பதிவு எண்: 940 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 209
ஜூலை 28, 2021
காதல் தோல்வி அடைந்தவர்கள் அதிகம் சாப்பிடுவது ஏன்?
மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள் என்ற கருத்து உண்டு. அது உண்மையும் கூட. விரும்பியவர்களின் மரணம், காதல் தோல்வி, வேலை கிடைக்காத விரக்தி, பணியில் விரும்பிய ஏற்றம் கிடைக்கமால் போகுதல் இப்படி ஏதேனும் ஒரு காரணம் மன அழுத்தத்துக்கு. ஆனால் பலி ஆவது என்னவோ வயிறுதான். கிடைத்ததை எல்லாம் சாப்பிடத் தோன்றும். அதுவும் அளவுக்கு அதிகமாய் உள்ளே செல்லும். விளைவு அஜீரணக் கோளாறு, உடல் எடை கூடுதல் மற்றும் அதன் தொடர்பாய் இணை நோய்கள்.
அதுவே நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆனந்தமாய் இருக்கிறீர்கள். சந்தோஷத்தில் திளைக்கிறீர்கள் என்றால் உங்கள் கண் முன் உங்களுக்குப் பிடித்த சாப்பாடுப் பொருட்கள் இருந்தாலும் அவற்றை உங்களால் முழுமையாக வழக்கமான அளவுடன் கூட சாப்பிட முடியாது. கொறிக்க மட்டுமே முடியும் அல்லது அளவாக மட்டுமே சாப்பிட முடியும்.
ஆனால் உண்மையில் நாம் சந்தோஷமாக இருக்கும்போது நிறையவும், வருத்தமாக இருக்கும்போது குறைவாகவும் சாப்பிட வேண்டும். ஆனால் இயற்கை அதற்கு நேர்மாறாக அல்லவா நம்மை தயார்படுத்துகிறது.
இதன் பின்னால் ஓர் உளவியல் உண்மை உள்ளது.
சாப்பாட்டுக்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு தொடர்பு உண்டு. சாப்பாடு என்பது சாப்பிடுபவர்கள், சமைப்பவர்கள் இரு சாராரையும் சார்ந்ததே.
சமைப்பவர்கள் மன மகிழ்ச்சியுடன் சமைக்கும்போது அதன் சுவையே அலாதியாக இருக்கும். காரணம் அதில் கூடுதலாக அன்பு என்ற சுவை கூட்டுப் பொருள் சேர்ந்துவிடுவதே காரணம்.
மன வருத்தத்துடன் சமைக்கும்போது வழக்கமான உப்பு, புளி, காரம் போட்டிருந்தாலும் சுவை எங்கேயோ காணாமல் போய்விடும். காரணம் மகிழ்ச்சி என்ற சுவை கூட்டுப்பொருள் சேர்க்கப்படாமல் விடுபடுவதே காரணம்.
அதனால்தான் சொல்கிறேன் சாப்பாடு என்பது வெறும் சாப்பாடு மட்டுமல்ல. நம் உணர்வுகளுடன் சம்மந்தப்பட்டது. அது சமைக்கும் போதாகட்டும் அல்லது சாப்பிடும் போதாகட்டும்.
குழந்தைகளிலேயே இரண்டு பிரிவினர்களை பார்க்கலாம்.
ஒரு சில குழந்தைகள் விருந்து விசேஷங்களுக்குச் சென்றால் ஏதோ காணாததைக் கண்டாற்போல் தின்பண்டங்களை அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள். சில குழந்தைகள் அமைதியாக தேவையானதை தங்களுக்கு விருப்பமானதை மட்டும் அளவாக வாங்கி சாப்பிடுவார்கள்.
காரணம் இதுதான், பாதுகாப்பு உணர்வில்லாத குழந்தைகள், வீட்டில் சுதந்திரமாக சாப்பிட அனுமதிக்கப்படாத குழந்தைகள் பொதுவெளியில் கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளுவார்கள். வீட்டில் சுதந்திரமாக விரும்பியதை சாப்பிட அனுமதி பெற்றிருக்கும் குழந்தைகள் பொதுவெளியில் அமைதியாக சாப்பிடுவார்கள். இதுதான் வித்தியாசம்.
இங்கு உதாரணத்துக்காக குழந்தைகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். பெரியவர்களையும் இந்த இரண்டு பிரிவின் கீழ் கொண்டுவர முடியும்.
இது இரண்டைத்தவிர மற்றொரு பிரிவினரும் உண்டு. அதாவது, சிறு வயதில் பொருளாதாரத்தில் பின் தங்கியதாலோ அல்லது வீட்டில் பொறுப்பாக கவனிக்க தாய் / தந்தை இல்லாததாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ விரும்பிய நேரத்தில் விரும்பிய சாப்பாட்டை சாப்பிட முடியாமல் கிடைத்த நேரத்தில் கிடைத்ததை சாப்பிடும் பழக்கத்துக்கு ஆளானவர்கள் கூட இப்படித்தான். பொதுவெளியில் ‘பொதுவெளி’ என்பதை மறந்து தான் சாப்பிடுவதை நான்கு பேர் பார்ப்பார்கள் என்ற ஸ்மரணை இல்லாமல் அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்.
மனதுக்குள் பாதுகாப்பு உணர்விருந்தால் நாம் சாப்பிடும் சாப்பாடும் சரியான அளவில் உள்ளே செல்லும், இல்லை என்றால் இப்படித்தான் ‘தாறுமாறு தர்பார்தான்’.
இதனால்தான் காதல் வயப்பட்டவர்கள் பசியே இல்லை என்று சொல்லிக்கொண்டு குறைவாகவோ அல்லது அளவாகவோ சாப்பிடுவதையும், காதலில் தோல்வி அடைந்தவர்கள் அகோரப் பசியில் அள்ளி அள்ளி சாப்பிடுவதையும் காண்கிறோம்.
காதல் தோல்வியின் போது பாதுகாப்பு உணர்வு காணாமல் போகிறது. அனாதை ஆகிவிட்டதைப் போல தவிப்பார்கள். அதுவே காதலிக்கும்போது காதல் வாழ்க்கை அழகாக நகர்ந்துகொண்டிருக்கும்போது சொல்லணா பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது.
இதுதான் சாப்பிடும் சாப்பாட்டின் அளவையும் நிர்ணயிக்கிறது.
சினிமாக்களில் கூட இந்த உளவியலை அழகாகக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். ‘ப்ரேக் அப்’ ஆனவர்களும், காதல் தோல்வி அடைந்தவர்களும் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ‘பசிக்கிறது, சாப்பிட ஏதாவது இருக்காம்மா’ என கேட்டு தட்டு நிறைய சாதம் போட்டு, வண்டி வண்டியால் குழம்பை ஊற்றி அள்ளி அள்ளி சாப்பிடுவதாகவும், சாப்பிடும்போதே துக்கம் தாங்காமல் வெடித்து அழுவதைப் போலவும் காண்பிப்பதை பார்த்திருப்போம்.
காதல் தோல்வி அடைந்தவர்கள் அந்த உணர்வின் தாக்கத்தில் இருக்கும்போது, அதாவது அந்த மன அழுத்தத்தில் இருக்கும்போது, அதிகம் சாப்பிடுவார்கள். அதற்காக காதல் தோல்வி அடைந்தவர்கள் எல்லோரும் வாழ் நாள் முழுவதும் அதிகம் சாப்பிடுவார்கள் என்ற கோணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஆக, நம் பாதுகாப்பு உணர்வுக்கும் சாப்பாட்டுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு. பாதுகாப்பு உணர்விருந்தால் அன்பு, பாசம், கருணை இப்படி நம் சாத்வீக குணங்கள் முன் வரிசையில் வந்து அமர்ந்துகொண்டு நம்மை வழிநடத்தும். மனோரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட தேவை பாதுகாப்பு உணர்வுதான்.
இதுவரை பாதுகாப்பு உணர்வையும், சாப்பாட்டையும் இந்தக் கோணத்தில் பார்க்கவில்லை எனில் இனி பார்க்கத்தொடங்குங்கள்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP