்ற வேலையில் அல்லது செய்கின்ற வேலையில் வெற்றி பெற வேண்டுமானால் அவரது பணி தொடர்பான நல்ல மேம்பட்ட அறிவை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். அது சம்மந்தப்பட்ட தொழில்நுட்பத்தை அவ்வப்பொழுது கற்று அப்டேட் செய்துகொண்டிருக்க வேண்டும்.
ஒருவர் மனைவியுடன் / கணவனுடன் ஒற்றுமை இல்லை என்றால் அவரது ஆட்டிடியூடில் எங்காவது தவறு இருக்கும். ஏதேனும் ஒரு புள்ளியில் அவரது அடிப்படை குணம் குடும்பத்தில் தன் இணையை எங்கேயோ காயப்படுத்தி அது கண்களுக்கே தெரியாமல் தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டே வரும்.
பிள்ளைகளிடம் நற்மதிப்பு என்பது அவர்களைப் புரிந்துகொள்வது, அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பது, அவர்களுக்காக நேரம் செலவழிப்பது, அவர்கள் புரிந்துகொள்ளாமல் முரணாக நடந்துகொள்ளும்போதும் பொறுமையாக எடுத்துச் சொல்லி மாற்றங்களுக்குக் காத்திருப்பது.
இப்படி ஒவ்வொரு விஷயத்தின் வெற்றிக்கும் ஒரு காரணியோ அல்லது பல காரணிகளோ இருக்கலாம். அதை கண்டறிந்து அதை சரி செய்துகொண்டால் அந்த பாதை தெளிவாகும். அவ்வளவுதான்.
அதற்கும் நல்லவர், வல்லவர், பண்பாளர், அன்பாளர், கொடையாளர் என்ற பட்டங்களுக்கும் ஒரு துளியும் சம்மந்தமே இல்லை.
இவை தனிமனிதனின் அடிப்படை குணாதிசயம் சம்மந்தப்பட்டது. உணர்வுகளின் அடிப்படையிலானது. சுருங்கச் சொன்னால் அகம் சம்மந்தப்பட்டது.
ஆனால், வாழ்க்கையில் வெற்றி என்பது அவரது உழைப்பு, ஈடுபாடு, அறிவாற்றல், புரிந்துகொள்ளும் தன்மை போன்ற புற காரணிகளால் கட்டமைக்கப்பட்டது. திறமை எனும் செயல் ரீதியிலானது.
அதனால்தான் ‘நல்லவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறார்கள், கெட்டவர்கள் நன்றாக வாழ்கிறார்கள்’ என்பதுபோன்ற பொதுவாக ஆதங்கங்கள் நிலவுகின்றன.
‘நல்லவர்’ உணர்வுகளின் அடிப்படையிலான குணாதிசயத்தில் சிறப்பாக செயல்படலாம். ‘கெட்டவர்’ திறமையின் அடிப்படையிலான விஷயங்களில் சிறப்பாக செயல்படுபவராக இருக்கலாம்.
உணர்வு ரீதியாகவும், செயல் ரீதியாகவும் சிறப்பாக விளங்கும் ஒருவருக்கு வாழ்க்கை சொர்க்கம்தான். ஆனால் பெரும்பாலும் இரண்டில் ஒன்றுதான் உச்சமாக இருக்கிறது. விதிவிலக்காக ஒருசிலர் வாழ்கிறார்கள். அவர்களை உலகத்தால் கொண்டாடப்படுகிறார்கள்.
‘கெட்டவர்’ என சமுதாயத்தால் மறைமுகமாக முத்திரை குத்தப்படுபவர்கள் பணியில் நேர்மை இல்லாமல் இருக்கலாம். லஞ்சம் வாங்குபவராக இருக்கலாம். வேலை அல்லது தொழிலில் தர்மம் இல்லாமல் பிறரை வீழ்த்தி அவர்கள் முதுகில் ஏறி உச்சத்துக்கு சென்றவராக இருக்கலாம். தன்னை எப்பாடுபட்டாவது பணம், பதவி, புகழ் இவற்றுக்காக உயர்த்திக்கொள்வதில் வல்லவராக இருக்கலாம். இவர்கள் இந்தத் திறமையை நேர்வழியில் பெற முயற்சித்திருந்தால் ‘நல்லவர்’ என்று முத்திரைக் குத்தப்படுபவர்களின் அத்தனை குணாதிசயங்களும் தானாகவே அவர்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும். ஆனால் செய்ய மாட்டார்கள்.
‘நல்லவர்’ என முத்திரைக் குத்தப்படுபவர்கள் தங்கள் நல்ல குணாதிசயங்களினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி கிடைத்துவிடும் என்று எண்ணி வாழ்க்கையின் சூட்சுமத்தை கொஞ்சமும் கற்காமல் இருக்கலாம். அதனால் ‘கெட்டவர்’ என்ற முத்திரை குத்தப்படுபவர்கள் பெறுகின்ற வளர்ச்சிகளை பெறாமல் இருக்கலாம். சூட்சுமம் என்றால் ஏமாற்று வேலை என்று பொருள் அல்ல. நான் குறிப்பிடும் சூட்சுமம் என்பது மனிதர்களைப் புரிந்துகொள்ளுதல், சூழலுக்கு ஏற்ப கொஞ்சம் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் வாழ்தல், ‘When in Rome, Do as the Romans Do‘ என்ற லாஜிக்கை பின்பற்றுதல் இப்படியான நல்ல விஷயங்களைத்தான். இந்த விஷயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இவர்களும் வாழ்க்கையில் மற்றவர்கள் பார்வையில் சுபிக்ஷமாக வாழலாம். ஆனால் பெரும்பாலும் செய்ய மாட்டார்கள்.
வாழ்க்கை இப்படித்தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. குணத்தைக் காட்டும்போது செயலால் தோற்றுப் போகும் நிலை. செயலைக் காட்டும்போது குணத்தால் வீழ்ச்சி அடையும் சூழல். இரண்டையும் சமமாக பாவித்து வாழும் கலை அறிந்தவர்கள் அல்லது பயிற்சி எடுத்தவர்கள் பாக்கியசாலிகள்.
அந்த பாக்கியத்தை அடைவது சுலபம்தான். ஆனால் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்க்கைப் பாதையில் மேம்போக்காக அவசர கதியில் ஓடாமல், ஓடும் நம்மையும் ஓடுகின்ற நம் பாதையையும் நாமே உன்னிப்பாக உற்று நோக்க ஆரம்பித்து, கண்காணிக்கத் தொடங்கினால் அந்த பெரும்பாக்கியத்தை அடையும் வழியை தெரிந்துகொள்ள முடியும்.
முயற்சிப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP